அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Saturday, January 17, 2015

[ 5 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரை பிரபலங்களின் ஆய்வின் நிறைவு பகுதி !

இது பாஸ்ட் புட் ( Fast Food ) காலம். அதே நேரம்,  இது புற்று நோயின் காலம் என்பதையும் சிறுநீரக் கோளாறுகளின் காலம் என்பதையும் மணித்துளிக்கொரு மாரடைப்பு மரணம் ஏற்படும் காலம் என்பதையும் மறுக்க இயலாது. மண்சட்டியில் உணவு சமைத்து உண்ட காலங்களில் மருத்துவ மனைகள் மாடமாளிகைகளாக உருவாகவில்லை; வளரவில்லை. குடிசைகளில் வைத்து மருத்துவம் பார்க்கப்பட்ட காலங்களில் இவ்வளவு பெயர் தெரியாத வியாதிகளும் உருவாகிவிடவில்லை. இதை ஒரு புறம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

நான் – ஸ்டிக் ( Non- Stick )  பாத்திரங்களின் காலத்தில்  நான்,  சிக் ( Sick )  என்று கூறப்படுவதை மறுக்க இயலுமா? இயற்கைக்கு மாற்றாக வளர்ந்த இன்றைய அறிவியல் வளர்ச்சிகள் உருவத்தில் பெருத்து இருப்பவைதான் மறுக்கவில்லை. ஆனால்  அவற்றை நமது அறியாமையின் காரணமாக வளர்ச்சி என்று நினைத்து  மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அது வளர்ச்சியல்ல, வீக்கம் என்பதை நாம் எப்போது உணர்வது? அறிவியல் வளர்ச்சிகளின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே வியாதிகளும் வளர்கின்றன என்பதை  யார்தான் மறுக்க இயலும்?

காவிரிப்படுகையில் மீத்தேன் வாயுவை எடுத்து நாட்டின் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதை இயற்கை ஆர்வலர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? நாடு முன்னேறுவதில் புதிய புதிய திட்டங்களைக் கொண்டுவருவதற்கு தடையாக நிற்கும் இவர்கள் பிற்போக்குவாதிகள் – நாடு முன்னேற்றம் காண்பதில் தடையாக இருப்பவர்கள் என்று நவீன விஞ்ஞானிகளும் அரசியல் வல்லுனர்களும் (வல்லூறுகள்?) ஆட்சியாளர்களும் குற்றம் சாட்டுகிறார்கள்.

சிரிக்கச்  சிரிக்க சொல்பவர்கள் சீரழிவுக்கு வித்திடுவார்கள்; அழ அழச் சொல்பவர்கள் அழகாக வாழச் சொல்வார்கள் என்பவை நமது கிராமத்து மண்ணுக்கு சொந்தமான வாசகங்கள். இன்று மீத்தேன் திட்டம் வந்து நம்மை ஈடேறப் போகிறது என்ற எண்ணத்தில் உலக வங்கி, உலகமயமாக்கல், அமெரிக்க ஏகாதிபத்தியம்  போன்ற சுயநலப் பொருளாதாரக் குவிப்பு அந்நிய நிறுவனங்களுக்குத் துணை போகத் துடிக்கும் நமது    அரசியல்வாதிகள், அன்னியரிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்த  மகாத்மா காந்தி சொன்ன வார்த்தைகளை ஏன் மறந்துவிட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை.

தேசத்தின் தந்தை, நமக்குத் தேவை   தற்சார்புப் பொருளாதாரமே என்று சொன்னார். நமது தேவைகளுக்கு நமது மூலவளங்களை மட்டுமே சார்ந்திருப்பது என்பதே இதன் பொருள். ஆனால் தாய் பிறன் கைபட சகிப்பவன்போல் நாயென வாழும் அரசியல் வித்தகர்களின் காட்டிக் கொடுக்கும் சேவைக்கு கட்டுக் கட்டாய் தரகுப் பணம் அந்நிய வங்கிகளில் அடைக்கலம் பெறுகிறது. இதில் மட்டும் கட்சிகளுக்கிடையே பாகுபாடுகள் இல்லை. பங்கு விகிதம்தான் பிரச்னை.

