அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Friday, December 5, 2014

[ 2 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்களின் ஆய்வு தொடர்கிறது..!

பாலை வார்த்த நிலம் – இனி
பாலை நிலமாய் ஆகிடுமா ? என்ற கேள்வியுடன் கடந்த அத்தியாயத்தை நிறைவு செய்து இருந்தோம்.

மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு காவிரிப் படுக்கை அனுமதிக்கப்படுமானால் உண்மையிலேயே இந்தக் காவிரிப் படுகை கற்பழிக்கப்படும் ; நாம் போற்றி வளர்த்த புண்ணிய இடங்கள் புதைந்து போகும்; பண்பாடும் கலையும் வளர்த்த நமது பாரம்பரியம் பட்டுபோகும் ; நமது முன்னோர்களின் கட்டடக் கலையை,  பொறியியல் அறிவைப் பறைசாற்றும் அடையாளங்கள் அழிந்து போகும் ; நாட்டுக்கே பசியின்றி  அன்னம் படைத்த சோழத் தரணி சுரண்டப்பட்டு மக்களின் வாழ்வு சுக்குநூறாகும் என்றெல்லாம் வேதியல் ஆதாரங்களின் அடிப்படையில் அறிவியல் மேதைகள்  அபாய சங்கு ஊதுகிறார்கள்.

இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தின் இயல்புதான்  என்ன? இந்தத் திட்டம் எப்படி நிறைவேற்றப்படும்? எங்கெல்லாம் நிறைவேற்றப்படும்? எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும்? என்றெல்லாம் எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.

தேன் என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். மீத்தேன் என்றால் என்ன ?
மீத்தேன் என்பது வெட்டியெடுக்கப்படாத நிலக்கரி பாறையின் மடிப்புகளில் காணப்படும் ஒரு வகை இயற்கை எரிவாயு.  நாம் இப்போது பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவை விட  ஆற்றல் தரும் வாயுவே மீத்தேன். இந்த மீத்தேன் வாயு,   நீர்  அழுத்தத்தின் காரணமாக அதே இடத்தில் நிலைத்து,  நிலத்தின் ஆழத்தில் படிந்துள்ள நிலக்கரிப் படிமங்கள் மீது படர்ந்து பரவி இருக்கும் . இது   நிலக்கரிப் படுகை மீத்தேன் என்று அழைக்கப்படுகிறது.

ஏற்கனவே நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதை நாம் அறிவோம். நெய்வேலியைத் தொடர்ந்து அதை அடுத்துள்ள காவிரி படுகையில் இத்தகைய மீத்தேன் நிலக்கரிப் படுகைகள் இருப்பதை புவி இயல் அமைப்பியல் வல்லுனர்கள் கண்டுபிடித்தார்கள்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில கடலோரப்பகுதிகளில் பாண்டிச்சேரியின் பாகூர் தொடங்கி ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதிவரை பழுப்பு நிலக்கரிப் படிவங்களும் அத்துடன் மீத்தேன் நிலக்கரிப் படிமங்களும் இருப்பதாகவும் இந்தப் படிமங்களிலிருந்து மிகுந்த ஆற்றல் தரும் மீத்தேன் எரிவாயுவைப் பிரித்து எடுக்க இயலுமென்றும் கருத்துப் பிரசவத்தை கல்வியாளர்கள் பெற்றேடுத்துத் தந்தார்கள். அவர்கள் பெற்றெடுத்துத் தந்த பிள்ளை பேர் சொல்லும் பிள்ளையா பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடும் தறுதலைப் பிள்ளையா ? மொத்தத்தில் இந்த மீத்தேன் பிள்ளையா ? தொல்லையா ?

இந்த ஆய்வுகளும் கருத்துக்களும் அறிவியல் வளர்ச்சியின் ஆபத்தான் விளைவுகளாகும்.  பள்ளிகளில் படிக்கும் போது அறிவியல் என்பது இருபக்கமும் கூர் உள்ள ஒரு கத்தி போன்றதென்றும் . இதனால் பழத்தையும் வெட்டலாம் கொலையும் செய்யலாம் என்றும்  நாம் படித்து இருக்கிறோம். அதை உண்மைப் படுத்துவது போல் அறிவியல் படித்த மேதைகள் சிலர் கண்டுபிடித்த அணுகுண்டு போல ஆபத்தான கருத்தே,  இந்த மீத்தேன் எரிவாயுவைத் தோண்டி எடுக்கமுடியும் என்ற ஆய்வும் அறிக்கையும். எதற்கும் உதவாத தரிசு நிலங்களைக் கூட  அல்ல -  செழிப்பான விவசாய நிலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள காவிரிப்படுகையையும் தோண்டி, அந்த நிலங்களில் ஆழத்தில் படிந்துள்ள நிலக்கரியையும் அத்துடன் இருக்கும் மீத்தேன் எரிவாயுவையும் வெளியே  கொண்டு வரலாம் என்கிற ஆய்வுரை அறிவியல் வளர்ச்சி ஈன்றேடுத்த ஆபத்தான குழந்தையாகும்.

