அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, September 1, 2015

செடியன் குளம் கிணற்றின் ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் !

 
அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த குளம் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாதி மத பேதமின்றி நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செடியன் குளத்தில் நீர் வரத்து அதிகரித்தது. பொதுமக்கள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. மீண்டும் சில நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்தால் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வழிந்து ஓடும் நிலை எட்டிவிடும்.

செடியன் குளத்தின் தென்கரையில் பழுதடைந்த கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றின் வழியே கசிந்து வீணாக வெளியேறும் குளத்தின் நீரை பாதுகாக்கும் பொருட்டு கிண்ணற்றின் அடியில் உள்ள ஓட்டையை அடைக்கும் முயற்சியில் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளுக்காக ஊழியர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

 
 
 
 
 
 

Tuesday, August 25, 2015

செடியன்குளம் - மீண்டும் நினைவுறுத்துகிறோம்


 Photo courtesy: http://www.adirainews.net/

கடந்த வருடம் நிறைந்த செடியன்குளத்தின் நீரை, தொடர்ந்த பெரும் நீர் கசிவினை தடுத்து பாதுகாக்க இயலாமல் போனதால் செடியன்குளம் வெகுசீக்கிரமே வறண்டு போனதை தொடர்ந்து, குளத்தின் நீர் வெளியேற்றுப்பாதையை செப்பனிடக்கோரி பலராலும் கோரிக்கை வைக்கப்பட்டன.


இந்நிலையில், இந்த வருட மழைக்கு முன்பிருந்தே அதே கோரிக்கைகள் மீண்டும் நினைவுறுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் இருநாட்கள் பெய்த மழையால் குளம் மீண்டும் ஓரளவு நிறைந்துள்ளது. மழையை பொழிவித்த எல்லாம் வல்ல ரஹ்மானுக்கே புகழனைத்தும்.


குளத்தின் நீர்மட்டம் மேலும் உயரும் முன்பு, போர்க்கால அடிப்படையில் பழுதடைந்துள்ள நீர் வெளியேற்று பாதையை சரி செய்து, இந்த வருட மழை நீரை நீண்ட நாள் சேமித்திடும் நோக்குடன் பராமரிப்பு பணிகளை துவங்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் மீண்டும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.


இப்போது இல்லையேல் குளம் நிறைந்து கசியத் துவங்கினால் மீண்டும் இவ்வருடத்தில் எப்போதும் சரிசெய்திட முடியாது என்ற நிலையுள்ளதால் தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) போன்ற தன்னார்வலர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி, பணிகள் விரைந்து முடிந்திட களமிறங்க கேட்டுக் கொள்கின்றோம்.


அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழைநீரை வீணடித்த குற்றத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவும், மக்களின் நீண்ட நாள் பயன்பாட்டிற்காக மழைநீரை குளத்தில் சேமித்ததற்கான நன்மைகளை இறைவனிடம் பெற்றுக் கொள்ளவும் அனைவரும் முன்வருமாறு அன்புடன் நினைவூட்டுகின்றோம்.


முக்கிய வேண்டுகோள்: 
பிலால் நகரை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு செடியன்குள வடிகால் வாய்க்காலையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தப்படுத்தி தரவும் மறக்க வேண்டாம்.

 
அதிரையிலிருந்து
S.அப்துல் காதர்

Tuesday, July 28, 2015

செடியன்குளம் - ஒர் அவசர நினைவூட்டல்


நம்புங்கள், இது தான் இன்றைய செடியன் குட்டை, ஸாரி செடியன் குளம். 

சென்ற வருடம் அல்லாஹ்வின் அருள்மழை வர்ஷித்ததால் நிறைந்து வழிந்த குளத்தின் நீர் வெளியேற்றுப்பாதை சரியாக அடைக்கப்படாததால் தொடர்ந்து கசிந்து தண்ணீர் பெருமளவில் வெளியேறி இன்று ஓர் சாக்கடை குட்டை அளவிற்கு காட்சியளிக்கின்றது என்றாலும் இப்போதும் தினமும் நூற்றுக்கணக்காணோர் பயடைனந்து வருகின்றனர் என்ற நிதர்சனம் நிலவும் வறட்சியை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லா அனுதினக் காட்சிகள்.



