அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Sunday, November 30, 2014

ஒரே நாளில் முப்பது லட்சம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை

தஞ்சாவூர்: ஒரே நாளில் முப்பது லட்சம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை செய்திருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம்.



'பசுமை தஞ்சை' என்கிற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரான சுப்பையன் இந்த மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சி செய்திருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் மரங்கள் குறைந்து போனதால் மழையளவும் குறைந்திருப்பதாக எண்ணி இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஒரு ஊராட்சிக்கு குறைந்தது ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டிருக்கிறது. இதில் தேக்கு, புன்னை, குமுளி தேக்கு, ரோஸ் வுட் மற்றும் பூச்செடிகள் நடப்பட்டிருக்கின்றன.



தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் பழஞ்சூர் ஊராட்சியில் தொகுதி எம்.எல்.ஏ.வான ரெங்கராஜன், ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் பஞ்சாயத்து அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். காலை பத்து மணிக்கு தொடங்கி இந்த திட்டம் பனிரெண்டு மணிக்கு முடிவடைந்தது.

வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: கே.குணசீலன் 

Thanks to: Vikatan EMagazine 
 http://news.vikatan.com/article.php?module=news&aid=35528&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

Saturday, November 29, 2014

மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் !?

ஒரு காலத்தில் கிராமங்களில் மட்டுமல்லாது மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பெரிய ஊர்களிலும் நகரங்களிலும் கூட ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் வளர்ப்பு பிராணிகளாய் ஆடு, பசுமாடு, எருமைமாடு, கோழி, சேவல், வாத்து, வான்கோழி, கிண்ணிக்கோழி, பச்சைக்கிளி, மைனா, முயல் என வகைவகையான பிராணிகள் பறவை இனங்களென்று வளர்க்கப்பட்டு வந்தது. அந்த பிராணிகளுக்கும் ஒரு பாதுகாப்பாகவும், புகழிடமாகவும் இருந்தது. இந்த வாயில்லா ஜீவன்களை வெறும் வளர்ப்பு பிராணிகளாய் மட்டும் கருதாமல் அந்த வீட்டின் உறுப்பினர்களில் ஒருவர் போல நினைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டது.

ஒரு நேரத்தில் தெருப்பகுதியை கடந்து செல்லும்போது ஏதாவது ஒரு வளர்ப்புப் பிராணிகளின் சப்தம் நம் செவிகளுக்கு கேட்கும். ஆளில்லாத வீடுகளிலும் இந்தப் பிராணிகளின் சப்தத்தில் வீட்டில் ஆள் இருப்பது போலத்தோன்றும்.

இந்தப் பிராணிகளுக்கும் தன்பிள்ளைகளுக்கு பெயர் வைத்து அழைப்பது போல் பெயர் வைத்து அழைப்பதும் உண்டு. காலை மாலை என உணவுகளையும் மறக்காமல் கொடுத்து தம் மனிதாபிமானத்தை ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் செய்து அந்தப் பிராணிகளிடம் அன்பு காட்டி வந்தனர். இன்னும் சொல்லப் போனால் கிளி, மைனா போன்ற சில பறவை இனங்கள் நாம் பேசும் மொழியினை கூர்ந்து கவனித்து தினமும் செவிகொடுத்து கேட்டு வருவதால் நம்மோடு சேர்ந்து அப்பிராணிகளும் பேசுவதை கேட்க இனிமையாய் இருக்கும்

இந்த செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்க்கென்று வீட்டுப் பின்புறப் பகுதிகளில் மாட்டுக் கொட்டகை, ஆடு கட்டிப் போடுவதற்கென்று தனி இடம், கோழியை பாதுகாக்க கோழிக்கூடு, மற்ற பறவைகள் கிளிகளுக்கென தனி கூண்டு அமைத்தும் பாதுகாக்கப்பட்டு வந்தன

சில வளர்ப்பு ஆடு மாடுகள் காலையில் வீட்டை விட்டுச் சென்றால் சுதந்திரமாக சுற்றித் திரிந்து விட்டு மாலைப் பொழுது ஆனதும் தனது சொந்தவீட்டுக்குத் திரும்பி வருவது போல வீடு வந்து சேர்ந்துவிடும்.. வீட்டில் வளர்க்கும்போது அந்தப் பிராணிகளுக்கு பாதுகாப்பும் சுதந்திரமும் இருந்தன. அப்பகுதிகளில் வசிப்போருக்குக் கூட இன்னார் வீட்டு மாடு, ஆடு என அடையாளம் அறிந்து கொள்வதால் யாரும் அந்த வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவதில்லை. ஆகவே அதற்கு அதிகப்பாதுகாப்பாக இருந்தது.

