கடந்த வாரம் நாம் எழுதிய மீத்தேன் வாயுத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏற்படும் பேரழிவுகளின் பட்டியலைப் படித்தவர்களுக்கு அந்தத் திட்டம் ஒரு புதையல் அல்ல; புதைகுழி என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்கலாம்.
அழிவுப் பட்டியலில் இன்னும் இருக்கின்றன ஏராளம். அந்த ஏராளத்தில் அழிவுகளும் அமைதியின்மையும்தான் தாராளம் என்று குறிப்பிட்டு இருந்தோம். இதோ அவைகளின் மிச்சமும் சொச்சமும்.
நிலச் சரிவுகளும் நிலதடியுள் நிகழும் நிலக்கரி எரிப்புகளும்:-
நிலத்தடி நீரைத் தொடர்ந்து இறைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் அளவற்ற அளவில் கீழிறங்குகிறது என்று பார்த்தோம். அப்படி நீர் கீழிறங்கி காலி செய்யும் இடத்தை, நிலத்தின் மேல் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆக்கிரமிக்கின்றன என்பதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை. காவிரிப் படுகை என்பது காட்டுக் கருவை வளர்ந்துள்ள கட்டாந்தரையல்ல. தமிழகத்தின் கலாச்சார கேந்திரம். தஞ்சையின் பெரிய கோயில் முதல் கும்பகோணத்தின் கோணங்கள் தோறும் தோன்றும் கோபுரங்கள் வரை நாச்சியார் கோயில் என்றும் உப்பிலியப்பன் கோயிலென்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரமென்றும் வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில் உட்பட பலவேறு சமயங்களின் அடையாளங்களும் கலாச்சார சின்னங்களும் நீண்டகாலமாக நின்று நிலவும் நிலம். இவையாவும் புதையுண்டு போகிற வாய்ப்புகளை சுட்டிக் காட்டி அறிவியலார் அறிவுறுத்துகிறார்கள்.
அதோடு கூடவே, நிலத்தின் அடியில் படுகையாகப் படுத்திருப்பது வாழைத்தண்டு அல்ல; நிலக்கரி. இந்த நிலக்கரி நிலத்தின் அடியிலேயே பற்றி எரியும் ஆபத்தும் இருக்கிறது.
அதோடு கூடவே, நிலத்தின் அடியில் படுகையாகப் படுத்திருப்பது வாழைத்தண்டு அல்ல; நிலக்கரி. இந்த நிலக்கரி நிலத்தின் அடியிலேயே பற்றி எரியும் ஆபத்தும் இருக்கிறது.
தொழிற்சாலைகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் :-
புதிதாக ஆயிரக் கணக்கான மீத்தேன் கிணறுகள் தோண்டப்படுவதால் , அவ்வாறு தோண்டப்படும் இடங்களில் ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்சாலைகளும் அவற்றில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள். குறுகியகாலப் பேராசைக்காக பல்லாண்டுகளாக இயங்கிவரும் தொழிற்சாலைகளை மூடவேண்டியும் அதனால் பலர் வேலை இழக்கும் சூழல்களும் ஏற்படும். குறிப்பிட்ட வட்டாரத்தின் வளர்ச்சி, தளர்ச்சியாகி பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும். வேலை இழந்து நிற்கும் குடும்பங்கள் மீத்தேன் வாயுவைக் குடித்து பசியைத் தீர்த்துக் கொள்ள இயலாது; வெளியேறும் நீரும், தாகம் தீர்க்காது.
கனரக வாகனங்களின் நடமாட்டத்தால் ஏற்படும் விளைவுகள் :-
ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து வெளியேற்றப்படும் எதிலும் சேராத சேறு, சக்தி இல்லாத சகதி மற்றும் பிற கழிவுகளை அப்புறப்படுத்த கனரக வாகனங்கள் பல அந்தப் பகுதிகளில் அடிக்கடிப் பயணிக்கும். இவற்றைத் தவிர கட்டுமான இயந்திரங்களும் துளையிடும் கருவிகளும் வருவதும் போவதுமாக சாலைகளை வறுத்து எடுக்கும். மணல் லாரிகள் மற்றும் உள்ளூராட்சிக் குப்பை அள்ளும் வண்டிகளின் போக்குவரத்தையே தாங்காமல் தடுமாறும் நமது கிராமப்புற சாலைகள் பெரும் சேதத்துக்குள்ளாகும். இதனால் நிலச் சரிவும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.
நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பில் வீழ்ச்சி:-
மீத்தேன் வாயு எடுக்கப்படும் வட்டாரங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை விரும்பி வாங்குவோர் இல்லாமையால் அவற்றின் விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். சிறிய சிறிய தொகைகளாக சிறுவாடு சேர்த்து வாங்கிப் போட்ட நிலங்களின் விலை வீழ்ச்சியால் நடுத்தர வர்க்கம் நடுத்தெரு வர்க்கமாகிவிட வாய்ப்பு ஏற்படும்.
புதுப்பிக்கப்படும் ஆற்றலின் மீது குறையும் முதலீடுகள் :-
நிலக்கரிப் படுக்கை மீத்தேன் வாயு, மற்ற எரிபொருள்களின் ஆற்றல் திறனைக் குறைக்கிறது. இதனால் புதுப்பிக்கத் தக்க ஆற்றலை உருவாக்கும் தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளின் மீது ஆர்வம் குன்றுகிறது.
( Courtesy: Impacts of Coal bed Methane in UK from Google. )
2003 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் , மகாராஷ்டிரா, குஜராத், இராஜஸ்தான் , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 13600 சதுர கிலோ மீட்டரில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு மத்திய அரசும் தொடர்புடைய மாநில அரசுகளும் அனுமதி வழங்கின. மேலே குறிப்பிட்ட அந்த மாநிலங்களில் மீத்தேன் எடுக்க ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தஞ்சை காவிரிப் படுகை போல முப்போகம் விளையும் - பொன் விளையும் பூமி அல்ல. அவை மலையோரங்களில் வறண்ட பாறைகள் மிகுந்த பகுதிகளாகும். அடித்தால் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத அநாதைகளே இந்தப் பகுதிகள்.
ஆனாலும் இப்படி பயனற்ற பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கே அந்தந்தப் பகுதி மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேறு எந்தத் தொழிலுக்கும் இலாயக்கு இல்லாத நிலங்களில் வசிப்போர்களே இந்தக் கொடிய திட்டத்தை எதிர்த்தார்கள் என்றால் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணியின் மக்கள் செய்ய வேண்டியது என்ன ?
இந்தியாவில் நாம் மேலே குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர்த்து, உலக அளவிலும் பல பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கிறார்கள். அங்கெல்லாம் என்ன நிலைமை?
இந்தியாவில் நாம் மேலே குறிப்பிட்ட மாநிலங்களைத் தவிர்த்து, உலக அளவிலும் பல பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கிறார்கள். அங்கெல்லாம் என்ன நிலைமை?
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் இங்கிலாந்து, போலந்து, ஜெர்மனி, தெற்கு ஆப்ரிக்கா, கனடா, அமெரிக்கா , சீனா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு , மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் (Elk Valley in Vancouver Island) கனடாவில் , அல்பேர்டா, அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கொலராடோ மாநிலத்திலும் ( Raton, Basin, Bon, Carbo, San Swan Basin,) மொன்டானா, வையோமிங்க், நியூ மெக்சிகோ, அலபாமா, பென்சில்வேனியா, மேற்கு வெர்ஜினியா, பிளாரிடா போன்ற மாநிலங்களிலும் ( Powder River Basin, Billings, Tallahassee, Bozeman, Black Warrier Basin) ஆஸ்திரேலியாவில் Sidney Basin, Moreton Basin, Surat & Bower Basin , Galilee and Gunnedah Basins ஆகிய பகுதிகளிலும் மீத்தேன் வாயுவை எடுத்து வருகிறார்கள். அந்தப் பகுதிகள் நாம் பட்டியலிட்ட விளைவுகளைக் கண்கூடாகப் பார்த்து அல்ல அனுபவித்து வருகின்றன.
ஆனால் இந்த நாடுகளிலும் பகுதிகளிலும் கூட, மீத்தேன் எடுக்கும் கிணறுகள் பெரும்பாலும் மக்கள் வசிக்காத - விவசாயம் பண்ணாத- பாசன வயல்கள் இல்லாத - வறண்டுபோய் எதற்கும் பயனற்ற மலைப்பிரதேசம் போன்ற இடங்களில்தான் அமைந்துள்ளன. அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் அங்கெல்லாம் உணரப் படவில்லை.