சென்ற வருடம் குளத்து நீர் வீணாக வெளியேறிக் கொண்டிருந்தபோதே நாம் பலமுறை நடவடிக்கை வேண்டி கோரிக்கை வைத்தோம் அன்று செப்பனிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த மக்களுக்கு இதைவிட கூடுதலான நீர் தேங்கியிருந்து அவர்களின் மனதையும் உடலையும் நனைத்திருக்கும் அதன் நன்றிப்பெருக்கால் உங்களுக்கும் அல்லாஹ்விடம் மிகுந்த நற்கூலி கிடைத்திருக்கக்கூடும்.

சரி நடந்ததை விடுவோம் இனி நடக்கவிருப்பதை நன்மையாக்க முயல்வோம் 

தற்போது நமதூரிலும் அல்லாஹ்வின் ரஹ்மத்தான மழை அவ்வப்போது எட்டிப்பார்க்கின்றது இன்ஷா அல்லாஹ் செடியன் குளம் நிறையுமளவுக்கு அல்லாஹ் இந்த வருடமும் மழையை இறக்கலாம் என்பதால் போர்க்கால நடவடிக்கையாக செடியன்குளத்தின் நீர் வெளியேற்றும் கிணற்றுப்பாதையை உடனடியாக செப்பனிட்டு இந்த வருட மழைநீரை தேக்கிவைத்து மக்களுக்கு நீண்டநாள் கோடையிலும் பயன்கிடைக்க செய்ய வேண்டுகிறோம்.


பிலால் நகர் வருடாவருடம் வெள்ளத்தால் பாதித்து வரும் நிலையில், செடியன் குளத்திலிருந்து பொங்கி வழியும் தண்ணீர் அதன் வடிகால் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றினாலேயே அமைதியாக ஓடிவிடும். அதற்கு மாற்றமாக இப்படி அடுப்படி ஊதாங்குழலை பதித்து பொங்கிப் பெருகும் வெள்ளநீரை கொண்டு செல்ல நினைத்தால் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படப்போவது பிலால் நகர் தான் என்பதால் உடனடியாக .இந்த ஊதாங்குழல் சைஸ் பைப்புகளை அகற்றிவிட்டு வடிகால் வாய்க்காலை சுத்தப்படுத்தும் வழியை பார்ப்பதே சிறந்தது என சம்பந்தப்பட்டோருக்கு சொல்லி வைக்கின்றோம். 

Thursday, April 23, 2015

யார் மாற்றுத் திறனாளிகள்? வியக்க வைக்கும் இரு ஒருவர்!


ஈருடல் ஓருயிர், நான் பாதி நீ பாதி, என்னில் உன்னை காண்கிறேன் என்பன போன்ற வசனங்களையும் கவிதைகளையும் கேட்கும் போது வார்த்தை ஜாலங்களின் ஈர்ப்பு கற்பனை உலகில் மிதந்த செய்திருக்கும் ஆனால் கற்பனைக்கு மேல் நிஜமாய் வாழும் இந்த இரு மனிதர்களை பற்றி அறிந்தால் உங்கள் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் இனிய அதிர்வுகளை உங்கள் கண்கள் தாமே முன்வந்து சாட்சி சொல்லும்.

'அவருக்கு நான் கைகள், எனக்கு அவர் கண்கள்' என சிலாகித்து சொன்ன இரு அசாத்திய சாதனை மனிதர்களை பற்றி கல்ஃப் நியூஸ் பத்திரிக்கையில் வாசித்தவுடன் மேலும் அறிந்து கொள்ள இணைய பக்கங்கள் பல உதவின, அதன் நீட்சியே இச்சிறு தொகுப்பு.

