அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Monday, October 27, 2014

ரசிகனே, ஒரு நிமிஷம்... கத்தி படமும் சூரியூர் கிராமமும்!

தமிழகத்தின் வளமான காவிரிக் கரையோர கிராமமொன்றுக்கு நேர்ந்துள்ள தண்ணீர்க் கொடுமை இப்போது சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது. அந்த உண்மைக் கதையை இங்கே பார்க்கலாம்... திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் 'சூரியூர்'. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம்தான். 


திருச்சியைச் சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பித்தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனதால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமிதான். அதே நேரம் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி இந்த சூரியூர். காரணம், சூரியூரைச் சுற்றி முன்னோர்கள் விட்டுச்சென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடி நீரை வற்றாமல் பார்த்துக்கொண்டன. 


செயற்கைக் கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி (Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையைத் தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. உஷாரான பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு தந்தனர். 


இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தனர் சில தன்னார்வலர்கள். அப்போதுதான் ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாகக் கலக்க விட்ட கொடுமை தெரிய வந்தது. அன்றுமுதல் சூரியூரைச் சார்ந்த ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட ஆவணங்களை பார்த்தபோதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலேயே கட்டப்பட்டிருப்பது நகர் ஊரமைப்புத் துறை மூலம் அம்பலமானது. அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு " உலக தண்ணீர் தினம் - 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமத்தை புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டார்கள் சூரியூர் மக்கள். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை. 

தற்போது வெளிவந்துள்ள "கத்தி" திரைப்படம் மூலம் இந்த பிரச்சினை மீண்டும் அதிகார வர்க்கத்தின் கவனத்தை எட்டும் என்ற நம்பிக்கையில், மீண்டும் சூரியூர் பிரச்சினையை முன்னெடுத்துள்ளனர்.

"கத்தி" திரைப்படத்தில் வரும் கற்பனை கதையை பார்த்துவிட்டு கண்ணீர் விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே, சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள். தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்று எங்களுடன் இணையபோகிறீர்களா? மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்" என்று குரல் எழுப்பியுள்ளனர் சூரியூர் மக்கள். 

மேலும் விவரங்களுக்கு: தண்ணீர் இயக்கம் www.thanneer.org வினோத்ராஜ் சேஷன்: 9500189319 ivfvinothraj@gmail.com

Thanks to News Source:
Read more at: http://tamil.filmibeat.com/…/sooriyur-village-affected-corp…

அட்டக் கத்திக் கலைஞர்கள்... மொண்ணைக் கத்தி மக்கள்!

முன்குறிப்பு : நான் இன்னும் கத்தி திரைப்படத்தைப் பார்க்கவில்லை. பார்க்கும் எண்ணமுமில்லை. 97இல் கல்லூரியில் படிக்கும் பொழுதே விஜய் அஜித் படங்கள் பார்த்துப் புண்பட்டு எங்கள் குலதெய்வம் மூக்குப்பேறிச் சாமிக்கு படையல் போட்டு கட்டிக் கொண்ட கங்கணம் அது. ஆனாலும் தமிழகத் தொலை, சிறு தூரப் பேருந்துகளின் புண்ணியத்தில் இவர்களின் ஆகாவளித் திரைப்படங்களைப் பார்க்கும் கட்டாயத்திற்கு உட்பட்டு, தூக்கமும் வராமல் தொல்லை பெட்டிகளை அணைக்கவும் முடியாமல், கண்ணும் மனமும் ரணமாகியப் பயணங்கள் பல...

அவ்வழியில் கத்தி பற்றி ஊர் உலகம் பேசி எழுதி உசுப்பேற்றி, நண்பர் ஒருவர் வீட்டுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்லப் போன இடத்தில், "நல்ல ப்ரிண்டுங்க , டவுன்லோடியாச்சு, பாத்திரலாம்" என வலுக் கட்டயாத்தின் பேரில் அரைமணி நேரக் காட்சிகளைக் கண்டு 'கழி'த்துக் கிழிந்து போய், பாதியில் வயிறு சரியில்லை என்று பொய் சொல்லித் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து வெறியோடு இவை அல்லாமல் ட்ரெய்லர், திரை விமர்சனம், கீச்சுக் கூச்சல்கள், முகநூல் பதிவுகள் , வலைப்பூப் பிளிறல்கள் எல்லாம் வாசித்து முடித்துவிட்டு இந்தப் பதிவைப் போடுகிறேன் .

முக்கியக் குறிப்பு : இந்தப் பதிவின் நோக்கம் "கத்தி"க் காற்றுள்ள போதே "தூற்றிக்" கொள்வதே (தமிழகராதி: தூற்றுதல் = சிதறுதல்; தூசு போகத் தானியங்களைத் தூவுதல்; புழுதிமுதலியவற்றை இறைத்தல்; பரப்புதல்; அறிவித்தல்; பழிகூறுதல்; வீண்செலவுசெய்தல்; ) மேற்கூறிய இவற்றில் பழி கூறுதல் என இவ்விடம் பொருள் கொள்க... சுருக்கமாகத் துப்புதல் (அ) காறித் துப்புதல் எனப் பொருள் கொள்ளுதல் சாலத் தகும். என் இனமானத் தமிழனை எவ்வளவு தூற்றினாலும் தகும், என்பதே இப்பதிவின் அடிப்பொருள் / கருப்பொருள் எனக் கொள்க!

இப்போது பதிவிற்கு : எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது, ஏனெனில் அவர்கள் வியாபாரிகள், அவர்கள், மேம்போக்காய் சிலிர்க்க வைக்கவும், மேலோட்டமாய் அரிப்பெடுக்க வைக்கவும், அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள், அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும், ஆழ்ந்த சிந்தனையும், தெளிந்த படைப்புகளையும் எதிர்பார்ப்பது "சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட போய் கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி." அதனால் இந்தப் பதிவின் எள்ளல், துள்ளல், நகை, நட்டு , துப்பல், தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும்!

முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது? ஒரு விஷயத்தை பொத்தாம் பொதுவாகப் புரிந்து கொள்கிறோமா, அல்லது ஆழமாய், அகலமாய், புத்தகங்கள், இணையம் வாயிலாக வாசித்தறிகிறோமா? நம்மின் அறிவுக் குறைபாடுதானே நம் சார்ந்த சமூகத்துக்கும், அந்த சமூகம் பெற்றேடுத்திருக்கும் கலைத் தெய்வங்களுக்கும் இருக்கும், அப்படியிருக்க சினிமாக்காரனைச் சாடுவதென்ன முறை? இப்படிச் சமூக விஷயங்களைப் பற்றி மேம்போக்கான ஆர்வமும் மேலோட்டமான புரிதலும் கொண்டதனால்தானடா ஒரு நாள் முதல்வர்களால் உங்கள் தமிழகத்தைத் திருத்த முடிகிறது, திருத்தி உங்கள் சில்லறைக் காசுகளைத் திருடி அவர்கள் கல்லா கட்ட முடிகிறது. ஒரே ஒரு ஹீரோ இல்லன்னா நாலு கோவக்கார இளைஞர்களால யாரையாவது உள்துறை மந்திரி அல்லது முதல் மந்திரியைக் கடத்தி அவர்களின் அறிவுக் கண்களை நாலு வசனத்தில் திறக்க முடிகிறது! மொத்தத்தில் உங்கள் பிரச்சினைகளுக்கான காரணம் நீங்கள் அல்ல, அதற்கான தீர்வும் உங்களிடம் இல்லை என்ற உங்கள் மொண்ணைப் புரிதலால் தானடா வீராணம் குழாய்க்குள்ளே உக்கார்ந்தா உங்க வீட்டுக் கிணத்துலயும், வயக்காட்டுலயும் தண்ணி வந்திரும்னு நம்புறீங்க, கை தட்டித் தட்டிக் காசுக்கு வசனம் பேசுற எல்லாத்தையும் தலைவனா, வாழ்க்கைய உய்விக்க வந்த பெருமானா நினைச்சு, இவரு அரசியலுக்கு வந்தா நல்லாருக்குமா , அவரு வந்தா நம்மளக் காப்பாத்திருவாரான்னு கண்ல ஏக்கத்தோட திரியறீங்க!

சமூகப் பொறுப்பும் நிஜ அக்கறையும், மாற்று அரசியல் பற்றிய அறிவும் , சமூக மாற்றம் கொணர வேண்டும் என்ற துடிப்பும் உள்ளவர்கள் சினிமாத் துறையிலிருந்தும், மற்ற எந்தத் துறையிலிருந்தும் வரலாம், வரவேண்டும். ஆனால் முதல் படம் நடித்த உடனே முதல்வர் நாற்காலியில் குத்த வைக்க வேண்டும் என்று விரும்பும் விடலைத்தனங்கள் அல்ல.

சரி முக்கியப் பிரச்சினைக்கு வருவோம்... தமிழகம் தண்ணீரின்றித் தவிக்கிறது, தமிழக விவசாயி தண்ணீர் இல்லாமல், விளை நிலங்களை விற்றுக் கட்டிடக் கூலியாய் பெரு நகரங்களின் பிளாட்பாரங்களில் படுத்துறங்கி அழுந்துகின்றான்.

யார் காரணம்? கார்ப்பரேட்களா, கொக்கா கோலாவா, பெப்சியா? அல்லது எல்லையே இல்லாமல் குடிக்க, கட்ட, விவசாயம் செய்ய, தண்ணீர் என்னும் வளத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளா.. நம் நதி, நீர் நிலைகளை மாசுபடுத்த, ஏரிகளைத் தூர்த்து பிளாட் போட, 1000 அடி ரெண்டாயிரம் அடி என ஆழ்துளைக் கிணறுகள் இட, கிஞ்சித்தும் யோசிக்காமல் செயலில் இறங்கும் மொண்ணைப் புத்திப் பொதுசனமாகிய நாம் காரணமா அல்லது குளிர்பானக் கம்பெனிகளா? நீரை உறிஞ்ச நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், ஏதோ ஒரு "தன்னாலப் பொங்குற தன்னூத்து" எல்லார் வீட்டுக் கடியிலயும், வயக்காட்டுக்கடியிலயும் ஓடுதுன்னு புத்திகெட்டு நம்பறதால தானடா!

ஓடி ஓடி உறிஞ்சத் தெரிந்த நாம, மீண்டும் பூமியில் நீர் நிரப்ப என்ன கிழித்தோம் என்ற சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல், அரைவேக்காட்டு சினிமா வசனங்களுக்கு கைத் தட்டிப் பொங்கிப் புளகாங்கிதம் அடைந்து விட்டு, 'டாஸ்மாக்'களில் உங்கள் மூளையையும், மூலதனங்களையும் அடகுவைத்துக் குடித்துவிட்டு, தமிழன் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கும் தலைவன் ஒருவன் பிறப்பான் என்று தெருவோரச் சாக்கடைகளில் விழுந்து கிடக்கவோ, இல்லை நடக்கும் எந்தப் பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கின்லே தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு, பீட்சா சாப்டுட்டு, டிவி பாத்துட்டே வோட்டு கூடப் போடாம குடிப் பணியாற்றிட்டு, உலகத்தையே நொட்டை சொல்லிட்டே காலத்தை கடத்தவோ உன்னால் மட்டும்தான் தமிழா முடியும்.

சரி விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தின் நீர்த் தேவைகள் எங்கு, எப்படிப் பூர்த்தியாகிறது? மழை எது? நதி எது? குளம் எது? அணை எது? கால்வாய் எது ? கண்மாய் எது ? ஊருணி எது ? தண்ணீர் பற்றிய தமிழனின் அறிவு என்ன?

தமிழ்நாட்டில் 3 வேறுபட்ட காலங்களில் மழை பொழிகிறது . தென்மேற்குப் பருவமழையின் போது (ஜூன் முதல் செப்டம்பர் வரை ) ஒரு சிறிய மழையும், வட கிழக்குப் பருவ மழையின் போது (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) அதிகபட்ச மழையையும், (ஜனவரி முதல் மே வரை) வறண்ட பருவத்தில் ஒரு சிறிய மழையும் தமிழகத்துக்குக் கிட்டுகிறது. சாதாரண சூழ்நிலைகளில் 945 mm (37.2 in) மழை நமக்குக் கிடைக்கிறது .

தமிழகம் பொதுவில் ஒரு வறண்ட பிரதேசமாக இருந்தாலும் , சில பல வற்றாத ஜீவ நதிகளையும் (பாலாறு, செய்யாறு, பொன்னியாறு, காவேரி, மெய்யாறு, பவானி, அமராவதி, வைகை, சிற்றாறு, தாமிரபரணி ) பல பருவகால நதிகளையும்(வெள்ளாறு , நொய்யல், சுருளி, குண்டாறு இன்னபிற) கொண்டுள்ளது.

 முன்னொரு காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், ஊருணிகள் அமைக்கப்பட்டன , வணிகர்கள், அரசர்கள் எல்லாரும் திருப்பணிக்காக ஊருணிகளும், அவற்றில் தண்ணீர் வந்து சேர கண்மாய்களும் அமைத்தனர். இவை அல்லாமல் இவற்றைப் பராமரிக்க , "குடி மராமத்து" என்றொரு அருமையான பழக்கமும் இருந்தது. ஆறு குளம் கண்மாய்களைத் தூர்வாற, மக்கள் காசு கேட்காமல் (free labour ) வேலை செய்தனர், இன்று தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றொரு அருமையான திட்டம் இருந்தும், நீர்நிலைகள் நீர்வரத்துகள் அனைத்தையும் கூலி வாங்கிக் கொண்டு பராமரிக்கும் வாய்ப்புக் கிடைத்த பின்பும், நிழலில் நின்றுகொண்டு, வேலையே செய்யாமல் சிலநூறு 'ஓவா'க்களை வாங்கி டாஸ்மாக்கில் அதையும் கரைத்துக் குடிப்பவன்தானே நீ, தமிழா!

 ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராசாவுக்கு ஒருநாள் தன்னோட அரண்மனைக் குளத்துல, பால் நிரப்பிக் குளிக்கணும்னு ஆசை வந்திச்சாம். குளத்துத் தண்ணிய எல்லாம் வெளியேத்திட்டு, எல்லா குடிமக்களையும் கூப்பிட்டு இன்னிக்கு ராத்திரிக்குள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு சொம்பு பால் கொண்டு வந்து குளத்துல ஊத்தணும்னு உத்தரவு போட்டானாம். குடிமக்களும், உத்தரவு ராசாவேன்னுட்டு வீட்டுக்குப் போனாங்களாம். நாள் விடிஞ்சது , ராசா கண்ணுமுழிச்சுப் பாத்தாராம் , குளத்துல ஒருபொட்டுப் பாலில்ல. வெறும் தண்ணிதான். எல்லாப் பயலும், இருட்டுல தான் மட்டும் ஒரு சொம்புத் தண்ணி ஊத்துனாத் தெரியவா போகுதுன்னு, தண்ணி மட்டுந்தான் ஊத்தியிருக்கானுங்க. ஒரு பயலும் பால் ஊத்தல!

இப்படித்தான தமிழா உன் கடமைய மறந்துட்டு, நமக்குப் பதிலா வேற எவனாவது வந்து நம்ம பிரச்சினைகளுக்கு தீர்வு குடுப்பான்னு எந்நேரமும் வெளியிலேயே பராக்குப் பார்த்துட்டு இருக்கற. மழைநீர் சேமின்னு முக்குக்கு முக்கு அரசாங்கம் முழங்குனாலும், நீ இன்னும் போர்வெல் ஆழத்தைக் கூட்டறதுலையே குறியாருக்குற தமிழா!

வானம் பார்த்த பூமியாம் தமிழகத்தில் ,நீர் மேலாண்மை பற்றிய பழமையான அறிவு இருந்தது. அதனால்தான் அணைக் கட்டுகள் சிறியதும் பெரியதும் கட்டி, கண்மாய்கள் வெட்டி அவற்றை ஊருணிகளோடு இணைத்து, கிடைத்த மழைநீரை எல்லாம் தேக்கி வைக்கத் தலைப்பட்டான் தமிழன்.

இன்று இந்த நீர் நிலைகளை மாசுபடுத்தவும , பிளாட் போடவும், ஆக்கிரமிப்புச் செய்வதும் யார் தமிழா? கொக்ககோலாவா? இல்லை சக தமிழனா? மிகக் குறைந்த நீர் வளம் கொண்ட இஸ்ரேல் நீர் மேலாண்மையைச் சரிவரச் செய்து, விவசாயத்தில் தன்னிறைவு அடைந்திருக்கிறதே? எப்படி... விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேமிப்பதாலும், விவசாயத்துக்கு உகந்த நுட்பங்களைக் கடைபிடிப்பதாலும்தானே.

அட இஸ்ரேலை விடு தமிழா... இங்கே பக்கத்திலிருக்கிற மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிர்வே பஜாரின் கதை அறிந்திருக்கிறாயா? 1989இல் குடிகாரக் கிராமமாக, வறட்சி தலை கால் உடம்பு விரித்து ஆடிய பிரதேசமாக இருந்த அந்த சின்னக் கிராமம் இன்று நீர் மேலாண்மை மற்றும் சரியான விவசாய உத்திகளைப் பயன்படுத்தி லட்சாதிபதிகளின் கிராமமாக மாறிய கதை தெரியுமா?

பொபட்ராவ் பவார் என்றொரு பஞ்சாயத்துத் தலைவனின் தலைமையில், மொத்தக் கிராமமும் அங்கிருந்த 22 மதுக் கடைகளையும் இழுத்து மூடிவிட்டு, நீர் மேலாண்மைக்காக, 52 நீர்ச் சேமிப்புக் குளங்கள், 2 பொசிவுக் குளங்கள் (percolation tanks), 32 கல் வரப்புகள் (stone bunds ), 9 தடுப்பணைகள் எனக் கட்டி எழுப்பியது, கோடிகள் தேவைப்படவில்லை தமிழா, வெறும் தன்னார்வத் தொண்டும், சில அரசுத் திட்டங்களின் பணமுமே போதுமானதாக இருந்தது. யாரும் கத்திக் கத்தி வசனம் பேசவுமில்லை, எதிரியை வெளியில் தேடவுமில்லை. பிரச்சினைக்கான காரணம் , மோசமான நீர் மேலாண்மையே என்பதை உணர்ந்து செயலில் இறங்கினார்கள் , சாதித்தும் காட்டினார்கள்.