ஐந்தறிவைக் கொண்ட படைப்பினங்களாக இருந்தாலும் தமக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களிடம் அன்பொழுக பழகிவரும் பிராணிகளாய் இருந்தது. நன்றியை தன் சமிக்கையாலும், சைகையாலும் தனக்கே உரித்தான சப்த ஒலியாலும் காண்பித்து வந்தது.

உதாரணத்திற்கு சொல்லப் போனால் அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது வீட்டிற்குள் வந்தால் தனது குரலை உயர்த்தி தனக்கே உரித்தான ஓசையை எழுப்பி நம்மை உஷார் படுத்திவிடும். விஷ ஜந்துக்கள் ஏதும் தமது கண்களுக்கு தென்பட்டாலும் சரி, இரவில் திருடர்களோ, மற்ற ஏதாவது விபரீத நிகழ்வுகள் நடந்தாலோ இந்த வளர்ப்புப் பிராணிகள் எழுப்பும் சப்தத்தினால் தான் அறிந்திட முடியும்.

இப்படி எத்தனையோ வகையில் நமக்கு பக்க துணையாக இருந்து வந்த இந்த செல்லப் பிராணிகளின் நிலைமை இப்போது பரிதாபத்திற்க்குரியவையாக மாறிவருகின்றது. நாளுக்கு நாள் வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இந்தப் பிராணிகளை இப்போது வீட்டில் வளர்ப்பதை அசிங்கமாக கூட கருதுகின்றனர். . நாகரீகத்தின் முன்னேற்றத்தில் மூழ்கியிருக்கும் இந்தக் காலத்தில் இத்தகைய பிராணிகளை வளர்க்க இப்போது அதிகபட்சம் அக்கறை காட்டுவதில்லை. யாரும் விரும்புவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கின்றது.

ஒருகாலத்தில் நமக்கு உதவியாகவும், துணையாகவும் இருந்த இந்தச் செல்லப் பிராணிகளை மீண்டும் வளர்க்கத்துவங்குவோம். அதற்கும் வாழ்வளிப்போமாக !!!

Thanks to News Source:
http://nijampage.blogspot.ae/2014/02/blog-post_26.html

அதிரை மெய்சா 

பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயியை மதிக்க தவறிவிட்டனர்



புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது.

தனது 19-வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார்.

100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார்.
சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார். மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4-வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
 
இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை. ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த செய்தியை யாருமே வெளியிடவில்லை. விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர்நாடி. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா, இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக விருது வாங்கியவர்களை எல்லாம் முன்னிலை படுத்துபவர்கள், விவசாயியை மதிக்க தவறிவிட்டனர்.

பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச்சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம் இரண்டு தினங்களுக்கு முன்பே, தினசரிகளில் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின் பெயர் இடம் பெறவில்லை. பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம் அவரை அழைத்து பாராட்டுகிறோம்'' என்று சொன்னவர்கள், அதன்படியே சிறப்பாக பாராட்டியும் உள்ளார்கள்.

நடிகையின் தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய எந்த வார இதழும் இச்செய்தியை வெளியிடவில்லை.. ஒருவேளை தொப்புளைவிட விவசாயம் தரம் தாழ்ந்ததாக நினைத்திருக்கலாம். இதுவே ஒரு சினிமா நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் என்றால் எத்தனை குடம் பாலாபிசேகம், வானுயர கட்டவுட்டுகள், வெடி என ஊரையே அமர்க்களப்படுத்தி இருப்பார்கள் ....

Thanks to News Source:
https://www.facebook.com/photo.php?fbid=847270015332495&set=a.339083936151108.77348.100001485127251&type=1

மண் வளத்தை பாதுகாக்க - நீர் ஆதாரத்தை பெருக்க அதிரையில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

தமிழக முதல்வர் மண் வளத்தைப் பாதுகாக்கவும், நீர் ஆதாரத்தைப் பெருக்கவும் சிறப்பான முறையில் திட்டங்கள் செயல்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை வளத்தினை பெருக்கும் நோக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இன்று மாவட்டம் முழுவதும் மரம் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன் படி இன்று அதிரையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இவற்றை அதிரையின் முக்கிய பகுதிகளில் நடப்பட்டு வருகிறது.