தென்கிழக்கு சீனா, ஹெபய் மாகாணம், ஜின்ஜியாங் பிரதேசத்தின் 'ஏலி' என்ற குக்கிராமத்தில் பிறந்து இன்று உலக மாந்தர்களால் நேசிக்கப்படும் நண்பர்கள் ஜியா ஹய்ஸியா (வயது 53) மற்றும் ஜியா வென்கி (வயது 54). இவர்களில் ஹய்ஸியா பிறவியிலேயே கண்புரை நோயால் ஒரு கண்ணில் பார்வையை இழந்தவர் மற்றொரு கண்ணின் பார்வையும் 2000 ஆம் ஆண்டில் தொழிற்சாலையில் பணியாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் பறிபோனது. வென்கி 3 வயது பருவத்திலேயே உயர்அழுத்த மின்சாரம் தாக்கி தனது இரு கைகளையும் தோள் புஜங்கள் வரை முழுமையாக இழந்து வளர்ந்தவர், இவ்விருவரும் பள்ளிப்பருவம் முதல் நண்பர்கள்.

இவ்விருவராலும் என்ன செய்துவிட முடியும்? என்ற கேள்விக்குறியை ஏன் செய்ய முடியாது என்ற ஆச்சரியக்குறியாக மாற்றி செயல் இது தான். ஹய்ஸியாவுக்கு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டபொழுது உடல்நலமில்லா மனைவியும் நான்கு வயது மகனுமிருந்தனர். இவர்களையும் காப்பற்ற வேண்டும் தானும் பிறருக்கு சுமையாகவும் அமைந்துவிடக்கூடாது என்ற உந்துதலால் நண்பர்கள் இருவரும் தங்களின் வாரிசுகளின் எதிர்கால நலன், கிராமத்தின் நலன், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உழைப்புக்காக பிராந்திய அரசிடமிருந்து கிடைக்கும் சொற்ப ஊக்கத்தொகை ஆகியவற்றை கருதிற்கொண்டு கூட்டாக ஒரு முடிவெடுக்கின்றனர்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் தங்களின் பிராந்திய அரசிடமிருந்து சுமார் 8 ஏக்கர் தரிசு நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்றனர். அதில் இன்று வரை சுமார் 3 ஏக்கர் நிலத்தில் 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து தங்கள் பகுதியை பசும்சோலையாக மாற்றியதுடன், தங்கள் கிராமத்தை வெள்ளப் பெருக்கிலிருந்தும் காத்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி வாழ மறைமுகமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவியுள்ளனர்.

தினமும் காலை 7 மணிக்கு தங்களின் அன்றாட பணியை கைகோடாறி, சிறிய கடப்பரையை சுமந்து கொண்டு துவங்கும் இவர்களின் செயல் ஆரம்பத்தில் வழமைபோல் சக கிராமத்தினரின் ஏளனத்திலிருந்து தப்பவில்லை ஆனால் இன்று அதே கிராமத்தினர் வியந்து தாமாக உதவி செய்கின்றனர், இதுவே அவர்கள் 'சீன ரத்னா'வை பெற்றதற்கு சமன். 

தினமும் சிறு தொகைக்கு வாங்கப்படும் மரக்கன்றுகளையும், பெரிய மரங்களிலிருந்து கழிக்கப்படும் கிளைகளையும் மீண்டும் நடுகின்றனர். அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர் எல்லாம் ஒரு நேர்த்தியான திட்டமிடல்களின் அடிப்படையில் மிகவும் சீராக அவர்களின் சக்திக்கு உட்பட்டு நடைபெறுகின்றன. இருவர் ஒருவராய் மாறி சுற்றுச்சூழலுக்கு தொண்டாற்றும் நண்பர்களின் உழைப்பு இன்று உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

தற்போது இவர்களுடைய சாதனை உலக மீடியாக்களின் வெளிச்சத்தில் பட்டு பாரெங்குமிருந்து பாராட்டுக்களும் உதவிகளும் குவிந்தவண்ணமுள்ளன. மேலும் ஹய்ஸியாவுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்திடவும் மருத்துவமனை ஒன்று முன்வந்துள்ளது, கண்தானம் கிடைப்பதற்கு அவருடைய முறைக்காக காத்திருக்கிறார் ஹய்ஸியா.