1995ல் வருடாந்திர மழை சுமார் 15 அங்குலம் மட்டுமே, தமிழகம் சாதாரணமாகப் பெறுவது 37 அங்குலம் என்பதை கவனத்தில் இருத்து தமிழா! முதல் பருவ மழைக்குப் பின், நீர்ச் சேமிப்பால், பாசன பகுதி அதிகரித்தது. 2010 ல், கிராமத்தில் மழை 190 மிமீ மட்டுமே கிடைத்தது, ஆனால் நீர் மேலாண்மை நன்கு நிர்வகிக்கப்பட்டதால், கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைகள் வரவே இல்லை.

 நீர் மேலாண்மை அவர்களைப் பல பயிர்கள் அறுவடை செய்ய உதவியது. 1995 க்கு முன், 90 திறந்த வெளிக் கிணறுகள் 80-125 அடியில் தண்ணீர் கொடுத்தன. இன்று, 15-40 அடியில் தண்ணீர் தரும் 294 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளன. பக்கத்து அகமத் நகர் மாவட்டத்தில் மற்ற கிராமங்கள் தண்ணீர் அடைய கிட்டத்தட்ட 200 அடி தோண்ட வேண்டி இருக்கிறது.

1995 ஆம் ஆண்டில், பத்தில் ஒரு பாகம் நிலம் மட்டுமே சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தது, இன்று மொத்த நிலமும் பயிர் செய்யவோ, தீவனப் பயிர் வளர்க்கவோ பயன்படுகிறது. இன்றும் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பஞ்சாயத்துத் தலைவர்களும், உறுப்பினர்களும், இன்ன பிறரும் ஹிவரே பஜாருக்கு புனிதப் பயணம் போன வண்ணம் இருக்கிறார்கள். (புள்ளி விவரங்களுக்கு நன்றி: தெஹெல்கா)

மொத்த இந்தியாவில் ஒரு ஹிவரே பஜார் மட்டும் தானே, அதனால் தான் நம் அட்டைக் கத்தி கலைஞர்கள் கவனத்துக்கு விஷயங்கள் வராமல் வீராணம் குழாய்க்குள்ளே போய் உக்கார வேண்டியதாப் போச்சு என இணையப் போராளிகள் கிசுகிசுப்பது கேட்கிறது. அடப் பதர்களா, கண் திறந்து பாருங்கள், இணையமெங்கும் இதே போல் வெற்றிக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

பாலைவன ராஜஸ்தானில், தண்ணீர் மனிதன் என அறியப்பட்ட, மெகசேசே விருது வாங்கிய ராஜேந்திர சிங் என்னும் போராளி, மறைந்த ஆர்வாரி நதியை உயிர்ப்பித்துக் காட்டியது நம் அட்டக்கத்திக் கலைஞர்களின் கவனத்தைக் கவரவில்லை. ஏன்னா அங்க கத்திக் கத்திக் வசனம் பேசி, கொக்கோ கோலா கம்பெனி ரவுடிகளை அடித்துத் துவைத்து, தமிழனுக்கு, அரிப்புக்கு சுகமா சபட் லோஷன் தடவிக் காசக் கறக்க முடியாது பாருங்க.

அது எதுக்குப்பா தமிழா, அடுத்த காந்தி இவருதான்னு நீங்க எல்லாம் டீக்கடைல உக்கார்ந்து பேப்பரும் கையுமா விவாதிச்ச அன்னா ஹசாரேவோட ராலேகான் சித்தி , பாபா ஆம்டேவோட சோம்நாத் மற்றும் ஆனந்த்வன் அப்டின்னு நீ பாக்காத நிஜத் தலைவன்கள், நீர்மேலாண்மை பற்றிப் பக்கம் பக்கமா ,புத்தகம் புத்தகமா பேசியிருக்காங்க . இதெல்லாம் நம்ம பேய்த் தூக்கத்தக் கலைக்கல. ஒரு சினிமா வசனம்தான் நமக்கெல்லாம் மின்னதிர்ச்சி கொடுத்து நம்ம ஞானக் கண்ணத் திறந்து வைக்குது.

Balisana, Bhaonta, Kolyala, Darewadi, Devgaon, Gandhigram, Guriaya, Jhabua, Mahudi, Mandalikpur, Mangarol, Melaghar, Moti morasal, Onikeri, Pallithode, Raj Samadhyala, Ranapur, Rozam, Sayagata, Saurashtra, Sukhomajri இப்படி இன்னும் எடுத்துக்காட்டுகள் இணையம் , பத்திரிக்கைகள் பூரா கொட்டிக் கிடக்கு தமிழா...

ஆனா பாவம் நம்ம அட்டக்கத்திக் கலைஞர்களுக்குத் தான் காசு மட்டுமே தெரியிற ஒரு "செலக்டிவ் கம்னாட்டீஷியா" இருக்கு. உன்னிலிருந்து பிறந்த கலைக் கடவுள்கள் உன்ன மாதிரித்தானே இருப்பாங்க தமிழா.

சரி தமிழா, தூற்றுனவரைக்கும் எனக்கு போரடிச்சிரிச்சு! போற போக்குல கொஞ்சம் கலைச் சொற்கள இங்க தூவிட்டு, நான் கிளம்பறேன். நம்ம கரைவேட்டி அண்ணன் ஜோக்குல வருமே அந்தத் தம்பி... ஆங்... கோகுல் தம்பி அதுகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கோ தமிழா.. இதெல்லாம் என்னன்னு , அட அதாம்பா நம்ம கூகுள் தம்பி ...

1. Rooftop rainwater harvesting

 (ஒரு ஆண்டில் ஒரு 100 sq.mts வீட்டில் இருந்து 66,000 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம் . இந்த ரீசார்ஜ்டு நிலத்தடி நீர் , ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சாதாரண குடும்பத்தின் நான்கு மாத காலத்தியத் தேவைகளுக்குப் போதுமானது )

2. Storm water run-offs management using swales. 
3. Creating More Permeable surfaces. 
 4. Ridge To Valley Approach. 
5.Farm ponds

அப்புறம் தமிழா, இன்னும் கொஞ்சம் நிஜ ஹீரோக்களையும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன். நமக்குத் தேவை வசனமா , விவேகமான்னு இவங்களப் பாத்து கொஞ்சம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போடுவாங்களே, அந்த சூடப் போட்டுக்க தமிழா ..

இதெல்லாம் போ , எந்தப் பயிர், எந்த வகை , குறைவாகத் தண்ணீர் கேட்கும் எனப் புரிந்து பயிரிடுவதும், ஸ்ரீ முறை (SRI -System Of Rice Intensification, (இப்போது இம்முறை ஏனைய பயிர்களிலும் பயனில் இருக்கிறது), DSR (Direct Seeding of Rice ) முறை, Micro Irrigation, Crop rotation, Crop Diversification, Organic Farming, Integrated farming இவை பற்றியெல்லாம் நம் விவசாயிகளுக்கு, கழுத்து நரம்பு புடைக்காம, பெப்சிகாரன குறை சொல்லாம பாடம் எடுத்து கொஞ்சம் புரிய வை தமிழா!

முடிவாய் ஒன்றே ஒன்று தமிழா : நம் பிரச்சினைகளுக்குக் காரணங்களும் , காரணிகளும் நமக்கு வெளியில் இல்லை. நமக்குள்ளேயேதான் இருக்கின்றன என்பதை உணர் ! நம் தவறுகள் என்னென்ன, நம் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றம் கொணர்ந்தால் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை ஆய்ந்தறி ! வெறுமே வீர வசனங்களும், பஞ்ச் டயலாக்குகளும் நம் வாழ்வைத் திருத்தி அமைக்கப் போவதில்லை. திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆய்ந்து, தீர்வுகள் அறிந்து, அதைச் செயல்படுத்தி, நமக்கு நாமே உதவினால் ஒழிய, நமக்கு உய்வில்லை என்பதை உணர்!

அட்டைக் கத்திகளை நம்பி நேரம், பணம் விரயமிடாமல், உன் மொண்ணைக் கத்தி மூளையைக் கொஞ்சம் கூர் தீட்டு தமிழா ! தமிழகமெங்கும் ஹிவ்ரேபஜார்களை உருவாக்கு, மக்கள் தலைவர்கள், ஒவ்வொரு பஞ்சாயத்திலும், மக்களுக்குள்ளேயே மறைந்திருக்கிறார்கள். அவர்களை பொம்மலாட்டத் திரையில் தேடாதே தமிழா!

முன்குறிப்பை வலியுறுத்தும் ஒரு சிறு பின்குறிப்பு: இந்தப் பதிவை படித்துவிட்டு , "நீ நடிகர் விஜய்க்கு எதிரானவனா ? முருகதாசுக்கு எதிரானவனா ? சினிமாக் கலைஞர்களுக்கு எதிரியா என்று மொண்ணைக் கேள்விகள் கேட்போரின், ட்ரோல் செய்ய முயற்சிக்கும் அறியாப் பதர்களின் வால்கள் ஓட்ட நறுக்கப்படும்.

 உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை எவ் விதத்திலும் ஆதரிப்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல. அவர்களைவிட பெரிய குற்றவாளி, அடிப்படைப் புரிதலற்ற, அறியாமையிலிருக்கும் நாமே என்பதை வலியுறுத்தவே இந்த ஆதங்கப் பதிவு. தமிழகத்தின் தண்ணீர்த் தேவையைத் தீர்க்க, விழும் ஒவ்வொரு மழைத் துளியையும் சேகரிக்க வேண்டியதும், தண்ணீரைச் சரியாய்ப் பயன்படுத்தும் மேலாண்மை உத்திகளுமே ஒரே உறுதியான வழி. "தன்னூத்து"கள் தானே பொங்கி நிரம்புவதில்லை, நீயும் நானும் சேர்ந்து நிரப்பினால்தான் அது காலாகாலத்துக்கும் நிறைந்து நம் தேவை தீர்க்கும். கொக்ககோலாவும் பெப்சியும் சிறு எதிரிகள், நீர் மேலாண்மை பற்றிய உன் அடிப்படை அறிவின்மையே பெரும் எதிரி! 