இன்று காலை அதிரை பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, அரசு மருத்துவனையின் மருத்துவர்கள், வார்டு உறுப்பினர்கள் சேனா மூனா ஹாஜா முகைதீன், அப்துல் லத்திப், சிவக்குமார், முத்துக்குமார் உள்ளிட்ட ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

Friday, November 28, 2014

[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !

அண்மையில் தஞ்சாவூரில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் சார்பில் காவிரி டெல்டாப் பகுதிகளில் இருந்து மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கருத்தரங்கமும் குறுந்தகடுக் காணொளி நிகழ்வும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தின் வாழ்வாதாரத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒரு  நிகழ்வு பற்றிய இந்த முக்கியமான கருத்தரங்கில் பார்வையாளர்களாக  பங்கு பெரும் வாய்ப்பு எனக்கும் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுக்கும் கிடைத்தது.

அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அறிஞர்  பெருமக்களால் பேசப்பட்ட கருத்துக்களின் தொகுப்பை இங்கு பகிர்வது அவசியம் என்று நினைக்கிறேன். ஒரு சம்பிரதாயத்துக்காகக் கூட  பகிர்வதில்  மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூட சொல்ல முடியாத சோகம் இந்தப் பேசுபொருளில் அடங்கி இருக்கிறது.   காரணம் இந்தத் தொடரில்  பகிரப்படும் செய்திகள்  நம்மால் சரியாக புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில் நமது மண்ணையும் அதன் மாண்பையும் காதலிக்கும் நாம் மகிழவே முடியாது.

முதலாவதாக,  இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்கள்- அங்கே கருத்து மழை பொழிந்தவர்கள் -  அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற மரியாதைக்குரிய மூத்த பொறியாளர்கள் ஆவார்கள். சுத்தமான கரங்களுடன் பல ஆண்டுகள் அரசுப்பணியில் – பொதுப்பணித்துறையில் -  பணியாற்றி ஒய்வு பெற்று அவர்களது ஆண்டாண்டுகால அனுபவங்களை அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட விதத்தைப் பாராட்டுவது ஒரு புறமிருந்தாலும்,   ஒய்வு ஊதியம் பெற்று வாழ்ந்து வரும் அவர்கள்,  தங்களின் சொந்தப் பணத்தைத் திரட்டி இப்படி ஒரு கருத்தரங்கை தஞ்சாவூரிலும் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன் திருவாரூரிலும் வெற்றிகரமாக விளக்கமாக நம்மை எதிர் நோக்கி இருக்கும் ஒரு அபாயத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் நடத்திய அவர்களின் சமூக அக்கறை மிகுந்த நல்ல எண்ணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘உண்டாலம்ம இவ்வுலகம் ‘ என்கிற புறநானூற்று வரிகளுக்கொப்ப இப்படிப்பட்ட நல்லவர்களால்தான் இந்த உலகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இந்தக் கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் யாவும் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த திரு. கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

இந்த விழிப்புணர்வுப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுள் பொறியியல் அறிஞர்களான திரு. அ. வீரப்பன், திரு.ந. கைலாசபதி, திரு. மு. மூர்த்தி ஆகியோர் இன்றியமையாதவர்களாவார்கள். இவர்களுடன் திரு. பரந்தாமன் அவர்களின் ( திரு. பரந்தாமன் அவர்கள் அதிரை செக்கடிக் குளத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆலோசனை நல்கியவர்)   ஒத்துழைப்பையும் நாம் குறிப்பிட்டு பாராட்டியாக வேண்டும்.