வார்த்தைகளில் வடிப்பதைவிட புகைப்படங்களை பார்த்துவிட்டு உரக்கச் சொல்லுங்கள் உண்மையில் மாற்றுத் திறனாளிகள் அவர்களா? அல்லது உடல் குறையின்றி எல்லாமிருந்தும் காடு, கரை, வயல், வனங்களை (வளர்ச்சியின் பெயராலும்) அழித்தொழிப்பவர்களா?

நல்லோர் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும் வாழ்த்துவோம்! வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடன் கரம் கோர்ப்போம்!! கை தூக்கி விடுவோம்!!!

தொகுப்பு:
அதிரைஅமீன்




















Tuesday, April 7, 2015

இவரை நாமும் அறியவேண்டும்

ஏற்கனவே நமது தளத்தில் இவரை பற்றி 'மக்களின் பாரத ரத்னா' என்ற பெயரில் வெளியிடப்பட்ட பதிவு.
பொதுவாக தனி ஒரு மனிதனால் எந்தவொரு செயலிலும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாது, ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி தனி ஒரு மனிதன் நினைத்து உத்வேகத்தால் செயல்பட்டால், எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஒரு சாமானியன், குக்கிராமவாசி இன்று மத்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெறப்போகிறார். இந்த ஆண்டு இந்த பத்ம விருது பெற்றவர்களில் பலர் நிச்சயமாக அவர்களின் சேவைக்காக போற்றப்பட வேண்டியவர்கள். அதேநேரத்தில் சாமானியர்களும் அவர்களின் உன்னத சேவையால் இந்த உயரிய விருதை பெறமுடியும் என்ற வகையில், எங்கோ நாட்டின் மூலையில் உள்ள ஒரு சமூகசேவகரின் செயலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் அன் சங் ஹீரோ என்பார்கள். அதாவது சிலரின் உயர்ந்த சேவைகள் உலகுக்கே தெரியாதவகையில், அந்த மாமனிதர்களின் தியாகங்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும். அப்படி ஒருவரை தேடிப்பிடித்து, இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.

பத்மஸ்ரீ பட்டியலில் 36–வது எண்ணில் இருந்த காட்சிக்கு எளியவரான ஒரு பாமர மனிதர் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதியிடமிருந்து பத்மஸ்ரீ பட்டத்தை பெறப்போகிறார். யார் இந்த அருமனிதர்? என்பதை நாடு அறிந்தால்தான் அவரை மற்றவர்களும் பின்பற்ற முடியும். அவர் பெயர் ஜாதவ் மோலை பெயங். இந்தியாவின் வனமனிதர் என்று அழைக்கப்படுபவர். அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாத் மாவட்டத்தைச் சேர்ந்த மோலை கதோனி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். 1979–ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெருவெள்ளம் அந்த கிராமத்தையும், அதன்பக்கத்தில் உள்ள ஊர்களையும் அழித்துவிட்டது. அந்தநேரத்தில் அரசாங்கம் அந்த ஊரின் அருகில் உள்ள சந்த்பார் என்ற தரிசு பகுதியில் மரம் நடும் பணிகளில் பெயங்கையும் மற்றும் சில தொழிலாளர்களையும் ஈடுபடுத்தியது. மற்றவர்களெல்லாம் ஏதோ வேலை செய்தோம், கூலி கிடைத்தது என்று போய்விட்ட நிலையில், ஜாதவ் பெயங் மட்டும் அந்த பகுதியில் உள்ள ஏறத்தாழ 1,400 ஏக்கர் தரிசு நிலத்தையும் அடர்ந்த காடாக ஆக்குவேன் என்று உறுதிபூண்டு, முதலில் மூங்கில் மரக்கன்றுகளை நடத்தொடங்கி, தொடர்ந்து அனைத்து மரக்கன்றுகளையும் தனி ஆளாக நடத்தொடங்கினார். தன் பிழைப்புக்காக பசுமாடுகள், எருமைகளை வளர்த்து, அதன் பாலை வைத்து பிழைப்பு நடத்துகிறார். ஏழ்மை அவர் லட்சியத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. 1979–ம் ஆண்டு தொடங்கிய அவரது முயற்சியால், இன்று அந்தப்பகுதி அடர்ந்த காடாகிவிட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களைக்கொண்ட இந்த காடு இப்போது காண்டாமிருகங்கள், சிறுத்தைகள், யானைகள், முயல்கள், குரங்குகள், பறவைகள், பாம்புகள், கழுகுகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மாடுகள் என ஏராளமான மிருகங்கள், பறவைகளுக்கு வாழ்விடமாக ஆகிவிட்டது.

கிராமங்களில் நல்ல மாடு உள்ளூரில் விலை போகாதுஎன்பார்கள். அதுபோல, இவரது அரும்பெரும் முயற்சியைக்கண்டு முதலில் 2012–ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டில்தான் அவரை அழைத்து கவுரவப்படுத்தினார்கள். அதன்பிறகுதான் இவரை இந்தியாவில் அடையாளம் கண்டுகொண்டார்கள். தனி ஒரு மனிதன் என்றாலும், அவன் நினைத்தால் எந்த லட்சியத்தையும் நிறைவேற்றமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பெயங் முயற்சியையும், வாழ்க்கையையும் இந்தியா முழுவதும் அறியச்செய்து, எல்லா இடங்களிலும் இதுபோல காடுகளை மக்கள் உருவாக்க மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாமே!
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Thanks to: Adirai News

Friday, March 27, 2015

தண்ணீர்: வழிகாட்டும் துபை




ராமநாதபுரத்தில் பெய்யும் மழையில் 1% மழைகூட ஓராண்டு முழுக்க இங்கு பொழியாது.


நன்னீர் ஏரிகள் எதுவும் இல்லை, ஆறுகள் இல்லை,நிலத்தடிநீர் இல்லை. ஓரளவிற்கு மேல் ஆழமாக தோண்டினால் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும்.



ஆனால் இந்த தேசம் தண்ணீரில் தன்னிறைவடைந்த தேசம்.24 மணி நேரமும் தடையில்லாமல் வீடுகளுக்கு தண்ணீர் வரும்.



முழுக்க முழுக்க கடல்நீரை மட்டுமே நம்பி நா நனைகிறது.



குடிக்கும் நீர் கடலில் இருந்துதான் எடுக்கப்பட்டது என சத்தியம் செய்து சொன்னாலும் சிலர் நம்ப மறுப்பார்கள்.



'காசுக்கு ஏற்ற தோசை' என்பதுபோல இங்கு தண்ணீர் 'காஸ்ட்லி'தான்.



1லி பெட்ரோல் 1.80 திர்ஹம்ஸ் (ரூ.30) 1லி தண்ணீர் குடுவை கடைகளில் 3 திர்ஹம்ஸ் (ரூ.51)விலைக்கு விற்பனையாகும்.



Dubai Electricity and Water Authorityயால் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் நீர் இந்த அளவிற்கு அதிக விலை இருக்காது.நீரின் தரமும் நன்றாகவே இருக்கும்.



DEWA வீடுகளுக்கு தண்ணீரை விநியோகித்து மட்டும் கட்டணம் வசூலிப்பதில்லை.வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீருக்கும் அதன் அளவை பொறுத்து கட்டணம் உண்டு.



வீடுகளிலிருந்து வெளியேறும் அந்த கழிவு நீர்தான் மறுசுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்கள்,பூச்செடிகள்,பூங்காக்களுக்கு சொட்டு நீர்,தெளிப்பு நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.