அலெக்ஸ் பால் மேனன் தனது வலைப்பதிவு பக்கத்தில் 'கத்தி' அனுபவம் குறித்து எழுதிய எழுதிய பதிவு இது. | முழுமையான பதிவுக்கு http://alexmenon.blogspot.in/2014/10/blog-post.html

Thanks to News Source

இஸ்ரேல், அன்னா ஹசாரே போன்ற விடயங்களின் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கட்டூரையாளர் வலியுறுத்தும் நீர் மேலாண்மை குறித்த மையக்கருத்தோடு 100 சதவிகிதம் உடன்படுவதால் இங்கே நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது (ஆர்)

Thursday, October 23, 2014

துளித் துளித் துளித் துளி மழைத் துளி ! அதுவே நமது உயிர்த்துளி !


தண்ணீர்! இயற்கையின் பெரும் வரப்பிரசாதமான தண்ணீரைப் பற்றி புகழாத ஆள் இல்லை. தண்ணீரின் புனிதத்தைப் பற்றி சொல்லாத மதங்களும் நன்னெறிகளும் இல்லை. தண்ணீரின்றி மனித இனமோ , விலங்கினங்களோ உயிர் வாழ முடியாது என்பது அனைவராலும் உணரப்பட்ட உண்மை.

ஒவ்வொரு ஜீவராசியும் தண்ணீரின் வடிவத்தின் மூலத்திலிருந்தே   படைக்கபட்டதாகும் என்பது பொது நியதி. “ ஒவ்வொரு உயிரினங்களையும் நாம் தண்ணீரிலிருந்துதான் படைத்தோம் . இதை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? “ என்று திருமறை குர் ஆனின் 21: 30 ஆவது வசனத்தில் அல்லாஹ்   கேட்கிறான்.     உலக வாழ்வில்  நன்மை செய்தோருக்காக மறுமையில் அவர்களுக்கு சொர்க்கத்தை வாக்களிக்கின்ற அல்லாஹ்,  அந்த சொர்க்கத்தின் இன்பங்களை வர்ணிக்கிறபோது அங்கு எப்போதும் ஆறுகளும் நீர்ச் சுனைகளும் ஓடிக் கொண்டு இருக்கும் என்று திருமறையில் பல இடங்களில் கூறுகிறான். தண்ணீரை இறைவனே முன்னிலைப் படுத்துவது இதனால் தெளிவாகிறது.

“நீரின்றி அமையாது உலகு” என்பது திருவள்ளுவரின் வாக்கு. ‘ மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும்! ‘ என்று மழையைப்  போற்றுகிறது சிலப்பதிகாரம்.  ‘ தவித்த வாய்க்குத் தண்ணீர் தராதவன்’ என்று தண்ணீர் தராதவர்களை இழிவாகப் பேசும் பண்பாடு நம்மிடையே நிலவி வருகிறது. அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு தண்டனை தரவேண்டுமானால் அவர்களைத் ‘ தண்ணீர் இல்லாத காட்டுக்கு’ப்   பணி இட மாற்றம் செய்து அனுப்பும் வழக்கம்  என்றும் இருக்கிறது. 

ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தாலும் சரி; சொந்தமாக வீடு கட்டினாலும் சரி அந்தபகுதியில் தண்ணீர் வசதி எப்படி இருக்கிறது என்ற கேள்விதான் நமக்கு எழும் முதல் கேள்வியாகும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது குடும்ப நலன்களை விசாரித்த பின், “ உங்கள் ஊர்ப்பக்கம் மழை பெய்ததா? ”  என்றும் தவறாமல்  கேட்டு விசாரித்துக் கொள்வது நமது பண்பாடு . 

ஒரு நபித் தோழர் பெருமானார் ( ஸல் ) அவர்களிடம் தனது தாய்க்கு நரகத்தின் வேதனை குறைய  நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டதற்கு அந்தத் தாயின் நினைவாக ஊருக்கு நடுவில் ஒரு கிணறு வெட்டச் சொன்னார்களாம். அந்தக் கிணற்றில் தண்ணீர் ஊறி அதை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கும்  காலம் வரை மறைந்துவிட்ட தாயாருக்கு நரக வேதனைகள் இருக்காது  என்று நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு சொற்பொழிவில் கேட்டு இருக்கிறோம். மழை பொழியும்போது இறைவனின் அருட்கொடை ( ரஹ்மத் )  இறங்கிக் கொண்டு இருக்கிறது என்று நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில் புனித நகரமான  மெக்கா பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டதாகும். இந்த அற்புதங்களில் முக்கியமான அற்புதம் புனித மெக்காவில் இருக்கும் ஜம்ஜம் கிணறாகும். ஒரு வறண்ட  பாலைவனத்தில்,  வற்றாத நீரூற்றை தனது அருளால் உருவாக்கிய அல்லாஹ்,  உலகெங்கிலுமிருந்து தன்னை நாடி வணங்க  வருபவர்களுக்கு தாகம் தணிக்கும் தன்மையை மெக்காவுக்கு வழங்கி இருக்கிறான்.

தானங்களில் சிறந்த தானம் தண்ணீர்தானம்தான் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். பெருமானார் ( ஸல் ) அவர்களின் நபி மொழித் தொகுப்பான புகாரியில் 2348 ஆம் ஹதீஸில் , “ மூன்று பேர்களை இறைவன் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். அவர்களில் முதலாமவன் தனது தேவைக்கு எஞ்சிய தண்ணீரை வழிப் போக்கர்கள் பயன்படுத்துவதை தடுத்தவன் “ என்று கூறப்பட்டு இருக்கிறது.  இதனால்தான் கோடை காலங்களில் தர்மஸ்தாபனங்கள் மூலமாக நாடெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் வைக்கப்படுகின்றன.  இப்படி தண்ணீரின் பெருமையை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு பெருமைக்குரிய தண்ணீர்,  நம்மைத் தேடி வரும்போது நாம் அந்தத் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறோம் – எவ்வாறு அந்தத் தண்ணீரை சேமிக்கிறோம்- எவ்வாறு அதற்கு மரியாதை தருகிறோம்; தரலாம்  என்பதை அலசுவதே இவ்வார வெள்ளிக் கிழமையின் தலையங்கக்  கட்டுரையின்  கருவாகும்.

பல வருடங்களாக நமது பகுதிகளில் மழை பொய்த்து, குளங்கள்,  ஏரிகள் முதலிய நீர் நிலைகள் வற்றி வறண்டு போனதைத் தொடர்ந்து நிலத்தடி நீரும் அதள பாதாளத்துக்கு இறங்கிய பிறகே நமக்கு நடை முறையில் தண்ணீரின் அருமை தெரிந்தது. இல்லாவிட்டால் ‘தண்ணீரைப் போல செலவழிப்பான்’ என்ற  ஊதாரித்தனத்துக்கு உதாரணமாக தண்ணீரைக் காட்ட வேண்டிய அவல நிலையில்தான் நாம் தண்ணீரை அலட்சியபப்டுத்திக் கொண்டு இருந்தோம்.

மனிதன் பல அறிவியல் சாதனைகளை இறைவன் தனக்கு வழங்கியுள்ள அறிவால் உருவாக்குகிறான். ஆனாலும் இறைவன் சிலவற்றைத் தனது கட்டுப் பாட்டிலேயேதான் வைத்திருக்கிறான். இப்படி இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலவற்றில் தண்ணீரும் ஒன்று. எவ்வளவுதான் மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் செயற்கை மழையை வரவழைத்தாலும் அவையெல்லாம் உலகத்தின் தண்ணீரின் தேவைக்கு ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’  என்கிற நிலைமையிலேதான் இருக்கின்றன. இறைவன் தனது அருளால் வழங்கும் மழைக்கு எதுவும் ஈடாகாது. 

தண்ணீருக்கு  இவ்வளவுத் தட்டுப்பாடு ஏன்? ஒரு புறம் மக்கள் தொகை கூடிக் கண்டே போகிறது. மறுபுறம் இயற்கைவளம் குறைந்துகொண்டே போகிறது. மழைக்கும் அந்த மழை தருகிற தண்ணீருக்கும் உரிய மரியாதையை தருவதற்கு மனித இனம் தவறுகிறது. மழை பொழிவதற்கு துணைநிற்கும் மரங்கள் வெட்டப்பட்டு அங்கெல்லாம் வீட்டுமனைகள் விற்பனையாகின்றன; கான்கிரீட் கட்டிடங்களும் காட்டுக் கருவைச் செடிகளும் புவியை வெப்பமயமாக்குகின்றன. மனிதனின்  சுயநல நடவடிக்கைகள் இயற்கையை சுரண்டுவதால் இறைவனின் கோபம் மழையைத் தடுத்து நிறுத்துகிறது. 