சும்மா கிடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி 
கண்மாய்க் கரையை ஒசத்திக் கட்டி 
கரும்புக் கொல்லையில்
வாய்க்கால் வெட்டி 
சம்பாப் பயிரை பறிச்சு நட்டு 
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு 
நெல்லு வெளஞ்சிருக்கு – வரப்போ 
உள்ளே மறைஞ்சிருக்கு    -

என்று பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்வரிகளை மகிழ்ச்சிப் பாட்டாகப்  பாடிக் கொண்டிருந்த மக்களின் மனதில் மண்ணடிக்க வந்தத்  திட்டம் இந்தத் திட்டம்.  அமெரிக்கப் பணமுதலைகள் , உலகவங்கியின் கழுகுகள், தாராளமயமாக்கல் எனும் குள்ள நரிகள், உலகமயமாக்கல் எனும் கருநாகங்கள் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து வட்டமேசை மாநாடு நடத்தி காவிரி விவசாயியின் வயிற்றில் வண்டல்மண்ணை அடிக்க வந்தத் திட்டம் இந்தத் திட்டம்.

இந்தத் திட்டத்தின்  ஆய்வின் விளைவாக, தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய வட்டங்களிலும்  திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய வட்டங்களிலும் மீத்தேன் நிலக்கரிப் படிமங்கள்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள  வட்டங்களில் பயணம் செய்து பார்ப்போருக்குத் தெரியும் அந்தப் பகுதிகள்  எவ்வளவு வளமான,  பசுமையான நெல்வயல்களும் தென்னந்தோப்புகளும்  நிறைந்த வட்டங்கள் என்பது.  பேருந்துகளில் ஜேப்படி செய்பவர்களுக்குத்தான் பயணிப்பவர் பணத்தை எங்கே வைத்திருக்கிறார் என்று மோப்பம் பிடிக்கத்  தெரியும். அந்த வகையில்தான் எங்கே கை வைத்தால் இருப்பதைப் பிடுங்கலாம் என்று இந்த அறிவியல் கொள்ளைகாரர்களுக்குத் தெரியவந்து இருக்கிறது.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட் ( Great Easter Energy Corporation Ltd. ) ( சுருக்கமாக, GEECL)  நிறுவனத்துக்கு நமது நிலங்களைத் தோண்டிப் பார்க்கும்   அங்கீகாரத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் ஜூன்  மாதம் 2010- ல் ,  வழங்கியுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 04/01/2011 அன்று , அன்றைய துணை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கைஎழுத்திடப்பட்டுள்ளது. இந்த அனுமதி மற்றும் அங்கீகாரத்தின் பின்னணியில் பல வல்லரசுகள் , அவற்றின் முதலீடுகள், ஆசைகள், இந்தியாவையும் குறிப்பாக தமிழ்நாட்டையும் வளரவிடக்கூடாது என்கிற கங்கணம் ஆகியவை இருக்கின்றன.

தற்போது மன்னார்குடி பகுதியில், இந்தியாவில் நிலக்கரி படுகை மீத்தேன் ஆய்வு மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதல் தனியார் நிறுவனமான கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட்  நிறுவனம் சோதனைக் குழாய்க் கிணறுகள் மூலம் மீத்தேன் வாயு தேடுதல் பணியைத் தொடங்கியது.
இங்கு ஒரு வரலாற்றுச் செய்தியை பதிவு செய்ய வேண்டும். இந்த ஈஸ்ட் என்கிற பெயரில் தொடங்கும் நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்ட வரும் நிறுவனங்கள் என்பதை நாம் அனுபவபூர்வமாக அனுபவித்து இருக்கிறோம். இந்தியாவை அடிமைப் படுத்தி ஆண்ட ஆங்கில ஆட்சியின் தொடக்கம் ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற பெயரில்தான் உட்புகுந்தது. அதே போல் இந்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் லிமிடெட் என்கிற நிறுவனமும் ஒரு குஜராத்தியின் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவரின் பெயர் மோடி. நண்பர்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இந்த மோடி அந்த மோடி அல்ல!