இருந்தாலும், இந்த நாடுகளில் இருக்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் மக்கள் நல ஆர்வலர்களும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக “Lock the Gate” என்று முழக்கமிட்டும் பதாகைகள் தாங்கியும் போராடி வருகிறார்கள். அந்தந்த நாடுகளில் உள்ள Clean Water Act, Safe Drinking Water Act, Water Quality Act, Environmental Policy Act, Federal Lands Policy and Management Act, National Historic Preservation Act போன்ற சட்டங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களில் நூற்றுக் கணக்கான வழக்குகளைப் போட்டு இந்தத் திட்டத்தின் விளைவுகளை அம்பலப் படுத்தி பல தடையாணைகளையும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மீது பல கட்டுப் பாடுகளையும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் தஞ்சையிலோ இந்தத் திட்டம் நடு வீட்டில் படுத்துக் கிடக்கும் நாகப் பாம்பு. கட்டிலில் படுத்துக் கிடக்கும் கண்ணாடி விரியன். வரவேற்பறையில் வாயைப் பிளந்துகொண்டு நிற்கும் ஓநாய். இந்தத் திட்டத்தை அடித்து ஒழித்து பால் ஊற்றிப் புதைக்க வேண்டும். இல்லையேல் நாமும் நமது வளமும் புதைந்து போகும்.
இப்போது நமக்கு ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் , காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுப்பதற்கான சோதனைகளை நிறுத்த வேண்டுமென்று மறைந்த வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழ்வார் தலைமையில் எழுந்த மக்கள் எழுச்சியாலும், தொடர்ந்த போராட்டங்களாலும் அன்றைய முதல்வர் செல்வி. ஜெயலலிதா தமிழ்நாட்டில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு தற்காலிகத் தடை விதித்தார்.
அத்துடன் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தின் சாதக பாதகங்களை ஆய்ந்து அறிக்கை தருமாறு டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில், அண்ணா பல்கலைக் கழகம், இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் சென்னைப் பிரிவு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், பொதுப் பணித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் , தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிகளும் இடம் பெற்று இருக்கிறார்கள். இன்று காவிரிப் படுகையின் தலைவிதி இந்தக் குழுவின் கரங்களில் இருக்கிறது. இன்று நாம் அமைதி காக்கலாம். காரணம் , இன்று இந்தப் பிரச்னை, இப்படி ஒரு குழுவை நியமித்ததன் மூலம் ஆறப் போடப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்தக் குழுவின் அறிக்கை மீத்தேன் வாயு எடுப்பதற்கு ஆதரவாக அமைந்துவிட்டால் தஞ்சையின் மக்களுக்குத் தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியே இருக்காது. காரணம், “ சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுது போக்கும் இனிய கதை ; ஆனால் நமக்கோ அதெல்லாம் உயிரின் வாதை. “
மேலும் Great Eastern Energy Corporation Ltd., (GEECL) நிறுவனத்துடன் அரசுகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOM) எதிர் வரும் 31/12/ 2014 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், இந்த வருடத்துடன் முடித்துவைத்து தஞ்சை மண்ணைக் காப்பாற்ற தமிழக அரசு முன்வரவேண்டுமென்றே மண்ணின் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்றைய தமிழக அரசு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்குமானால் , பச்சைப்பசேலென்று படைக்கப்பட்ட நிலத்தை பாலைவனமாக்கும் பச்சை துரோகம் வேறு இருக்கவே இருக்காது.
இன்றைக்கு மின் பற்றாக்குறை நிலவுகிறதே !
மீத்தேன் வாயுத் திட்டத்தையும் எதிர்க்கிறீர்களே !
குறைந்த வெப்பத்திலேயே எரியும் சக்தி படைத்த மீத்தேனுக்கு இவ்வளவு எதிர்ப்புக் கிளம்புகிறதே !
இதற்கு மாற்றுத் திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா ? என்று கேட்பது நமது காதுகளில் விழுகிறது. அதுபற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பார்க்கலாம்.
ஆய்வு தொடரும்... !
கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
குறிப்பு 1: அன்பான சகோதரர்களுக்கு, தங்களுக்கு நேரமிருந்தால், கீழ்கண்ட இணைப்பில் உள்ள கோரிக்கையை அதாவது 'தமிழக அரசு செய்துகொண்ட மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தம்' எதிர்வரும் [ 04-01-2015 ] அன்றுடன் நிறைவு பெறுகிறது. இவற்றை புதுப்பிக்க வேண்டாம் என வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,
https://docs.google.com/document/d/15ajykYtHr_wZOEZfJ42jzGomJ4ct8Nl04hyXzrslYOQ/edit
https://docs.google.com/document/d/1X_y-Gj3ky-XzIux-VtDACBMRd69dl30rYrhJcjszZ00/edit
பகுதி I வாசிக்க:
No comments:
Post a Comment