எடுத்துக் காட்டாக, தண்ணீரில் சிறுநீர் கழிப்பது இறைவனால் தடுக்கப்பட்ட ஹராமான செயல் என்று மார்க்கம் எச்சரிக்கிறது .  ஆனால் நம்மில் பல வீடுகளின் சாக்கடை நீரை மட்டுமல்ல, கழிவறைக் குழாய்களைக் கூட   ஆறு , ஏரி மற்றும் குளங்களில் பாயவிடுகிற பாவச்செயலை செய்வதை இறைவனால் எப்படி மன்னிக்க முடியும்? எனவே இந்த உலகிலேயே மழையைக் குறைத்து மக்களை தவிக்கவிடும் தண்டனையை இறைவன் அளிக்கிறான் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  பாவிகள்  மிகுந்த பகுதிகளில் மழை குறைவாகப் பெய்யும் என்பதும் உலகம் உணர்ந்து கொண்ட உண்மை. இதனால்தான் ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை ‘ என்ற சொற்றொடரும் நம்மிடையே உலவுகிறது.

சில ஊர்களில் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகையைவிட தண்ணீருக்கு ஆகும் செலவு அதிகமாக அதிகமாக இருக்கிறது. ஒரு எளிய குடும்பத்தில் குடிதண்ணீருக்காக அவர்கள் செய்யும் செலவு அவர்களின் வருமானத்தை உறிஞ்சி அவர்களை கடன்காரர்களாக ஆக்கிட பெரும்பங்கு வகிக்கிறது. கிணற்றுப் பாசனங்கள் மூலம் நீர் பெற்றுக் கொண்டிருந்த ஊர்களிலெல்லாம் கிணறுகளில் நீர் வறண்டு போய் அவை பாழடைந்து கிடக்கின்றன. இதையே ஒரு கவிஞர்

“இன்றைய கிணறுகள்
வறண்டு மரித்துப்போன
நிலத்துக்கு நாங்கள் வைத்துள்ள
மலர் வளையங்கள் ! “


என்று குறிப்பிடுகிறார்.  இன்னொரு உலகப் போர் ஏற்பட்டால் அந்தப்போர் தண்ணீருக்காகவே இருக்குமென்று கூறப்படுகிறது. 

மழை பொய்த்துப் போகாமல்  பெய்விக்கவும் நிலத்தடி நீரை வளப்படுத்தி மேம்படுத்தவும்  மழைக்கும் நீருக்கும் நன்றி செலுத்தவும் மனித இனம் செய்ய வேண்டியவைகள் யாவை?

முக்கியமாக மரங்களை வெட்டக் கூடாது. மேலும் மேலும் மரங்களை வளர்க்க வேண்டும். கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலை அரசிகளின் கழுத்துக்களில் இருக்கும் மரம் என்ற மாங்கல்யம் நகரமயமாக்கல் என்ற சங்கிலி பறிக்கும் வழிப்பறித்திருடனால் திருடப்படும் காரணமாக,  அங்கெல்லாம் கூட குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்கிற செய்தி மனித இனத்தை அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தியாகும்.

இஸ்லாம் மரம் வளர்ப்பதை ஊக்கபடுத்துகிறது. “ ஒரு முஸ்லிமால் நடப்பட்ட மரத்திலிருந்து உண்ணப்பட்டதும் அதிலிருந்து திருடப்பட்டதும் அதிலிருந்து வனவிலங்குகள் சாப்பிட்டதும் அவருக்கு நன்மையைத் தரும்” என்று    பெருமானார்        ( ஸல்) அவர்கள் நவின்றதாக, ஹஜரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரஹ் ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 978) .

தமிழகத்தில் சேலம், தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை போன்ற பெருநகரங்கள் குடிநீருக்காக காவேரி ஆற்றையும், கோவை, திருப்பூர் நகரங்கள் பவானி, சிறுவாணி ஆறுகளையும், மதுரை வைகையையும், நெல்லை தாமிரபரணியையும் நம்பியுள்ளனர். காட்டுத் திருடர்களால் திருடப்பட்டதுபோக இன்னும் மிச்சமிருக்கும் மரக்காடுகள்தான் இந்த நதிகள் பாயும் பகுதிகளில் மழையைப் பொழிந்து  இப்பகுதி மக்களை வாழ வைக்கின்றன. வேலூர், திருவண்ணாமலை போன்ற  மாவட்டங்களில் பாலாறு பாழாறாகிப் போய் பல ஆண்டுகளாகிவிட்டன. அங்கெல்லாம் பெரும்பாலும் நிலத்தடி நீரையே நம்பி வாழவேண்டி இருக்கிறது.

நிலத்தடி நீர் வளம்  இயற்கையாக,  இயற்கையாலேயே   புதுப்பிக்கப்படும் வளம் ஆகும்.  நிலத்தடி நீர் படிவங்களில் உள்ள  நிலத்தடி நீருடன் மழைநீரை செலுத்தினால் அதை  வங்கியில் செலுத்தப்படும்  வளரும் மாதச் சேமிப்புக்கு ஒப்பிடலாம். 

மழைக்காலங்களில்  பெய்யும் மழையின் ஒரு பகுதி நிலத்தடி நீர் படிவங்களில்  சென்று சேகரமாகிறது. அந்தச் சேகரத்திலிருந்து நாம் ஆண்டுதோறும் நிலத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் நீரின் அளவு ஆண்டுதோறும் மழை கொடுக்கும் நீரின் அளவைவிடக் குறைவாக இருந்தால் சேகரம் வற்றாது. பருவமழை தவறி, வறட்சி ஏற்படும் ஆண்டுகளில் ஓரளவு சேகரிப்பிலிருந்து எடுக்கலாம். அடுத்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை பெய்தால், இந்தக் குறைவு நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆனால், தொடர்ந்து சேகரத்திலிருந்து அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும். இப்படி முதலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் பொழியும் மழை நீரை வீணாக்காமல் நிலத்தடியில் சேமிக்க வேண்டும்.

மழை நீரை நிலத்தடியில் சேமிக்க வேண்டுமானால் அதற்காக இரண்டுவிதங்களில் செயல்படலாம். ஒன்று  மழை நீரை நிலத்தடி நீர்ப் படிகங்களோடு சென்று அடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்துக்காக சேமித்துவைப்பது. இதற்காக வல்லுனர்கள் சில முறைகளை வழிகாட்டி இருக்கிறார்கள். வீடுகளில் டிஷ் ஆண்டெனா வைக்கிறோம்; சோலார்  மின்சாரம் தயாரிக்கும் அமைப்பைப் பொருத்துகிறோம்; பரவலாக குளிர்சாதனம் வந்துவிட்டது; ஏன் சில வீடுகளில் உடற்பயிற்சி சாதனங்கள் கூட வந்துவிட்டன.  இந்த சூழ்நிலையில் , மழைநீரைக் கொண்டு நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் எளிய முறைகளையும் அமைத்து  நாம் கையாள்வதும்  இன்றைய சூழலில் காலத்தின் கட்டாயமாகும். 

மழை நீர்  நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய சுமார்  மூன்றடி விட்டமும் எட்டு முதல் பத்து அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கல் ஜல்லிகளை சுமார்  ஆறு அடி முதல் எட்டு அடிக்கு நிரப்பி அதன்மேல் ஒன்று முதல் இரண்டு அடி வரை ஆற்று மணலை இட்டு நிரப்பி, நமது வீட்டுக் கூரையிலிருந்து வரும் மழை நீர்க் குழாயை இந்த அமைப்பினுள் நீர் புகுமளவுக்கு விட்டுவிட வேண்டும். இந்த அமைப்பினால் நமது கூரையிலிருந்து வீணாக கொட்டும் மழைநீர் நிலத்தடி நீருடன் சென்று சேர்ந்து அதன் வளத்தை உயர்வின் அளவை  உயர்த்த உதவும்.  மழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போகாமலிருக்க இம்முறை உதவும்.

வருடாவருடம் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலந்து வீணாவதாகவும்  35% வெயிலில் ஆவியாவதாகவும், 14%  மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் வல்லுனர்களால் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில்,  தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் நெருக்கமாக  கட்டப்படுவதாலும்  திறந்தவெளிகளை சிமெண்ட் தளங்கள் அமைத்தும்,  டைல்ஸ் போட்டு ஒட்டியும் தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால்,   பெய்யும் மழை நீரில்  5% அளவிற்கு கூட நிலத்தால்  உறிஞ்சப்படுவதில்லை. இந்த சதவிகிதத்தை அதிகரிக்கவே மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும். மக்களும் இதன் அவசியத்தை  உணரவேண்டும்.

நமது ஊர் போன்ற  கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைவது ஒருபக்கமும், மறுபக்கம்  ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, அருகிலுள்ள  கடல் நீர்,  நிலத்தடி நீரோடு  கலந்து பயன்படுத்தத் தகுதி இல்லாத  அளவுக்கு உப்பு கலந்த நீராக  மாறி விடுகிறது. இந்தக் குறைபாட்டை நாம்  மழை நீர் சேகரிப்பு முறைகளை அமைப்பதன்  மூலம் தவிர்க்கலாம்.

நம்முடைய ஊர்ப்பகுதி மற்றும்  மாநில  மக்கள் தங்களின்  அன்றாடத்   தேவைகளுக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.. சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு தொடர்ந்து  கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து,  கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான  காரணங்கள். யாவை என்றால் அந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளில்  சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டதும்  அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியாகப் பெய்யும் மழையைவிடக்  குறைவாகவே இருந்ததுமாகும்.  ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை என்ற  கருத்து உணரப்பட்டது. 

பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு  வடிவங்களில் அல்லது நிலைகளில்  நமக்கு கிடைக்கிறது.

இவை கடினமான  பாறைக்கு மேலே உள்ள மணற்பாங்கான இடங்களில் உள்ள  நீராகவும், கடினமான  பாறைக்குள் காணப்படும் நீர் படிவங்களாகவும்  இரு வகைகளாக உள்ளன.  இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம்.

மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும்,  தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னை மற்றும் பல வட மாவட்டங்களில்  ஒவ்வொரு பகுதியிலும் கடினமான  பாறை வித்தியாசமான ஆழங்களில்  அமைந்துள்ளன. இந்த வித்தியாசம் முப்பது அடி முதல் முன்னூறு அடிகள்வரை வித்தியாசப்படுகின்றன. அதேபோல கிடைக்கும் நீரின் சுவையும் தன்மையும் கூட வித்தியாசப்படுகின்றன.

 மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.

மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள்,  மழை நீரை அதிக அளவில் பூமிக்குள்  செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது என்பது ஒரு நிருபிக்கப்பட்ட உண்மை.  ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

 தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், அங்கு  ஒரு கிணறு இருந்தால், அதைப் பேணி  தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ அவற்றை நிரந்தரமாக மூடிவிட நினைப்பது மற்றும் குப்பைகளைக் கொண்டுபோய் கிணறுகளில் கொட்டுவது ஆகியவை  முற்றிலும் தவறான செயல். இன்று நமது பலவீடுகளில் கிணறுகள் காணாமல் போய்விட்டன. கிணறுகளைத் தூர்த்து அதன்மேல் இளைய மகளுக்கு வீடுகட்டிக் கொடுத்துவிடுகிறோம். 

அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து,  இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.  ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சுவை கூட்டி  சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் ,  ஆழ்துளை கிணற்றை கடினப்  பாறையின் நிலை வரை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். முதலில் மேல் நிலத்தடி நீரை மழை முடிந்த மாதங்களில் எடுத்து உபயோகித்து,  தீர்ந்த பின், அதில் பற்றாக்குறையை உணரும்போது குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வல்லுனர்கள் ஒரு ஆலோசனையைத் தருகிறார்கள்.

அதன்படி, . ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடினமான பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடும். அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் துளைகளுள்ள  குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை என்று  வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

மழைத்துளி! உயிர்த்துளி ! மரம் வளர்ப்பது மாண்புடையது ! மழை நீர் சேகரிப்பு வாழ்வின் இதர ஆதாரங்களை சேகரிப்பது போல் இன்றியமையாதது. மழை பெய்கின்ற காலங்களில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழை பெய்கின்ற காலங்களில் வீட்டுக்குள் அடங்கி சுடச்சுடக்  கடலை வறுத்துத் தின்றுகொண்டு , மரவள்ளிக் கிழங்கில் மஞ்சள் போட்டு தாளித்துத் தின்றுவிட்டு தேத்தண்ணீர் குடித்துக் கொண்டு கிடந்துவிட்டு கோடை காலங்களில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் நிலைகளை மாற்ற இனிமேல் புதிதாக கட்டப்படும் வீடுகளிலும் இதற்கு முன்பு இருக்கும் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் கட்டப்படவேண்டும். இந்த நடவடிக்கைகள் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள அவசியம்! கட்டாயம் !

Thanks to: AdiraiNews

Tuesday, October 21, 2014

கோடைகாலத்தில் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க மழைநீரை சேமிப்போம்! அக்கறையான வேண்டுகோள்!

தஞ்சை மாவட்ட கடலோர பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக பருவமழை இல்லாதலால் நமது நிலத்தடி நீர் முற்றிலுமாக குறைந்து போய் உள்ளன. கோடை காலங்களில் நமது பகுதியில் தண்ணீர் பஞ்சம் இருந்தன அதனால் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருவதால் இதை பயன்படுத்தி நமது பகுதியில் உள்ள குளம், குட்டைகளை தூர் வாரி ஆழப்படுத்தி வரும் மழைநீரை சேமித்து வைத்தோமானால் கோடைகாலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதாவறு பார்த்துகொள்ளலாம்.

இதைவிட முக்கியமானது வீடுகளில் மழைநீர் சேமிப்பது. மழைநீர் சேமிப்பு என்பது சிலபேர் தெரியாமல் தண்ணீர் தொட்டிகட்டி சேமிப்பது என்று தவறாக புரிந்துகொண்டு அதை செயல்படுத்தவில்லை மழைநீர் சேமிப்பு என்பது நமது மாடியில் விழும் மழைநீரை நேரடியாக நமது கிணறு அல்லது போர்வேல் அருகில் 4 அடி விட்டு 3.அடி அகலமும் 8.அடி உயரம் குழியும் தோண்டி ஓரத்தில் சிமிண்ட் உரையோ அல்லது கல்லோ வைத்து கட்டி அந்த பள்ளத்தில் கருங்கல் ஜல்லிகளை அதில் நிரப்ப வேண்டும்.

மழைநீரை நேரடியாக அதில் விட்டோமானால் நமது நிலத்தடிக்கே தண்ணீர் போய் கிணறும் நிறையும். தஞ்சை மாவட்ட மேல்பகுதியில் நிலத்தடி நீர் குறைய காரணம் கடந்த  கருணாநிதி அவர்களின் ஆட்சியில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டமாகும் வருடம் முழுவதும் ராட்ச போர்வேல் போட்டு கொண்டு செல்வதால் வரும் காவிரி நீர் மேல் பகுதியிலயே சேமிக்கப்படுகிறது அதனால் நமக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை இந்த கூட்டு குடிநீர் திட்டம் நல்ல திட்டமாக இருந்தாலும் தற்போது செய்திகளில் வருவது அதிர்ச்சி அடைய வைக்கின்றன சில சமூக விரோதிகளால் ராமநாதபுரம் பகுதியில் குழாய்கள் உடைக்கப்பட்டு இங்கிருந்து போகும் தண்ணீர் வீண்விரையம் ஆகிறது அதுமட்டுமல்ல தற்போது அதிமுக (ஜெயலலிதா) ஆட்சியில் மேலத்தஞ்சை பகுதியில் இருக்கும் அணையை உயர்த்தி கட்டும்பணி நடந்துகொண்டு இருக்கிறது அவர்கள் சேமித்தது போக மீதம் உள்ளதுதான் நமக்கு வரும் எந்த ஆட்சி வந்தாலும் கடை மடை பகுதியான நம் பகுதி புறக்கணிக்கப்படுகிறது அதனால் அதற்கு சிறந்த வழி மழைநீர் சேமிப்பதே இதை ஒவ்வருவருக்கும் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 

....PLEASE SHARE......
அன்புடன் ...அ.நெய்னாமுகமது


மிகவும் அவசியமானதொரு வேண்டுகோள் என்பதால் நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகிறது.

Thanks to: அதிரை எக்ஸ்பிரஸ்

Friday, October 17, 2014

சுற்றுச்சூழல் சுகாதாரமும் தூய்மை இந்தியாவும் சாதிப்பது அரசால் மட்டும் சாத்தியப்படுமா ?



இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு ஆளும் அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் “தூய்மையான இந்தியா” என்கிற கோஷத்தையும் முன்னெடுத்து வைத்து இருக்கிறது. இது ஒரு வகையில் பாராட்டப்படவேண்டிய அம்சம்தான்  என்றாலும்  இதே போல் அரசின் சார்பில் எடுத்துவைக்கப்பட்ட பல கோஷங்களை இதற்கு முன்பும் கேட்டிருக்கிறோம்.


“ஜெய் ஜவான் ஜெய்  கிசான்”   -“ இந்தியா ஒளிர்கிறது “ – “ஹரிபி கடாவோ” என்பவையை   எல்லாம் மக்கள் மட்டுமல்ல அந்த கோஷங்களை முன்னிறுத்திய அரசுகளும் மறந்துவிட்ட  கோஷங்கள்தான்.



பொதுவாக கோஷங்கள் என்பவை ஒரு கொள்கை முழக்கமாக இருப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். அந்த முழக்கங்கள் ஒரு காலகட்டத்துக்குள் காரியமாக பரிணமித்து குறிப்பிட்ட கோஷத்துக்கான பேசுபொருளில் நாடு தன்னிறைவு அடைந்துவிட்டதா என்று பார்ப்பதே முக்கியமானதாகும். அதை விட்டுவிட்டு ஒரு கோஷத்தை சொல்லி எல்லோரும் முழங்கிவிட்டு அன்று மாலையே அதை மறந்துவிடுவது நம்மிடையே நிலவி வரும் பழக்கம். இப்போது புதிய அரசு எடுத்துவைத்துள்ள இந்த “தூய்மை இந்தியா” என்கிற முழக்கத்தின் விதி எப்படி எழுதப்படப் போகிறது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான 'தூய்மை இந்தியா' பிரசாரத்தை  அவர் ஆரம்பித்துவைத்ததாக  செய்திகள் தெரிவித்தன.  இந்த நிலையில்,  விளக்குமாற்றை  கையில் எடுத்து அவரே வீதியைச் சுத்தம்  செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பெரும்பாலும் இந்தியிலும் அவ்வப்போது தமிழிலும் அனைத்து தொலைக் காட்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் காட்சிகளும் மாறி மாறி ஒலிபரப்பப் பட்டு வருகின்றன.
மேலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கான தனது செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமரின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.



5 ஆண்டுகளுக்கான 'தூய்மை இந்தியா' திட்டம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி  மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தில் நிறைவடைகிறது.



தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கல்லறைகளுக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், வால்மீகி பாஸ்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு விளக்குமாற்றை  எடுத்து தானே வீதியைச் சுத்தம் செய்தார்.



'தூய்மை இந்தியா' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் புதிய விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அவர்  தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவின் முக்கியஸ்தர்களை அவர்களின்  பெயர்களைக் கூறி அவர்களையும் தன்னுடன் இணையுமாறும் அவர் கோரியுள்ளார்.
குறிப்பாக 9 புகழ்பெற்ற பேர்களை இந்தப் பணியில் பங்கேற்க  வருமாறு அழைக்க வேண்டும் என்றும் பிரதமர்  கூறியுள்ளார்.



கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழில் அதிபர் அனில் அம்பானி, நடிகர்களான சல்மான்கான், கமல்ஹாசன், நடிகை பிரியங்கா சோப்ரா, யோகா குரு ராம்தேவ், உள்ளிட்ட முக்கியஸ்தர்களை  தனது 'தூய்மை இந்தியா' சவாலுக்கு உதவுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது, இவர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் வழியைப் பின்பற்றி  வீதிகளில்  குப்பைகளை  அகற்றி அதை வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், பொதுமக்களும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து பதிவேற்றுமாறு கூறியுள்ளார். யார் செய்தார்களோ இல்லையோ பாரதீய ஜனதாக் கட்சியினர் அன்று ஒருநாள் மட்டும் வீதிகளை சுத்தபப்டுத்துவதாக புகைப் படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.



இவர்களில்,   இந்த அழைப்புக்கு  செவிசாய்த்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, 'பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சவாலை ஏற்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்' என்று டுவீட் செய்துள்ளார். 2019 இற்குள் நாட்டை தூய்மை இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.



சச்சின் டெண்டுல்கரும் தனது அதிகாரபூர்வ முகநூலில்  இந்தப் பணியை மகிழ்வுடன்  ஏற்பதாக வீடியோ நிலையைப் பதிவேற்றியுள்ளார்.



நாடு முழுவதும் சுமார் 31 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் பல்வேறு பொது நிகழ்வுகளில் 'தூய்மை இந்தியா' பிரசாரத்துக்காக, செயற்பாட்டுக்காக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அர்ஜுனா விருது குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், பாலிவுட் நட்சத்திரம் அமீர் கான் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



பிரதமர் ஆற்றிய உரையில் 'மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று நான் அவருக்கு தலை வணங்குகிறேன். காந்தியின் வாழ்க்கையும் சிந்தனையும் எம்மிடையே பெரும் தூண்டுதலையும் எழுச்சியையும் ஏற்படுத்துவது. ஆகவே, காந்தி கண்ட கனவை இந்தியர்களாக நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் நம்  அனைவருக்கும் இருக்கிறது.



'தூய்மை இந்தியா' என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேசப்பற்றினால் இது தூண்டப்பட்டுள்ளதே தவிர, அரசியலினால் அல்ல. அனைத்து அரசுகளும் தேசம் தூய்மையாக இருக்க நிறையச் செய்துள்ளனர். அவர்களை இத்தருணத்தில் வாழ்த்துகிறேன். இந்த அரசுதான் இவ்வாறெல்லாம் செய்கிறது என்று நான் ஒருபோதும் உரிமை கோரமாட்டேன்.



மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா என்ற கனவு மட்டும் இன்னமும் நிறைவேறவில்லை. சுத்தம் செய்வது தூய்மைப் பணியாளர்களின் பணி மட்டும்தானா? பழைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது கடினம், ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை நமக்கு கால அவகாசம் இருக்கிறது. மாறுவோம்,மாற்றுவோம்.



நாம் செவ்வாய் கிரகத்துக்கு அடியெடுத்து வைத்தோம், பிரதமரோ, அமைச்சரோ யாரும் செல்லவில்லை. மக்கள்தான் இதனை சாத்தியப்படுத்தினர். எமது விஞ்ஞானிகள் செய்தனர். ஆகவே தூய்மை இந்தியாவை நாம் படைத்திடமுடியும். எங்காவது குப்பையைப் பார்த்தால் அதனை அகற்றுங்கள். அதைப் படம் பிடித்தோ, வீடியோ எடுத்தோ சமூக வலைத்தளங்களில்வெளியிடுங்கள். தூய்மை இன்மையால் நாட்டுக்கு ஆண்டுக்கு 6,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது' என்றெல்லாம் பிரதமர் குறிப்பிட்டுப்  பேசி இருக்கிறார்.   



பிரதமரின் இந்ததிட்டத்திலும் உரையிலும் ஒரு சில பகுதிகள் நமது கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. அது பற்றிய ஒரு சிறு விமர்சனமே இந்தக் கட்டுரையின் கருவாகும்.



முதலாவதாக, மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா என்கிற திட்டம் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் அலங்கோலங்களையும் ஊழல்களின் பட்டியலையும் கவனிக்கும் பலரை விலா நோக சிரிக்க வைத்து இருக்கிறது. நாட்டைத் தூய்மைப் படுத்த வேண்டுமென்ற அரசின் நோக்கத்தில் நாம் களங்கம் கற்பிக்க  இயலாது. ஆனால் நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும் முதலில் தங்களையும் தங்களின் எண்ணங்களையும் நடவடிக்கைகளையும் தூய்மைப் படுத்திக் கொண்டார்களா என்று நம்மைப் பல கேள்விகளை கேட்க வைக்கிறது.  அதிலும் காந்தியின் பெயரை இதில் இழுத்து தங்களை ஒப்பிட்டுக் கொள்ள இவர்களில் எவருக்கும் தகுதி இருக்கிறதா என்பதே நமது முதல் கேள்வி.  இந்தக் கேள்வியை பொதுவான சிந்தனைக்கு சமர்ப்பித்துவிட்டு அடுத்த செய்திக்கு வருகிறோம்.



அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களிடையே புகழ்பெற்றுள்ள சில விளையாட்டு வீரர்களையும் திரைப்பட நடிகர்களையும் இந்த கோஷத்தில் பங்காற்றச் சொல்லும் வகையில் பிரதமர்  கேட்டுக் கொண்டிருப்பதற்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.



காரணம்,  தியாகங்கள் மூலமும் அர்ப்பணிப்பின் மூலமும் நாட்டுக்காக உழைத்த நல்ல தலைவர்களின் பெயர்களைச் சொல்லி ஒரு திட்டத்தை முன்னிலைப் படுத்துவதை விட திரைப்பட நடிகர்களையும் விளையாட்டு வீரகளையும் முன்னிலைப் படுத்தினால், அவர்கள் சொன்னால்தான்  மக்கள் கேட்பார்கள் என்கிற மக்களின் மன ஒட்டத்தை பிரதமரும் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார் என்றே இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஊறுகாய்  விளம்பரத்தில் கூட நடிகையின் படம் போட்டால்தான் மக்கள் வாங்குவார்கள் என்கிற மனநிலையும் பிரா விளமபரத்தில் கூட பொருத்தமில்லாமல் நடிகரின் படத்தை போட்டால்தான் விற்பனையாகும் என்கிற நிலைமை  நாட்டில் நிலவி வருவதை  உணர்ந்து   பிரதமர் அவர்களை இந்தப் பணியில் இணைத்து இருப்பது பாராட்டத்தக்கதே.



அடுத்து, தங்களது பகுதிகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதைப் படம் பிடித்து பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் போடும்படியும் மக்களை பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார். இதுவும் மக்களின் மனோதத்துவத்தைப் படித்த பிரதமரால்தான் முடியும் என்பதும் நமது கருத்து.



இப்படிப் படம் பிடித்து தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காகவாவது பொதுமக்கள் குறிப்பாக அடுத்த தேர்தலுக்கு குறிவைத்திருக்கும் அரசியல்வாதிகள் குப்பைகளை அகற்றுகிறோம் என்கிற பெயரில் தங்களையும் விளம்பரபப்டுத்தி வெளிக் கொண்டு வருவார்கள் என்று பிரதமர் நினைத்து இருக்கலாம். இந்த யுக்தியும் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் அதே நேரம் “ தெருத் தெருவாய்க் கூட்டுவது பொதுநலத் தொண்டு – ஊரார்  தெரிந்து கொள்ளப் படம் பிடித்தால் சுயநலம் உண்டு !



மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் –தம்
மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் “ என்று வாலி எழுதி சவுந்தரராஜன் பாடி எம்ஜியார் வாயசைத்த பாடலின் வரிகள் நமது நினைவுக்கு வருவதையும் ஏனோ நம்மால் தடுக்க இயலவில்லை.   ‘கோழி குருடாக இருந்தால் என்ன குழம்பு ருசியாக இருந்தால் சரி’  என்ற தத்துவத்தின்படி குப்பைகள் அகன்றால் சரி என்று பிரதமர் நினைத்து இருக்கலாம்.



இந்தத்திட்டம் தேச உணர்வால் உந்தப்பட்டது ; இது அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்றும்  பிரதமர் தனது ஆரம்ப உரையில் பேசி இருப்பதும் பாராட்டுக்குரியதுதான். அதே வேளை மராட்டியம் மற்றும் ஹரியானா இடைத்தேர்தல்களில் “ தூய்மை இந்தியாவை அறிமுகப்படுத்திய மோடி சர்க்காருக்கே வாக்களியுங்கள்” என்ற முழக்கங்களால் அந்த மாநிலங்களில் வாழ்வோரின் செவிப்பறைகள் கிழிந்துவிட்டதாக சொல்கிறார்களே அதற்கு என்ன செய்வது? ஆகவே அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்தத் திட்டமும் அரசுகளால் முன்னெடுக்க முடியாது என்பதே உண்மை.



ஆனால் ஒன்று நிச்சயம். அரசின் எந்ததிட்டமும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் முழுமையாக நிறைவேற்ற  இயலாது. அதிலும் குறிப்பாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, தூய்மைப் பணி ஆகிய காரியங்களில் அரசின் திட்டங்களை மட்டும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க் கூடாது என்பதே நமது கருத்து.   தூய்மை  இன்மையால் வருடத்துக்கு 6500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறி இருப்பதை மக்கள் இந்தப்பணம் தங்களின் சொந்தப்பணம் என்று சிந்திக்கத் தொடங்க  வேண்டும்.



தண்ணீர் ஓடுவதற்காக அரசோ  உள்ளாட்சி அமைப்புகளோ கால்வாய்களைத்தான்  வெட்டித் தர  முடியும். ஆனால் அவற்றில் குப்பைகளைக் கொண்டுபோய்க் கொட்டி தண்ணீர் ஓட வழி இல்லாமல் கொசுக்களை குடும்ப விருத்தி செய்ய வழி வகுப்பது யார்? பொது மக்கள்தானே!



கட்டணக் கழிப்பிடம் என்று காண்ட்ராக்ட் எடுத்து காசுகளை மட்டும் பறித்துக் கொண்டு கழிப்பிடங்களில் தண்ணீர் இல்லாமலும் கதவுகளை நொண்டி அடிக்கவும் வைத்திருப்பது யார்? பொதுமக்களில் ஒரு   பகுதிதானே !



கட்டணக் கழிப்பிடமென்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி வைத்து இருந்தாலும் ஆடு மாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு கண்ட இடங்களிலும் நாகரிகம் இல்லாமல் வெட்கமும் இல்லாமல் வேஷ்டி & லுங்கிகளைத் தூக்கிகொண்டு நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ  சிறு நீர்கழிப்பதும் பொதுமக்கள்தானே! 



அண்மையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தேங்கிக் கிடந்த சிறுநீர் அன்று பெய்த மழையில் பொங்கி வழிந்து பேருந்து நிலையம் முழுதும் நாற்றமெடுக்கவைத்ததற்கும் காரணம் பொதுமக்கள்தானே! இதுபோல காட்சிகள் நாடு முழுதும் காணலாமே! சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் வெட்டவெளியில் கழிக்கும் நிலையில் நாட்டை வைத்திருப்பது கேவலமாக இல்லையா?



 மங்கல்யான் விண்கலத்தை விண்ணுக்கு ஏவும் அளவுக்கு வளர்ந்துள்ள நாடு காலைக்கடனைக் கழிப்பதற்கு தனது மக்களுக்கு என்ன வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறது? அப்படியே வசதிகள் செய்து கொடுத்தாலும் அவற்றைப் பயன்படுத்தும் அறிவும் முறையும் பழக்கமும் நமது மக்களிடம் வளர்ந்துவிட்டதா?  சரியாக தண்ணீர் ஊற்றாமல் கிடக்கும் கழிப்பறைகள் நமது கண்களில் படுகின்றனவா இல்லையா?



சிங்கப்பூர் மலேசியா மற்றும் அரபு நாடுகளில் வேலை செய்யும் நமது தோழர்கள் அந்த நாடுகள் பின்பற்றும் சட்டபூர்வமான சுகாதாரவிதிகளை மீறுவதில்லை. உதாரணமாக ஒரு காரில் பயணம் போகும்போது அருந்தும்  குளிர்பானத்தின்  பாட்டில்களையும், பழங்களின் தோல்களையும் ஒரு பையில் போட்டு குப்பைப் போடுவதற்காக சாலை ஓரங்களில் பிரத்யோகமாக வைக்கப்பட்டு இருக்கும் கூடைகளில் நமது வண்டிகளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டுப் போட்டுவிட்டுச் செல்கிறோம். காரணம் அந்த நாட்டில் பின்பற்றப்படும் பயமுறுத்தும் சட்டங்கள்.



அதே நாடுகளில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும் நாம் விமான நிலையத்தில் இறங்கி வெளியேறியதும் சட்டங்களி மீறுவதற்கு நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடுவதாக உணர்கிறோம்.  பசிக்காக சாப்பிடும் பழத்தோலை நாம் பயணிக்கும் வண்டியில் இருந்து கொண்டே சாலையில் வீசி எறிகிறோமா இல்லையா? அப்படியானால் மற்ற நாடுகளின் தூய்மையைக் காக்கும் நாம்,  நமது பிறந்த நாட்டை நாமே       கேவலப்படுத்துகிறோம்தானே!



வெளிநாடுகளில் வேலை செய்யும் போது  பதினாறாவது மாடியில் குடி இருந்தாலும் காலை  நேரங்களில் வேலைக்குச் செல்லும்போது நாம் அணிந்திருப்பது  கோட் சூட்டாக இருந்தாலும் நமது கைகளில் முதல்நாள் நமது வீட்டில் சேர்ந்த மீன்குடல் போன்ற நாற்றக் கழிவுகளைக் கூட சுமந்துவந்து அதற்கான கூடையில் போட்டுவிட்டுத்தானே அலுவலகம் போகிறோம். ஆனால் நமது ஊரில்,  நமது வீட்டுக் கழிவுகளை,  கண்ட இடங்களில் நாமே கொட்டுகிறோமா இல்லையா? நமது ஒழுக்கமும் பண்பாடும் இன்னொரு நாட்டில் பயன்படுத்த மட்டும்தானா?



கண்ட இடங்களில் ஒன்று மட்டும் இரண்டாம் இயற்கைக் கடமைகளை நிறைவேற்றுவது, வீட்டு ஜன்னலிலிருந்து எச்சில் துப்புவது, பஸ்களில் பயணிக்கும்போது பட்டாணிக்கடலை மற்றும் நிலக்கடலைகளைக் கொறித்துவிட்டு அவற்றின் தோல்களைக் காற்றில் பறக்கவிட்டு சக பயணிகளின் முகத்தில் விழவைப்பது, மூக்கை சிந்தி சுவர்களில் தேய்ப்பது , உணவுவிடுதிகளில் வாய் கொப்பளிக்கிறேன் என்று பெருங்குடலும் சிறுகுடலும் ஒன்றாக வெளியே வந்து விழும் அளவுக்கு காரிக் காரித்துப்புவது ஆகிய பழக்கங்களை, ‘ பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரத நாடு’  என்று பாடிக் கொண்டே செய்யலாமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



பிளாஸ்டிக் உபயோகத்தை உள்ளூராட்சிகள் தடை செய்து நகரெங்கும் அறிவிப்புப் பலகைகள். ஆனால் நடைமுறையில் நல்ல பெரிய பையாக கேட்டும்  வாங்குகிறார்கள்; போட்டும் தருகிறார்கள். 



 விருந்துகளில் தண்ணீர் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் பரிமாறப்படும்போது அந்த சஹனில்,  சுற்றுச் சூழலைக் கெடுக்கும் விஷமும் சேர்த்து பரிமாறப்படுவதை நாம் உணர்கிறோமா?



குர்பானி செய்யப்பட்ட கறிகளை விநியோகிக்கும்போது நன்மையுடன் பாவத்தையும் பிளாஸ்டிக் பைகளில் சேர்த்து நாம் விநியோகிப்பதை நாம் எப்போது உணர்வோம்?



விருந்துக்கு வராத உறவினர்களுக்கு உணவு அனுப்ப பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி உணவுகளை சுடச்சுட அனுப்பும்போது அவர்களுடைய  வயிற்றுக்கு கேன்சரையும் சேர்த்து நாம் அனுப்புகிறோம் என்பதை எப்போது நாம் அறியப் போகிறோம்?



பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க நினைப்பவர்கள் அந்தப் பைகளின் உற்பத்தி நிலையங்களின் லைசென்சுகளை இரத்து செய்யாமல் விட்டு வைத்து இருப்பது ஏன் ? விஷம் வரும் வழியை அடைக்காமல் விஷ முறிவு ஊசி போடுவதால் பயன் உண்டா ?



சுத்தமும் சுகாதாரமும் அவரவர் வீடுகளில் பிறந்து வளர வேண்டிய செல்லக் குழந்தைகள். அவற்றை  அரசு மட்டும் வளர்த்துவிட இயலாது. பெற்ற பிள்ளைகளை  பேணி வளர்ப்பது போல் நாமும் சுயமாக முயற்சி செய்து வளர்க்க வேண்டும். Health is Wealth என்று சொல்வார்கள். “தூய்மை இறை வணக்கத்தில் பாதி   “ என்பது பெருமானார் ( ஸல்) அவர்கள் நவின்ற நபி மொழி . ‘சுத்தம் சோறு போடும்’ என்று ஆரம்பப் பள்ளிகளிலேயே படித்து இருக்கிறோம்.   ஆகவே ஆரோக்கியமான சுற்றுச் சூழல் மற்றும் தூய இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். இதை அரசுதான் செய்யவேண்டுமென்று தனிமனிதன் எதிர்பார்ப்பது,  தனிமனிதனின் தன்மையை தானே கேவலப்படுத்திக் கொள்ளும் செயலாகும்.

Thanks to: Adirai News