இன்றென்ன?  நமக்கு மின்சாரம் வேண்டும் அவ்வளவுதானே! இந்த மின்சாரத்தைப் பெறுவதற்கு நமது விவசாய நிலங்களைப் பலியிட்டுத்தான் ஆகவேண்டுமா? நம்மிடையே வேறு மாற்று வழிகள் இல்லையா? இதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம்? இப்படி சிந்திக்க மறுத்து சீரழிவுக்கு நாட்டின் கதவுகளைத் திறந்துவிடும் முன்னாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களின் சிந்தனைக்கு அவர்களுக்கு நாட்டின் நலனில் இன்னமும் அக்கறை இருக்கிறது என்ற எண்ணத்தில் சிலவற்றை சமர்ப்பிக்கிறோம்.

ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள் போன்ற பாரம்பரிய நீர் நிலைகளைக் கொண்டு நாம் விவசாயம் செய்து கொண்டிருந்த காலத்தில்தான் ’  சோழவள நாடு சோறுடைத்து’ என்று உலகம் நமக்குப் புகழாரம் சூட்டிப்  புகழ்ந்தது. பசுமைப் புரட்சி என்று நமது நிலங்கள் ஒரு அறிமுகமில்லாத அயல்நாட்டு முறைகளுக்கு வாழ்க்கைப்பட்டபோதுதான் நிலத்தடி நீர் என்கிற நீர் ஆதாரத்துக்கு மாற வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். இதன் விளைவாகவே நிலத்தின் கணக்கிட இயலாத ஆழத்தில்  இருந்து நீர் இறைக்க வேண்டி இருக்கிறது . நமது பாரம்பரிய நீர் ஆதாரங்கள் பராமரிக்கப்படாமல் மரணப் படுக்கையில்  போடப்படுவதால்தானே நீர் இறைக்க மின்சாரம் தேவைப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் ஆபீஸ், நீதிமன்றங்கள், ஆகியவற்ரின் கட்டிடங்களைக்  கட்டுவதற்கு நீர் நிலைகளின் மீது கை வைக்கும் திட்டங்களுக்கு அரசே அடிக்கல் நாட்டும்  அவல நிலையை மாற்றுவோம்.

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, வைகை, போன்ற ஆறுகளின் மீது நமக்குள்ள உரிமைகளை நிலை நாட்டுவதும், மழை நீரை சேகரித்து நிலத்தடி நீரை உயரச் செய்வதும், குளங்களை நிரப்புவதும், கண்மாய்களையும் ஏரிகளையும் ஆற்று வாய்க்கால்களையும்  வருடந்தோறும் தூர்வாரி நீர் ஆதாரங்களை நிறைவுடன் செய்து கொள்வதும், நகரமயமாதல் காரணமாக ஆலைக் கழிவுநீர் ஆற்று நீருடன் கலந்து அசிங்கப் படுத்துவதை தடுப்பதும் நமது மாற்றுத் திட்டங்களின்  அடிப்படையும் முதன்மையானதுமாகும். இதனால் விவசாயத்துக்கான மின்சாரத் தேவை இல்லாமல் போகிறது.

தோழர் கோ. திருநாவுக்கரசு என்பவர் அடிக்கடித் தொலைக் காட்சிகளில் தோன்றி இயற்கை வேளாண்மையின் மேன்மைகள் பற்றியும் மீத்தேன் திட்டத்துக்கு மாற்றுத் திட்டங்கள் பற்றியும் நமக்கு விளக்கி வருகிறார். இவர் மறைந்த இயற்கை விஞ்ஞானி திரு. நம்மாழ்வார் அவர்களின் பிரதான சீடர்களில் ஒருவர் ஆவார் . தோழர். கோ. திருநாவுக்கரசு அவர்கள் ஒரு மின் பொறியாளர்- அதற்கான பல பல்கலைக் கழகங்களின் பட்டங்களை வென்றவர். பல ஆண்டுகளாக, இயற்கை வேளாண்மை, நஞ்சற்ற உணவு, மரபு சாரா எரிபொருள், ஆகிய துறைகளின் அவசியத்தை வலியுறுத்தி தாளாண்மை உழவர் இயக்கத்தை தொடங்கி தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட கிராமங்களில் நடந்து சென்றேனும் விழிப்புணர்வு பரப்புரை செய்து வருபவராவார்.

ஒரு பட்டம் பெற்ற - சமூக நலத்தை தனது இதயத்தில் தாங்கிய திரு. கோ. திருநாவுக்கரசு அவர்கள் மீத்தேன் திட்டத்துக்கு மாற்றாக பல கருத்துக்களை திட்டங்களாக எடுத்து வைத்து அவைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று வினா எழுப்புகிறார்.

முதலாவதாக வெண்மைப் புரட்சி மூலம் வீடுகளில் அல்லது பண்ணைகளில்  காளை மாடுகளை வளர்ப்பது   இயற்கையோடு இசைந்த ஒரு முறை. நமது மண்ணை மாசுபடுத்தாத காளை மாடுகளைக் கொண்டு செக்குகளை இயங்கச் செய்வதன் மூலமாக  மின்சாரத்தை   உற்பத்தி செய்து   சேமிக்க முடியுமென்று குறிப்பிடுகிறார். இதற்கான திட்ட அறிக்கையும்  சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. கோயில்களில் பாலாபிஷேகம் செய்து கொண்டிருக்கும் அரசுத்துறை அமைச்சர்களும் அதிகாரிகளும்  அந்தத் திட்ட ஆவணத்தைப் பார்வை இட,  சற்று நேரம் ஒதுக்கினாலே போதும்.

அடுத்து,  அரசுக்கு சொந்தமான மற்றும் புறம்போக்கு நிலங்களில் மண்டிக் கிடக்கும் காட்டுக் கருவைகளை அழித்து ஒழித்து அந்த நிலங்களில் டீசல் தயாரிக்கப் பயன்படும் புங்கை மரம் புன்னை மரம் ஆகிய மரங்களை  வளர்த்து அவற்றின் காய்களின் உள்ளிருக்கும் விதைகளைப் பயன்படுத்தி எரிபொருள் தயாரித்து இயந்திரங்களுக்கும் வாகனங்களுக்கும் பயன்படுத்த இயலும். இதனால் பெருமளவு அந்நியச் செலாவணியும் மிச்சப்படும்.

தமிழகத்தில் உள்ள தரிசு நிலங்கள் மொத்தம் 2276848 ஹெக்டேர்களாகும். நாம் மேலே குறிப்பிட்ட புன்னை மற்றும் புங்கன் மரங்களை ஹெக்டேருக்கு ஆயிரம் மரம் வீதம் நட்டால் ஹெக்டேருக்கு சுமார் 2.5 டன் எண்ணெய் கிடைக்கும். மேலும் இதே தரிசு நிலங்களிலிருந்து தாவரங்கள் விளைவிக்கப் பட்டால் 5.7  மில்லியன் டன் தாவர எண்ணெயைப் பெற முடியும். இந்த உற்பத்தியைப் பெருக்க இன்னும் பல வழிமுறைகளும் உள்ளன. இந்த எண்ணெயை சுத்திகரித்து டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்த இயலும். ஜெனரேட்டர்களில் செலுத்தி மின்சாரம் தயாரித்துக் கொள்ளவும் முடியும். இந்தியத் திருநாட்டின் மொத்த டீசல் தேவையே ஆண்டுக்கு 38 மில்லியன் டன் தான்.

அன்னியப்படை நமது நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது போல் நமது வட்டாரங்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள காட்டுக் கருவை,  நமது மண்ணுக்கும் சுற்றுச் சூழலுக்கும் எத்தகைய ஆபத்தான தாவரம் என்பது பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரை இந்த வலைதளத்தில் 'காட்டுக் கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம்!!' பதியப்பட்டு விழிப்புணர்வூட்டபட்டு இருக்கிறது. கட்டுரையைப் படித்துவிட்டுப் பாராட்டி நான்கு வரிகள் எழுதினால் மட்டும் போதுமென்று நினைக்கிறார்களே தவிர, அவற்றை செயல் படுத்த வேண்டுமென்று செயல்படுவது ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது வேதனை தரும் விஷயம்.  இந்தக் காட்டுக் கருவையை போர்க்கால நடவடிக்கை எடுத்து அழித்து அந்த நிலங்களில் எண்ணெய் தரும் தாவரங்களைப் பயிரிடுவது மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் செயலாகும்.

மேலும் தமிழகத்தில் வீசும் காற்று 127428 மெகாவாட்  மின்சாரத்தைத் தரவல்லது. சீனா முதலிய நாடுகளில் வீசும் காற்றால் 60007 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்ய இயலும். காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தும் வகைகளில் போதுமான மின் கடத்திகள் மற்றும் மின் மாற்றிகளை ( Transformers and Distribution Boards) அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

காற்று அதிகமாக வீசும் மே முதல் அக்டோபர் மாதங்களில் உபரியாக காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்து ( Pumped Storage Facility ) என்ற அமைப்புகள் மூலம் நீரை சேமிக்கலாம். பின்னர் தேவைப்படும்போதெல்லாம்  ( Hydro electricity ) மூலம் நீரைத் திறந்து மின்சாரம் தயாரிக்கலாம்.

அடுத்து நாம் குறிப்பிட வேண்டியதில் முக்கியமானது மனித மற்றும் கால்நடைக் கழிவுகளின் மேலாண்மையாகும். ஒவ்வொரு கிராமம் முதல் நகரங்கள் வரை அன்றாடம் சேரும் மனித மற்றும் கால்நடைகளின் கழிவுகளில் இருந்தும் மின்சாரம் மற்றும் எரிசக்தியை தயாரிக்க இயலும். ஒரு கிராமத்துக்குத் தேவையான மின்சாரத்தை அந்த கிராமத்தில் சேரும் இத்தகைய கழிவுகளைக் கொண்டே தயாரித்துக் கொள்ளும் அமைப்புகளையும் அதேபோல் மாநகராட்சி முதல் நகராட்சி அளவுள்ள நகரங்களுக்கும் கூட அதே அமைப்பில் தேவையான எரிசக்தி மற்றும் மின்சாரத்தைத் தயாரித்துக் கொள்ளும் அமைப்பை நிறுவிடப் பொறியாளர்களிடம் செயல்திட்டங்கள் உள்ளன. அவற்றை அரசுப் பயன்படுத்திக் கொள்ள   முயலவேண்டும். இத்தகைய திட்டங்களின் மேலாண்மை மற்றும் அமைப்புகளின் மூலம் உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்ற வழி ஏற்படுவதுடன் வாகனங்களையும் கூட இயக்க இயலுமென்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்ட மனித மற்றும் கால்நடைக் கழிவுகளின் மூலமாக மின்சாரம் மற்றும் எரி சக்தி யூனிட் இப்போது எங்காவது அமைக்கப்பட்டு இயங்கி வருகிறதா என்ற கேள்வி உடனே நமது மனதில் எழும். ஆம்! தஞ்சை பெரியார் மணியம்மை பொறியியல் பல்கலைக் கழகம், சாஸ்திரா பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் மின்சாரத் தேவைகள் இந்த வகையில்தான் பூர்த்தியாகின்றன.

அடிப்படையில் திராவிடக் கழகத்தால் நடத்தப்படும் பெரியார் பலகலைக் கழகத்துக்கும்  காஞ்சி சங்கர மடத்தால் நடத்தப்படும் சாஸ்திரா பல்கலைக் கழகத்துக்கும் பல கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் இந்த மாற்று மின்சார அமைப்பு முறைகளை கையாள்வதில் இருவரும் ஒத்துப் போவது நமக்கு நல்லதொரு உதாரணமாகும்.

அதே அடிப்படையில் தனி நபர் வீடுகளின் உணவுக் கழிவுகள் மற்றும் கழிப்பறை மற்றும் கால்நடைக் கழிவுகளைத் திரட்டி அவரவர் வீடுகளுக்கு வேண்டிய மின்சாரத்தை அவரவர் தயாரித்துக் கொள்ள இயலும்.

புது டில்லி மாநகராட்சி நிர்வாகம், சாக்கடைக் கழிவுகளின் சுத்திகரிப்பு நிலையத்தின் கீழே படியும் அழுக்குகளின் அடுக்குகளை உயிரி செரிகலன்களில் இட்டு கிடைக்கும் எரிசக்தியை தூய்மை செய்து மீத்தேன் சக்தியாக அதை உருவாக்கி தலைநகரில் ஓடும் அனைத்து பேருந்துகளையும் இயக்கம் முக்கிய சக்தியாக மாற்றத் திட்டமிட்டு அதற்கானப் பணிகளைத் துவங்கிவிட்டார்கள் என்கிற செய்தி நமக்கு ஊக்கம் தருவதாக இருக்கிறது.

 இத்தகைய முறைகள் மூலமும் இதுபற்றிய தொடர்ந்த ஆராய்ச்சிகள் மூலமும் ஒரு புதிய மரபு சாராத சக்திக் கருவூலத்தை நாம் கண்டு வளர்க்க இயலும் என்று தோழர். கோ. திருநாவுக்கரசு அவர்கள் கூறுகிறார்கள் .

இவைமட்டுமல்ல. இன்னும் சொல்லலாம்... 
கரும்புச் சாற்றைப் பிழிந்த பின் எஞ்சும் சக்கையைக் கொண்டு கொதிகலன்களை சூடேற்றிக் கிடைக்கும் நீராவியைக் கொண்டு ஏறக்குறைய 12 to 18 மெகாவாட் அளவிலான மின்ஆக்கிகளை (HD Generators) இயக்குகிறார்கள். சர்க்கரை ஆலைகளின் மொலாசஸ் ( Molasses) என்ற நுரைத்த  கழிவு இன்று சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்கிறது. அத்துடன் அவற்றிலிருந்து குடி கெடுக்கும் எரி சாராயத்தையும் தயாரிக்கிறார்கள். ஆனால் உருப்படியான காரியமொன்று இதனைக் கொண்டு செய்ய இயலுமென்றால் மொலாசசைப் பயன்படுத்தி எத்தனால் என்கிற எரிபொருளை தயாரிக்க இயலும். இந்த முறை இன்றும் உலகில் பிரேசில் நாட்டில் உள்ளது. அந்த நாட்டின் அனைத்து வாகனங்களும் கரும்புச் சக்கையின் எத்தனால் சக்தியால்தான் இயக்கப்படுகின்றன. எத்தர்கள் நிறைந்துள்ள இந்த நாட்டிலும் இந்த எத்தனால் எரிவாயும் சாத்தியமே.

பனை மரம் போல வளர்ந்து இருக்கிறாய் பல எதுவுமில்லை என்று வீண் பொழுது கழிப்பவர்களை சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் பனைமரம் பயனற்றதா? இல்லை. பனைமரத்தின் பயனைப் பயன்படுத்தாத நாம்தான் பயனற்றவர்கள்.

ஒரு பனைமரம்  ஆண்டுக்கு சுமார் 120 கிலோ பனங்கல்கண்டைத் தரணிக்குத் தரவல்லது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பறந்து விரிந்து கேட்க நாதியற்றுக் கிடக்கும் பனைமரங்களைப் பராமரித்தால் அவை தமிழகத்தின் சர்க்கரைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்.  பனை வெல்லம்,  இன்று பரவலாகக் காணப்படும் சர்க்கரை வியாதியைத் தூண்டாது என்பது மட்டுமல்லாமல் பல்வேறு தாதுச் சத்துக்களையும் தன்னகத்தே கொண்டதாகும். இந்தத் தொழிலின்  வளர்ச்சி,  ஒரு குறிப்பிட்ட அடித்தட்டு சமுதாயத்தின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைவதுமாகும். இன்று நாம் பயன்படுத்தும் வெள்ளைச் சீனி வெள்ளைக்காரன் தந்த விஷமாகும். நமது உடலில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சும் தன்மை உடையது இது என்பதுதான் மருத்துவ உண்மையாகும். இந்த வெள்ளைச்சீனியை நமது வீடுகளில் இருந்து விடை கொடுத்து அனுப்பிவிட்டு அந்த இடத்தை பனங்கருப்பட்டிக்கும் பனஞ்சீனிக்கும்   தருவது பலவகைகளில் பயனளிக்கும்.
அப்படி என்றால் விளையும் கரும்பை என்ன செய்வது?

கரும்பை விளைவித்து அவற்றை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி அவை பிழியும் கரும்புச் சாற்றை வெள்ளைச் சீனி தயாரிக்கப் பயன்படுத்தாமல் எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தலாம். இதனால் அந்நிய செலவாணியை அளவின்றி விழுங்கும் பெட்ரோல்,  டீசல் போன்றவற்றின் பயனை பெரிதும் குறைக்கலாம்.  நமது மண்ணை மாசு படுத்தும் மீத்தேன் என்ற பிசாசைத் தேடிப்  போகாமல் இருக்கலாம். சுற்றுச் சூழலில் கார்பன்- டை- ஆக்சைடு, மாசுத்துகள்கள், புகை, எரிசாராய வாடை ஆகியன குறையும். புவி வெப்பமாதல் தடுக்கப்படும் . சர்க்கரை ஆலைகளைச் சுற்றி வசிப்போர் சுவாசிக்கும் காற்று சுத்தப்படும்.  

மீத்தேன் வாயுவை காவிரிப் படுகையிலிருந்து எடுக்கும் திட்டத்தின் ஆபத்தான விளைவுகளை கடந்த பல வாரங்களாக விவரித்தோம். தீ என்று தெரிந்தும் – இந்தத் திட்டம்   நம்மை வாழ்விக்க வந்தத் திட்டமென்று இதை நடைமுறைப் படுத்தி நாட்டை நாசப்படுகுழியில் தள்ள - அறிவியலார் சொல்லும் அனைத்து ஆலோசனைகளையும்  புறந்தள்ளிவிட்டு  - அரசியலார் ஆர்வமுடன் வரும் நோக்கமென்ன? இன்றளவும் இந்தத் திட்டத்துக்காக குஜராத் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை என்றால் தமிழ் இனத்தையே அழிக்கும் நோக்கில் இந்த அரசுகள் செயல்பட்டு வருகின்றன என்றுதான் நாம் குற்றம் சாட்ட முடியும். இதையே தோழர் மணியரசன் அவர்களும் கருத்தரங்கில் குறிப்பிட்டார். ஒரு புறம் தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக செய்துவரும் தொழிலைச் செய்ய இயலவில்லை; மறுபுறம் விவசாய நிலங்கள் பாலைவனமாக்க திட்டங்கள் தீட்டப் படுகின்றன; இன்னொரு புறம் குடிநீர் ஆதாரங்கள் அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப் படுகின்றன .   இவ்வளவுக்குப் பிறகும்  மத்திய அமைச்சர் அண்மையில் சொல்லி இருக்கும் அந்நிய நாடுகளுக்கு அடிவருடும் கருத்துக்களையும் தனிச் செய்தியாக காண்க.

கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கும் அரசுகளின் செயல்களை என்றும் எதிர்ப்போம் நாம்!  வாழ்வுரிமையைப் பறிக்கும் வஞ்சகத் திட்டங்களை வாழ்வு உள்ளவரை எதிர்ப்போம் நாம்! கவின் மிகு காவிரிப் படுகையில் கசடுமனம் படைத்தோரைக் கைவைக்க விடோம் நாம்!

நன்றி! வஸ்ஸலாம்.

கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு 2 : பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம். 

பகுதி I வாசிக்க:
Thanks to: http://www.adirainews.net/2015/01/5.html 

Wednesday, January 7, 2015

சொந்த பணத்தில் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் யாசின் !


உலகெங்கும் மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை சுரண்டப்பட்டு வேட்டையாடபடுகிறது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கையை நேசித்து வாழ்வின் லட்சியமாக கொண்டு இயங்கி வருகின்றனர். இவர்களை போன்றவர்களால்தான் இன்னும் இயற்கை அழிவுக்குள்ளாகாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது. வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையை சேர்ந்த வயதான ஒருவர் மரம் வளர்க்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இது வரை இவர் 1000க்கும் மேற்பட்ட மரங்களை  உருவாக்கி உள்ளார். கீழக்கரை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் யாசின்(70). இவர் பல ஆண்டுகளாக விறகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். விறகு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தாலும் பல்வேறு சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வானம் பார்த்த பூமியான பகுகளில் மரம் நடுவதில் அதிக ஈடுபாடு உடையவராக இருந்து வருகிறார்.


கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேம்பு, புங்கை, பன்னீர், வாகை சுமார் 1000க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களை சாலையோரங்களில் வளர்த்துள்ளார். தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுங்களை நட்டு பராமரிப்பு செய்து வருகிறார். இப்பகுதியில் மரங்கள் அழிக்கப்பட்டு பசுமை சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையில் இவரின் மரம் வளர்ப்பு பணி இப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது. 



இதுகுறித்து இயற்கை ஆர்வலர் யாசின் கூறியதாவது: 
விற்பனைக்கு வரும் விறகுகளை கண்டு மிகவும் மன வேதனையடைந்தேன். இதற்கு மாற்றாக நாம் ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் 10 வருடங்களுக்கு முன் மரக்கன்று நட தொடங்கினேன். பின்னர் அதுவே முழுநேர பணியாகி இப்போது நான் நட்ட கன்றுகள் 1000க்கும் மேற்பட்ட மரமாக வளர்ந்து நிற்கிறது. நாம் வாழும் காலத்தில் நாம் செய்யும் நல்ல பணிகள்தான் நம்மை நிம்மதியடைய செய்யும். பணம் தராத மன மகிழ்ச்சியை இந்த மரக்கன்று நடும் பணி தருகிறது. மனம் நிறைவாக இப்பணியை செய்து எனது வருமானத்தில் சுமார் 50 சதவீதத்தை இப்பணிகளுக்கு செலவிடுகிறேன் என்று தெரிவித்தார்.



இவரை போன்று நாமும் மரம் வளர்ப்போம்! இயற்கையை பேணி பாதுகாப்போம்!



நன்றி:தினகரன் & http://www.adirainews.net/2015/01/blog-post_77.html