ஜீலை,ஆகஸ்ட் மாதங்களில் சர்வசாதாரணமாக 115° F வெப்பம் வீசும் காலத்திலும் இங்கு சாலை ஓரங்களில் பல வண்ண பூக்கள் பூத்துக்கொண்டிருக்கும்.

அந்த செடிகளின் வேர்களில் நீர் சொட்டிக்கொண்டிருக்கும்.



தண்ணீரை வீணாக்காமல் அதைக்கொண்டு நகரை அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை ரசிக்க செய்கிறார்கள்.



இன்று உலக தண்ணீர் தினம் என்றதும் ,ஒரு காலத்தில் தண்ணீரில்லாத இந்த தேசம் இன்று நீர் மேலாண்மையில் பெற்றிருக்கும் ஆற்றலை எழுத வேண்டும் என தோன்றியது.



- நம்பிக்கை ராஜ்


Thanks to: https://www.facebook.com/tamilnewsonly

Thursday, March 26, 2015

2050-ல் உலகமே தண்ணீருக்கு அடித்துக் கொள்ளும் !!?

adiraitiyawest

2050ஆம் ஆண்டில் உலகம் தண்ணீருக்காக சண்டை போட்டுக்கொள்ளும் நிலை உருவாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் ’வைலி இன்டர்டிஸிப்ளினரி ரிவ்யூஸ்’ என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளது. உலகில் தண்ணீரின் பயன்பாடு இப்போது உள்ளது போன்றே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் மத்தியில் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின் பயன்பாடு மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை அடைப்படையாக கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய தொழில்நுட்பங்கள், விழிப்புணர்வு காரணமாக, 1980-ஆம் ஆண்டு முதல் நீரின் பயன்பாடு குறைந்துள்ளது என்பது உண்மை.
அதே சமயத்தில், தேவையான நீரை உற்பத்தி செய்வதும் தேக்கம் அடைந்துள்ளது.
தற்போது உலக மக்கள்தொகை சுமார் 700 கோடியாகும். 2050-ஆம் ஆண்டில் இது 960 கோடியாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல், கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுப்பதில் புதிய தொழில்நுட்பம் உருவாதல் ஆகியவைதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to: http://adiraitiyawest.blogspot.ae/2015/03/2050.html

Saturday, March 21, 2015

இன்று உலக வன நாள் (மார்ச்--21)

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 20.5% வனங்கள்.
அதாவது 6,75,539 சதுர கிலோமீட்டர்.

இந்தியா போன்ற வெப்பநிலை கொண்டநாட்டில்
33% வனங்கள் இருக்கவேண்டும்.

இல்லாதது ஒருபக்கம்
இருப்பதிலும் சராசரியாக வருடம் ஒன்றிற்கு
1.3 மில்லியன் ஹெக்டேர் வனங்கள் இங்கு அழிக்கப்படுகிறது.

ஒரு ஹெக்டேர் என்பதை
2.47 ஆல் பெருக்கினால் வருவதே
ஒரு ஏக்கர்.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு
1,30,058 சதுர கிலோமீட்டர்

இதில் வனங்களின் பரப்பு
21,482 சதுர கிலோமீட்டர்
இது 16.5%

அப்புறம் மழை எங்குட்டுக்கூடி பெய்யும்?
இன்று உலக வன நாள் (மார்ச்--21)

நன்றி: சூர்யா சேவியர்

FB / Shared By : N. Senthil Kumar

Thursday, March 19, 2015

நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி பி.ராமராஜ் சாதனை


தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோம்பை கிராமம். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் இருப்பதால், மழை மறைவு (மழை பெய்யாத) பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் பல இடங்கள் வானம் பார்த்த பூமியாக கிடந்தது. சில இடங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு என மானாவாரி சாகுபடி மட்டும் நடந்து வந்தது.

இந்நிலையில், கோம்பை பேரூராட்சித் தலைவராக கடந்த 1996-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ராமராஜ் என்ற விவசாயி, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மானாவாரி சாகுபடி தவிர, மற்ற காய்கறிகளை சாகுபடி செய்ய, தமிழக அரசுடன் இணைந்து தற்போது வரை சிறியதும், பெரியதுமான நானூறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளார்.
தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பு

74 வயதானாலும் இளைஞரைப் போல சுறுசுறுப்புடன் வேலை செய்து வரும் பி. ராமராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கோம்பை மேடான பகுதி என்பதால், முல்லை பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் வழியாக தண்ணீரைக் கொண்டு வரமுடியில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. பல விவசாயிகள் பிழைப்பு தேடி, வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் தொடங்கியது எனக்கு வேதனை அளித்தது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய நினைத்த நேரத்தில், அரசு 1997-ம் ஆண்டு நதி நீர் பள்ளத்தாக்கு திட்டத்தை, தேனி மாவட்டத்தில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் கோம்பை பேரூராட்சியையும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டேன். இதனையடுத்து, செயற்கைக் கோள் மூலம் கோம்பை பகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஓடைகளை கண்டறிந்து, அதன் குறுக்கே எனது பதவிக் காலத்திலேயே 240 தடுப்பணைகள் கட்டப்பட்டன. மானாவாரி காடுகளில் நீரை தேக்க 1500 ஏக்கருக்கு மண் கரைகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

பின்னர், தேர்தலில் போட்டியிடாமல் மேற்குமலை தொடர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் என்ற சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்துகொண்டு தோட்டக்கலை பொறியியல்துறை மூலம் ஆண்டுதோறும் 5 தடுப்பணைகள் வீதம் 10 ஆண்டுகளில் 50 தடுப்பணைகளும், வனத்துறை மூலமாக 48 தடுப்பணைகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்களிப்புடன் இரண்டு பெரிய தடுப்பணைகளும் என, இதுவரை 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் 36 தடுப்பணைகள்
தற்போது தோட்டக்கலை பொறியியல் துறை மூலம் 36 தடுப்பணைகள் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழைநீர் சேமிப்பு, மண்வள பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் என்ற மற்றொரு புதிய சங்கத்தைத் தொடங்கி சேதமடைந்த தடுப்பணைகளை அரசு உதவியை எதிர்பார்க்காமல், இதுநாள் வரை விவசாயிகள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இப்பகுதியில் மானாவாரி விவசாயமே நடந்துவந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், கடந்த சில ஆண்டுகளாக தென்னை, வாழை, கொத்தமல்லி என மற்ற பயிர்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
வெளியூர் சென்ற விவசாயிகளும் சொந்த ஊருக்குத் திரும்பிவந்து விவசாயத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர் என்றார்.

நன்றி : தி இந்து ( 18.03.2015)
முகநூல் பகிர்வு:  பழநி பெரியசாமி

Thursday, March 12, 2015

மரங்கள் என்றும் பசுமை





கொற்றக் குடைகள். மரங்களின் பயன்கள் மகத்தானவை.
பசிக்குப் பழங்கள் தருகின்றன. நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றன. சுவாசிக்கக் காற்றைத் தருகின்றன. குழந்தைகளுக்குத் தொட்டிலையும், இளமைப் பருவத்தில் சுட்டிலையும், முதுமைப் பருவத்தில் ஊன்று கோலையும், இறக்கும்போது எரிக்க விறகையும் தருகின்றன. மரங்களின்றி வாழ்வு ஏது?

உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம், மரம் நமக்கு என்ன தருகிறது?
மலர்கள், காய், கனிகள் தருகிறது, நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது, காற்றை சுத்தப்படுத்துகிறது, நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.

ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது. ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை.

மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:

1.
மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

2.
நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

3.
மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

4.
மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

5.
மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது.

