அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Saturday, November 29, 2014

மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் !?

ஒரு காலத்தில் கிராமங்களில் மட்டுமல்லாது மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பெரிய ஊர்களிலும் நகரங்களிலும் கூட ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் வளர்ப்பு பிராணிகளாய் ஆடு, பசுமாடு, எருமைமாடு, கோழி, சேவல், வாத்து, வான்கோழி, கிண்ணிக்கோழி, பச்சைக்கிளி, மைனா, முயல் என வகைவகையான பிராணிகள் பறவை இனங்களென்று வளர்க்கப்பட்டு வந்தது. அந்த பிராணிகளுக்கும் ஒரு பாதுகாப்பாகவும், புகழிடமாகவும் இருந்தது. இந்த வாயில்லா ஜீவன்களை வெறும் வளர்ப்பு பிராணிகளாய் மட்டும் கருதாமல் அந்த வீட்டின் உறுப்பினர்களில் ஒருவர் போல நினைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டது.

ஒரு நேரத்தில் தெருப்பகுதியை கடந்து செல்லும்போது ஏதாவது ஒரு வளர்ப்புப் பிராணிகளின் சப்தம் நம் செவிகளுக்கு கேட்கும். ஆளில்லாத வீடுகளிலும் இந்தப் பிராணிகளின் சப்தத்தில் வீட்டில் ஆள் இருப்பது போலத்தோன்றும்.

இந்தப் பிராணிகளுக்கும் தன்பிள்ளைகளுக்கு பெயர் வைத்து அழைப்பது போல் பெயர் வைத்து அழைப்பதும் உண்டு. காலை மாலை என உணவுகளையும் மறக்காமல் கொடுத்து தம் மனிதாபிமானத்தை ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் செய்து அந்தப் பிராணிகளிடம் அன்பு காட்டி வந்தனர். இன்னும் சொல்லப் போனால் கிளி, மைனா போன்ற சில பறவை இனங்கள் நாம் பேசும் மொழியினை கூர்ந்து கவனித்து தினமும் செவிகொடுத்து கேட்டு வருவதால் நம்மோடு சேர்ந்து அப்பிராணிகளும் பேசுவதை கேட்க இனிமையாய் இருக்கும்

இந்த செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்க்கென்று வீட்டுப் பின்புறப் பகுதிகளில் மாட்டுக் கொட்டகை, ஆடு கட்டிப் போடுவதற்கென்று தனி இடம், கோழியை பாதுகாக்க கோழிக்கூடு, மற்ற பறவைகள் கிளிகளுக்கென தனி கூண்டு அமைத்தும் பாதுகாக்கப்பட்டு வந்தன

சில வளர்ப்பு ஆடு மாடுகள் காலையில் வீட்டை விட்டுச் சென்றால் சுதந்திரமாக சுற்றித் திரிந்து விட்டு மாலைப் பொழுது ஆனதும் தனது சொந்தவீட்டுக்குத் திரும்பி வருவது போல வீடு வந்து சேர்ந்துவிடும்.. வீட்டில் வளர்க்கும்போது அந்தப் பிராணிகளுக்கு பாதுகாப்பும் சுதந்திரமும் இருந்தன. அப்பகுதிகளில் வசிப்போருக்குக் கூட இன்னார் வீட்டு மாடு, ஆடு என அடையாளம் அறிந்து கொள்வதால் யாரும் அந்த வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவதில்லை. ஆகவே அதற்கு அதிகப்பாதுகாப்பாக இருந்தது.

ஐந்தறிவைக் கொண்ட படைப்பினங்களாக இருந்தாலும் தமக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களிடம் அன்பொழுக பழகிவரும் பிராணிகளாய் இருந்தது. நன்றியை தன் சமிக்கையாலும், சைகையாலும் தனக்கே உரித்தான சப்த ஒலியாலும் காண்பித்து வந்தது.

உதாரணத்திற்கு சொல்லப் போனால் அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது வீட்டிற்குள் வந்தால் தனது குரலை உயர்த்தி தனக்கே உரித்தான ஓசையை எழுப்பி நம்மை உஷார் படுத்திவிடும். விஷ ஜந்துக்கள் ஏதும் தமது கண்களுக்கு தென்பட்டாலும் சரி, இரவில் திருடர்களோ, மற்ற ஏதாவது விபரீத நிகழ்வுகள் நடந்தாலோ இந்த வளர்ப்புப் பிராணிகள் எழுப்பும் சப்தத்தினால் தான் அறிந்திட முடியும்.

இப்படி எத்தனையோ வகையில் நமக்கு பக்க துணையாக இருந்து வந்த இந்த செல்லப் பிராணிகளின் நிலைமை இப்போது பரிதாபத்திற்க்குரியவையாக மாறிவருகின்றது. நாளுக்கு நாள் வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இந்தப் பிராணிகளை இப்போது வீட்டில் வளர்ப்பதை அசிங்கமாக கூட கருதுகின்றனர். . நாகரீகத்தின் முன்னேற்றத்தில் மூழ்கியிருக்கும் இந்தக் காலத்தில் இத்தகைய பிராணிகளை வளர்க்க இப்போது அதிகபட்சம் அக்கறை காட்டுவதில்லை. யாரும் விரும்புவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கின்றது.

ஒருகாலத்தில் நமக்கு உதவியாகவும், துணையாகவும் இருந்த இந்தச் செல்லப் பிராணிகளை மீண்டும் வளர்க்கத்துவங்குவோம். அதற்கும் வாழ்வளிப்போமாக !!!

Thanks to News Source:
http://nijampage.blogspot.ae/2014/02/blog-post_26.html

அதிரை மெய்சா 

No comments: