Photo courtesy: http://www.adirainews.net/
கடந்த வருடம் நிறைந்த செடியன்குளத்தின் நீரை, தொடர்ந்த பெரும் நீர் கசிவினை தடுத்து பாதுகாக்க இயலாமல் போனதால் செடியன்குளம் வெகுசீக்கிரமே வறண்டு போனதை தொடர்ந்து, குளத்தின் நீர் வெளியேற்றுப்பாதையை செப்பனிடக்கோரி பலராலும் கோரிக்கை வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வருட மழைக்கு முன்பிருந்தே அதே கோரிக்கைகள் மீண்டும் நினைவுறுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இருநாட்கள் பெய்த மழையால் குளம் மீண்டும் ஓரளவு நிறைந்துள்ளது. மழையை பொழிவித்த எல்லாம் வல்ல ரஹ்மானுக்கே புகழனைத்தும்.
குளத்தின் நீர்மட்டம் மேலும் உயரும் முன்பு, போர்க்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள நீர் வெளியேற்று பாதையை சரி செய்து, இந்த வருட மழை நீரை நீண்ட நாள் சேமித்திடும் நோக்குடன் பராமரிப்பு பணிகளை துவங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் மீண்டும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
இப்போது இல்லையேல் குளம் நிறைந்து கசியத் துவங்கினால் மீண்டும் இவ்வருடத்தில் எப்போதும் சரிசெய்திட முடியாது என்ற நிலையுள்ளதால் தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) போன்ற தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி, பணிகள் விரைந்து முடிந்திட களமிறங்க கேட்டுக் கொள்கின்றோம்.
அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழைநீரை வீணடித்த குற்றத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும், மக்களின் நீண்ட நாள் பயன்பாட்டிற்காக மழைநீரை குளத்தில் சேமித்ததற்கான நன்மைகளை இறைவனிடம் பெற்றுக் கொள்ளவும் அனைவரும் முன்வருமாறு அன்புடன் நினைவூட்டுகின்றோம்.
முக்கிய வேண்டுகோள்:
பிலால் நகரை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு செடியன்குள வடிகால் வாய்க்காலையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி தரவும் மறக்க வேண்டாம்.
அதிரையிலிருந்து
S.அப்துல் காதர்
S.அப்துல் காதர்