குடுகுடுப்பைக்காரன்கூட குத்தாட்டம் போட்டு விளம்பரம் தேடும் இக்காலத்தில்,  வெளியே தெரியாமல் ஒரு நல்ல பணியில் தங்களுடைய முதிய வயதில் தங்கலை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர்களையும் இவர்களது அணியைச் சேர்ந்த அனைத்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினரையும் நாம் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த இடத்தில் இந்த சங்கத்தினர் பற்றி  ஒரு சில தகவல்களையும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இதே தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம் ஏற்கனவே முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு நீதி மன்றங்களில் நடை பெற்ற காலங்களில் எதிர்த்து வழக்காடிய கேரள அரசின் முகமூடியைக் கிழித்தவர்கள் என்பதையும் நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பல தொழில் நுணுக்க விபரங்களை வெளியிட்டு நீதி மன்றங்களுக்கே வழிகாட்டிகளாகத் திகழும் வண்ணம் பல கருத்தரங்கங்களையும் குறுந்தகடுகளையும் வெளியிட்டு விழிப்புணர்வூட்டினர். மூத்தபொறியாளர்கள்  அவர்களுடைய பரப்புரைகளில் எடுத்துவைத்த கருத்துக்களைத் தாங்கித்தான் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப் பட்டு இன்று 142 அடிகள் தண்ணீர் தடையின்றி தேக்கப்பட்டு தமிழகத்தின் தேனி மற்றும் மதுரை மாவட்டங்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடின.  கடந்த வெள்ளிக் கிழமை,  அந்த அணையைச் சுற்றி 142 பானைகளில் சர்க்கரைப் பொங்கல் பொங்கக் காரணமானவர்கள் இவர்கள்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்- அதற்கான தீர்வுகள் பற்றிய ஆய்வினையும் ஒரு குறும்படத்தையும் இந்தக் குழுவினர் ஆய்ந்து அளித்தனர். வெறும் கோஷமும் வேஷமுமாகப் போன காவிரிப் பிரச்னையின் உள்ளார்ந்த உண்மைகளை தோல் உரித்துப் போட்டார்கள் இவர்கள்.

சேதுக்கால்வாய்த்திட்டத்தின் வாயில் அரசுகள் மண்ணை அள்ளிப் போட்டபோதும் அந்தத்திட்டம் அனைவருக்கும் பயனளிக்கும் திட்டமென்று ஆய்ந்து அறிக்கை தந்து அந்த அறிக்கையை கையேடாகவும்  வெளியிட்டது இந்த மூத்தோர் அமைப்பு.

தேசிய நீர்க் கொள்கையின் தீங்குகளைப் பட்டியலிட்டு அந்தக் கொள்கை எதிர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டறிக்கை முதலியவற்றை வெளியிட்டு தமிழ் மக்களிடையே தேவையான விழிப்புனர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது இந்த ‘கைம்மாறு வேண்டாத கடப்பாடு ‘ உடைய  அமைப்பு.

ஆகவே  அறிவார்ந்த ஆன்றோர் அங்கம் வகிக்கும் இந்த  அமைப்பு இத்தகைய அரும்பணிகளைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

அதே வகையில்தான் காவிரி பாயும் கன்னித்தமிழ்நாட்டை – காவிரி பாயும் தஞ்சை வளர் மண்ணை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து இந்த வயதானவர்கள் வரிந்து கட்டி இருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட விழிப்புணர்வுக் கருத்துக்களை நாமும் அனைவருடனும் பகிர்வது நமது வாழ்வாதாரத்தை எதிர் நோக்கியுள்ள ஆபத்தை அறிந்து கொள்ள உதவும்.  இந்த ஆபத்தை இதன் மூலம் உணர்ந்து அதை  எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டியதுடன் கூடிப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளபட்டிருக்கிறோம் என்பதையும் தொடக்கமாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.  

சோழவளநாடு என்ற பெயருடன் தமிழக மக்களுக்கு சோறும் சுகமும் விவசாயமும் வேலையும் அளித்து பேருதவி புரியும் காவிரியாறு ,

“ பூவார் சோலை மயிலாடப் புரிந்து குயில்களிசைபாட காமர் மாலையருகை நடந்தாய் வாழி காவிரி ! “ என்றும்

“ உழவர் ஓதை மதகு ஓதை உடைநீர் ஓதை தன்பதங்கொள் விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி ! “ என்றும் சிலப்பதிகாரத்தில் புகழப்படுகிறது. ( ஓதை = ஓசை என்பதன் மருவு )

‘சோழநாடு சோறுடைத்து’ என்கிற சொலவடைக்கு சொந்தமான நாட்டை சொர்க்கமாக ஆக்குவதற்கு காலம் காலமாக கட்டியம் கூறி நிற்பது காவிரி. தமிழர்களின் ஊணொடும் உயிரோடும் ஒன்றாய்க் கலந்த  ஒரு சுவையான சொல்லே காவிரி. இன்று அரசு அறிமுகபடுத்தப் போகும் மீத்தேன் எரிவாயு திட்டத்தால், ‘ சோழநாடு சேறுடைத்து ‘ என்று மாறிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் மலைகளில் பிறந்து அலைகளில்  மறைந்து கலக்கும் காவேரி, அப்படிக் கலக்கும் முன்பு  தான் நடந்து வரும் பாதையைப் பண்படுத்தி பயிர் வளர்த்து,  உயிர் வளர்த்து , உலகையே  உயர்வுற வளர்க்கும் உயர் தன்மை படைத்தது.

இந்தக் காவிரி பாயும் டெல்டாபிரதேசத்தின் இயற்கையான அமைப்புகளை நாம் அறியும் போது நமது புருவங்கள் உயருகின்றன. இந்த அமைப்புகளை ஏற்படுத்தியவர்கள் எவரும் இன்றைக்கு இந்தப்  பகுதிகளை பாலவனமாக்கிப் பலியிடத் துடிக்கும் இன்றைய  அரசியல்வாதிகள் மற்றும் ஆள்வோரோ அல்லது ஏற்கனவே ஆண்டவர்களோ  அல்ல. வரலாற்று ரீதியாக , இத்தகைய அமைப்பை இயற்கையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னர்களும் குறிப்பாக கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனும் வருங்காலத் தலைமுறைக்குத் தாயாக இருப்பாள் காவேரி என்ற தத்துவத்தில்  ஏற்படுத்தித் தந்தார்கள். ஒரு தலைமுறைக்கல்ல பல தலைமுறைகளுக்காக என்றோ ஆட்சிசெய்த மன்னாதிமன்னர்கள்   திட்டமிட்டு ஏற்படுத்திய அமைப்புகள் இன்றைய மண்ணாங்கட்டி அரசியல்வாதிகளால் சூறையாடப்பட சூத்திரம் வகுக்கப்பட்டு இருக்கிறது. பாட்டன் தேடிய சொத்துக்களை பேரன்மார்கள் காப்பாற்றாமல் காலி பண்ணத் துடிக்கிறார்கள்.

36 கிளை ஆறுகள்  2300 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் மற்றும் வாய்க்கால்கள் கொண்ட கட்டமைப்பு கொண்டது காவிரிப் படுகை. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் என்று பிரிக்கப்பட்டு இருந்தாலும் இம்மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட மலைகளோ,  பாறைகளோ இல்லாத பரந்து விரிந்த சமவெளிப் பிரதேசம் என்பது இயற்கை கொடுத்த நன்கொடை. இந்த நன்கொடையைப் பறித்து தங்களின் கணக்கில் போட பல தீயவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள்.

எங்கோ கர்நாடகத்தில் உற்பத்தியாகி தனது பயணத்தைத் தொடங்கும்  காவிரி பல மைல் தூரங்களையும்  பல மாநிலங்களையும் பல மாவட்டங்களையும் கடந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள வங்காள விரிகுடாக் கடலில் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது. தனது பயணப்பாதையை சொர்க்க பூமியாக ஆக்குகிறது காவிரி. இந்தக் காவிரியின் பாதையில்தான் கைவைக்கத் துணிந்துவிட்டார்கள் . காவிரி  என்றாலே சோலைவனங்கள் விரியும் என்றுதான்  பொருள்.  அதன் இயல்பை மாற்றி பாலைவனமாக ஆக்கப் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க அரசுகளே வழி திறந்து விட்டு இருக்கும் அவலம் எப்படி இருக்கிறது என்றால் நமது சொந்த வீட்டில் கொள்ளை அடிக்க ஒரு குஜராத்தியின் கம்பெனிக்கு கொல்லைப் புறக் கதவின் தாழ்ப்பாளைத் நடு இரவில் திறந்துவிடுவது போலத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு - தமிழ் இனத்துக்கு உயிரூட்டும் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கும் - அங்குவாழும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் தீங்கானது; தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதை நாம் உணர வேண்டும்; எதிர்க்க வேண்டும்; போராட வேண்டும்; தடுத்து நிறுத்திட வேண்டும்.