6.
மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

7.
கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

8.
புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் (Mangrove swamps) வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

9.
உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

10.
மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்இப்படி தமிழ்நாட்டின் சாலைகளில் ஓடும் லாரிகளின் பின்புற தகட்டில் எழுதி வைத்திருப்பார்கள். மக்களை மரம் வளர்க்க தூண்டுவதற்கு இது உதவுமாம். (வேற என்னத்த சொல்ல கேட்டுக் கொள்ள வேண்டியது தான்). கோடிக்கணக்கில் செலவழித்து எத்தனையோ இலவசங்களை வழங்குகிறார்கள். இது போல் மரங்களை வாரி வழங்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு மிகப்பெரிய மழைக்காடு நிறைந்த மாநிலமாக மாறியிருக்கும்.
ஆனால் யாரும் செய்யவில்லை. என்ன செய்வது?

இது இருந்து விட்டு போகட்டும். உங்களால் முடிந்தால், உங்கள் வீட்டில் சிறிய அளவு இடம் இருந்தால் போதும்.

ஒரு தென்னங்கன்றை நடவு செய்யுங்கள். அது உங்களுக்கு ஏராளமானவற்றை இலவசமாக வாரி வழங்கும். இளநீர், தேங்காய், வீட்டு மொட்டை மாடியில் கூரையால் ஆன குளு குளு அறை, வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம், தலைக்கு தடவ எண்ணெய், தேங்காய் துருவல், வீட்டில் செடிகள் வளர்க்க கொடிப்பந்தல் அமைக்க கம்புகள் இப்படி தென்னையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பறிக்கப்படும் தேங்காய்கள், இட்லிக்கு சட்னியாவதும், ஆப்பத்துக்கு பாலாகும் போதும், ஏப்ரல் மாத வெயிலில் இளநீர் ஆவதுமாக தென்னையின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இளநீருக்கு மனிதரின் முதுமையை குறைக்கும் ஆற்றல் பலமாக இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தென்னை மரத்தின், இலை, தண்டு, பூ, மடல், தேங்காய் பிசிறுகள் என்று அனைத்துமே மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது. தேங்காய் நார்களை கொண்டு தற்போது அழகான மிதியடிகள், தரைவிரிப்புகள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.

தேங்காய் ஓட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சட்டை பித்தான்கள் செய்யவும், எரிபொருளாகவும், பயன்படுகிறது. மரத்தின் தண்டு எரிபொருளாகவும், வீட்டுக்கான உத்திரம் போடவும், தூணாகவும் இருக்கிறது. கிராமங்களை கடந்து செல்லும் நீரோடைகள், கால்வாய்களை கடக்க தென்னை மரத்தின் தண்டு இருப்பதை பல இடங்களில் பார்க்க முடியும். தென்னை ஓலை தான் இன்றைய டிஜிட்டல் காலத்திலும் நகர வீடுகளின் குளிர்ச்சியான கூரை வேய்ந்த அறைகளை உருவாக்க முதல் தேர்வாக இருக்கின்றன.

மரத்தின் பாளையை, அதாவது பூமடலை நீரில் ஊற வைத்து ஊசியினால் சீராக நீளமாக கிழித்து எடுத்து அதனை வேலி கட்டவும், கூரை வேயவும் பயன்படுத்துகிறார்கள்.

தென்னை ஈர்க்குகள் வீடு சுத்தம் செய்ய துடைப்பமாக மாறிவிடுகிறது. உலர்ந்த கொப்பரையிலிருந்து கிடைப்பது தேங்காய் எண்ணெய். காலையில் எழுந்தவுடன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி குளித்தால் தான் பூரணமாக குளித்த சுகம் கிடைக்கும்.

தென்னை அதிகம் வளரும் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தான் பிரதான சமையல் எண்ணெயாக பயன்படுகிறது. தேங்காயை அரைத்துப் பிழிந்தெடுக்கப்படும் தேங்காய் பால் இனிப்பும், துவர்ப்பும் சேர்ந்த ஒரு கலவை. இது குடல்புண், வாய்ப்புண்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக இருக்கிறது.

பகிர்வு: நண்பர் N. செந்தில்குமார்
முகநூல் வழியாக