பழம்பெரும் வரலாறும் பண்பாடும் கொண்ட நமக்கும் நமது பூமிக்கும்  இந்தத் திட்டத்தால் வரவிருக்கும் நிலவளத்துக்கான   தீங்குகள் யாவை? இந்தத்திட்டம் செயல் படும் முறைகள் யாவை? இந்தத்திட்டம் நிறைவேறினால் வரும் உடல்நலத்துக்கான   பாதிப்புகள் யாவை? போன்ற அனைத்து செய்திகளையும் அறிவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் பொறியாளர்கள் ஊதும் அபாய சங்கு பற்றி  இந்தக் குறுந்தொடரில் நாம் ஆராயலாம். இன்ஷா அல்லாஹ்.  

பாலை வார்த்த நிலம் – இனி
பாலை நிலமாய் ஆகிடுமா ?
 
ஆய்வு தொடரும்...  
 
கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு: பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம்.

Thanks to News Source:
http://www.adirainews.net/2014/11/1.html

Wednesday, November 26, 2014

ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளம்[ படங்கள் இணைப்பு ]

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட  செடியன் குளம் கடந்த சில வாரங்களாக அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், கடந்த மூன்று தினங்களாக சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஆற்று நீராலும் நிரம்பி, ஏரி போல் காட்சியளிக்கிறது.

தற்போது அதிரையில் மிதமாக பெய்துவரும் தொடர் மழையையும் பொருட்படுத்தாது இப்பகுதியினர் குளத்தை ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். நீரின் மட்டம் இன்னும் 1 அடி உயர்ந்தால், குளம் நிரம்பி வழிந்து ஓடும் நிலையில் உள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்குவதற்கு ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் குளத்திலிருந்து நீர் நிரம்பி இதன் இணைப்பில் உள்ள வாய்க்கால் வழியாக அருகில் உள்ள கீழத்தெரு செயனாங் குளத்திற்கு தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க, செடியன் குளத்தின் மேட்டை சுற்றி காணப்படும் புதர்களையும், தேவையற்ற வளர்ந்து காணப்படும் செடி கொடிகளையும் அப்புறப்படுத்தவும், பெண்கள் குளிக்கும் கரையை சுற்றி பிரதியோகமாக தடுப்பு வேலி ஏற்படுத்தவும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் குளத்தின் மேட்டு பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும் கோரிக்கை எழுத்துள்ளது. மேலும் செடியன் குளத்திலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் அருகில் உள்ள தாழ்வான பகுதியாக இருக்கும் பிலால் நகரில் புகாதவாறு முன்னேற்பாடுகளை செய்யவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்தின் புகை படங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...



நிரம்பும் செடியன் குளம்
அதிரை பேரூர் நிர்வாகத்தின் முயற்சியில் செடியன் குளத்திற்கு ஆற்று நீர் தற்போது மூன்று நாட்களாக வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் சில தினங்களில் குளம் நிரம்பும் என்று எதிர்பார்க்கபடுகிறது.மேலும் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் குளத்தில் குளிக்க துவங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Thanks to: அதிரை எக்ஸ்பிரஸ்

Sunday, November 23, 2014

காந்தி கண்ட கனவு கிராமம் 'காசாங்காடு'!

சாதி வேறுபாடு, மத வேறுபாடு, புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இல்லாத ஒரு ஊர் உள்ளதென்றால் அது தமிழ்நாட்டில் இருக்காது என்று தான் சொல்வார்கள், ஏனெனில் வருடத்திற்கு பல கோடிகளை வாரிகொடுக்கும் குலதொழிலாகவே குடிப்பழக்கம் மாறிவிட்டது.

'தமிழ்நாட்டுல குடிக்காதவன் ஒரு தொகுதிக்கு ஒருத்தன்தான் இருப்பான், அதுவும் நேத்து பொறந்த சின்ன குழந்தையாதான் இருப்பான்'னு வரும் சினிமா வசனத்திற்கு கைதட்டுவதும், பெருமைப்படுவதும் இங்குதான் நடக்கிறது. ஆண், பெண் எனும் குடிமக்கள் வெறும் ‘குடி’மக்கள் ஆகி வரும் நிலையில் முறையான கட்டுப்பாட்டுடன் 'நமக்கு நாமே' என்ற திட்டத்தின் மூலமாக  செழுமையாக ஒரு கிராமம் உண்டு என்றால், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 'காசாங்காடு' எனும் கிராமம் தான் அது.

இங்கு வேளாளர், அம்பலக்காரர், ஆதிதிராவிடர் என்ற மூன்று சமூகத்தினர் ஒற்றுமையாக, சமமாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு கிராமத்தில் எப்படி எல்லா விஷயங்களும் சாத்தியம் என்ற ஆச்சரியத்துடன், ஊர் மக்களிடம் பேசினோம்.
இந்த ஊரைப்பற்றி முதல் முதுநிலை பட்டதாரியும், முனைவருமான டாக்டர் உதயகுமார் கூறுகையில், ''இங்கு குடிப்பழக்கம் யாருக்கும் கிடையாது. டாஸ்மாக் கடையும் கிடையாது. மீறினால் கடுமையான அபராதம், சாதி வேற்றுமை இல்லை. அதனால் சாதி மாறி காதலித்தாலோ அல்லது திருமணம் செய்தாலோ எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. கிட்டதட்ட 60 ஆண்டுகளாக இந்த ஊர் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறது. இதற்கு காரணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.விஸ்வநாதன் தான்.

அவர் காட்டிய விதிமுறைகளைத் தான் நாங்கள் இன்றும் பின்பற்றி வருகிறோம். அவர் இருந்தவரை மக்கள் அவரையே போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அவரின் மறைவுக்குப்பின் (1991) தேர்தல் நடத்தி ஊர் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், ஆர்.விஸ்வநாதன் பெயரில் அறக்கட்டளை அமைத்து ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாங்களே செய்து கொள்கிறோம். கல்யாண மண்டபம், பள்ளி பிள்ளைகளுக்கு தேவையான உதவிகள், பள்ளி அளவில் சாதிப்பவர்களுக்கு உதவிதொகை வழங்கி வருகிறோம்.

மேலும் டாக்டர்கள், இன்ஜினியர்கள் என்று எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் வேலை பார்க்கிறார்கள். என் மகன் மருத்துவத்தில் முதுகலை படிப்பு முடித்துவிட்டு எங்கள் ஊரிலேயே சேவை செய்யும் முனைப்புடன் இருக்கிறார். மேலும் இங்கிருந்து சிங்கப்பூர் சென்றவர்கள் அதிகம். அவர்கள் செய்யும் உதவியும் எங்களுக்கு கிடைப்பது எங்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவுகிறது” என்றார்.

ஊராட்சித் தலைவர் மு.சதாசிவம், ''எங்கள் ஊரில் கிட்டதட்ட 750 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு புகையிலை, சிகரெட், பீடி போன்றவை விற்க அனுமதியில்லை. அதேபோல், எந்தவொரு பிரச்னையானாலும் போலீஸுக்கு போவதில்லை. நாங்களே பஞ்சாயத்து வைத்து, ஊர் தலைவர் என்ற முறையில் பிரச்னைகளை தீர்த்துக்கொள்கிறோம். அதேபோல் சுகாதாரத்தை பொறுத்தவரை, தெருவுக்கு இரண்டு குப்பை தொட்டிகள் வைத்து முறையாக பயன்படுத்துகிறோம். எங்க ஊர்லேர்ந்து இந்திய தேசிய ராணுவ அமைப்பில் 32 பேர் இருக்கின்றனர். இன்னும் பல்வேறு இளைஞர்களை ராணுவத்தில் சேர ஊக்குவிக்கிறோம்'' என்றார்.

ஊராட்சித் துணைத் தலைவர் கோ.ராஜராஜசோழன், ''எங்க ஊர்ல பசுமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஆடுகளை நாங்கள் வளர்ப்பதில்லை. ஆடுகளுக்கு பதில் காடுகளே எங்களுக்கு பிரதானம். மேலும் 750 வகையான மூலிகைகள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்காக அப்பப்ப யாராவது வந்து சேகரிச்சுட்டு போவாங்க.
ஆதி திராவிடருடன் இணக்கமா இருந்தா பத்து லட்சம் தர்றதா அரசு சொல்லியிருந்தது. ஆனால் இன்னும் தரல. நாங்க ஊர்ல கழிவறைகளையும் கட்டி தர்றோம். அரசின் உதவி கிடைத்தால் இன்னும் உதவியாக இருக்கும். மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டு அரசின் விருதும் பெற்றிருக்கிறோம்'' என்றார்.

இந்த ஊரில், ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், கால்நடை மருத்துவனை, வள்ளுவர் படிப்பகம் என்று எல்லாம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. சாலைகள் கூட அடுத்தவர் நிலத்தை பாதிக்காத வண்ணம் சீரான தார் சாலைகளாக இருக்கிறது.

பெருநகரங்களில் கூட தூய்மையை விளம்பரத்தை பார்த்து கற்றுக்கொள்ளும் நம்மிடையே இப்படி விதிவிலக்காய் இருக்கும் கிராமங்களும் இருக்கதான் செய்கிறது. இப்படி நமக்கு நாமே என்று திட்டங்களை தீட்டி செம்மையாக இருக்கும் கிராமங்களை ஊக்குவித்தால், மற்ற கிராமங்களும் வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையாக வாழ வழி பிறக்கும். நாட்டின் முன்னேற்றமும் வேகமடையும். நமது வல்லரசு கனவு நினைவாகும்.

'கிராமங்களே நாட்டின் முதுகலும்பு' என்று சொன்ன மகாத்மா காந்தி கண்ட கனவு கிராமம் 'காசாங்காடு' என்றால் மிகையில்லை.

ஆ.மேரி செல்வ இஸ்ரேலியா
(மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: சதீஸ்குமார்

Thanks to News Source:
http://news.vikatan.com/article.php?module=news&aid=35216&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1#

செடியன்குளத்திற்கு இன்று மாலைக்குள் தண்ணீர் வந்தடையும்...

நமதூரில் உள்ள அணைத்து குளங்களுக்கும் அதிரை பேரூர் மன்றம் தீவிர முயற்சி செய்து தண்ணீர் நிரப்பி வந்த நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் நிரப்ப இன்று அதிகாலை முதல் பேரூர் மன்ற ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் CMP வாய்கால் வழியாக தண்ணீர் வந்து பெத்தாங்குளம் வழியாக இன்று மாலைக்குள்  செடியன்  குளத்திற்கு தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெத்தாங்குளத்திற்கு தண்ணீ ரை திருப்புவதற்காக மணல் மூடைகளை வைத்து தடுப்பு ஏற்பாடு செய்து வைத்திருக்கும் காட்சி 

Thanks to News Source:
 http://www.adiraixpress.in/2014/11/blog-post_0.html#.VHHVwmeaUos

மழைநீரால் நிரம்பும் தருவாயில் செடியன் குளம் [ படங்கள் இணைப்பு ]

கடந்த சில வாரங்களாக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் செடியன் குளத்திற்கு மழைநீர் வர துவங்கியது. தற்போது குளத்தில் பொதுமக்கள் குளிக்கும் அளவில் போதுமான தண்ணீர் காணப்படுகிறது. இதில் அதிரையர்கள் தினமும் ஆர்வத்துடன் குளித்து வருகின்றனர். இன்னும் சில தினங்கள் மழை நீடித்து பெய்தால் குளம் முழுவதும் நிறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Thanks to News Source:
http://www.adirainews.net/2014/11/blog-post_809.html

Wednesday, November 19, 2014

பயனுள்ள இரு சிறிய பரிசோதனைகள்

1640. முஸ்லீம் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் கூறப்படுவதாவது,
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, 'இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறுவார்கள். வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களது முகம் மாறிவிடும்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள்; முன்னும் பின்னுமாக நடப்பார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) வானம் மழை பொழிந்துவிட்டால், அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். இதை நான் அவர்களது முகத்திலிருந்து அறிந்துகொண்டு (இது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! (குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) 'ஆத்' சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது, (தவறாகப் புரிந்துகொண்டு) 'இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்' (46:24) என்று கூறினார்களே, அத்தகைய மேகமாகவும் இது இருக்கலாம்' என்று பதிலளித்தார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 


ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது.
நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம்.

நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம்.

நன்றி


நாம் பயன்படுத்தும் தேன் உண்மையானதா? வாருங்கள் சோதித்துப் பார்க்கலாம்..

எத்தனை காலமானாலும் கெட்டு போகாத ஒரே பொருள் "தேன் "....

தேன் என்று சொல்லி சக்கரைபாகுவை விற்று விடுவோரும் உண்டு. தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா..???? என்பதை அறிவது எப்படி..?

அதற்கு இதோ இரண்டு வழிகள்..

1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால் அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல். பரவாமல் அப்படியே நிற்கும் .

2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால் அது நீரோடு கரையாமல் , நேராக கீழே சென்று அமரும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 நன்றி
 ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.