மன்னார்குடி வட்டத்தில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் (66,700 ஹெக்டேரில்) முதற்கட்டமாக 667 சதுர கிலோ மீட்டர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 24 சதுர கிலோ மீட்டர் எதிர்கால திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் 50 ஆழ்துளை கிணறுகள் மற்றும் இரு சோதனைக் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 38 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. ஆழ்துளைக் கிணறுகள் ஒவ்வொன்றும்  600 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமாக தோண்டப்படுகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில், 
கர்ணாவூர், வடபாதி , சேரங்குளம், மன்னார்குடி, அரவத்தூர்,  களஞ்சிமேடு, சவளக்காரன், பூவனூர், பருத்திக்கோட்டை, மூவர்கோட்டை, பருத்திக் கோட்டை, களஞ்சிமேடு, கொரடாச்சேரி, முட்டூர், கதிராமங்கலம், சேங்காலிபுரம்,  ஆதனூர், சித்தாடி, குடவாசல், மேலப்பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவர், செல்லூர், சாரனத்தம், மாணிக்க மங்களம் , கொட்டையூர், அனுமந்தபுரம், கீலவடமல், ராஜேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கண்டியூர் , தண்டலம், அரிச்சபுரம், அன்னவாசல், காளாச்சேரி, கோயில்வெண்ணி, ஆதனூர் ஆகிய கிராமங்களிலும்
தஞ்சை மாவட்டத்தில்,
கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி, விட்டலூர், குமாரமங்கலம்,  நாச்சியார்கோயில் , மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை,  குலமங்கலம்  ஆகிய கிராமங்களிலும் மண்ணைத் தோண்டியெடுத்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு மீத்தேன் நிலக்கரிப் படிமங்கள் அங்கெல்லாம் பரவி விரவிக் கிடப்பது கண்டறியப்பட்டது.  தவிர, காற்று குறித்து 38 இடங்களில் ஆய்வும், தொடர்ந்து   ஆறுகள் மற்றும் , கால்வாய்கள்  இல்லாத பகுதி, நிலத்தடி நீரின் தரம், ஒலியின் அளவீடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீத்தேன் வாயு எடுக்கப்படும் முறை என்ன ?
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் “ என்று வள்ளுவரால் குறிப்பிடப்படும் நிலம் ! இந்த நிலம்தான் இந்தக் கதைக்கு கரு. நாம் புறக்கண்ணால் காணும் நிலம் வேறு; அந்த நிலத்துக்குள்ளே ஊடுருவி இருக்கும்  உள்ளடக்கங்கள் வேறு வேறு.

நிலம், மண், நிலத்தடி, நிலத்தடி நீர் , நிலக்கரி என்று நமது காலடியில் படும் நிலத்தில் நமது கண்ணுக்குத் தெரியாத பகுதிகள் மறைந்து உள்ளன. மீத்தேன் வாயு என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் செறிவாக குவிந்து இருப்பது அல்ல. நிலக்கரிப் படுகைகளின் – அதன் நுண்துளைகள் , வெடிப்புகளில் நிலக்கரிப் பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டி இருப்பதாகும்.

நமது கண்களுக்கு நிலமும் அதைத் தோண்டினால்  வரும் நீரும்தான் தென்படுகின்றன. நம்மாலும் அவ்வளவுதான் தோண்ட இயலும். ஆனால் தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடிவரைத் தோண்டினால், நிலக்கரிப் படிமங்கள் தென்படும். இந்த நிலக்கரிப் படிமங்களின் மீது நிலத்தடி நீர் படுத்து,  நிலக்கரிப் படிமங்களைக் குப்புறப்போட்டு அழுத்திக் கொண்டு இருக்கிறது.  அதாவது நிலக்கரிப் படிமங்களின் மீது நிலத்தடி நீர் நிலைகொண்டு இருக்கிறது.

இப்படி நிலக்கரிப் படிமங்களின் மீது நிலத்தடி நீரின் அழுத்தம் இருப்பதால் மீத்தேன் வாயுவை நிலத்திலிருந்து நேரடியாக  வெளியேற்ற முடியவில்லை. மீத்தேன் வாயுவை அழுத்திக் கொண்டு இருக்கும் நீரை நிலத்திலிருந்து வெளியேற்றினால்தான் மீத்தேன் வாயுவை  வெளியே கொண்டுவர வரமுடியும். ஆகவே நிலத்தடி நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். நீரை வெளியேற்றிய  உடன் அங்கு வெற்றிடம் ஏற்பட்டு காற்று அவ்விடங்களில் குடிபுகும். ஆகவே நீரை அடுத்துக் காற்றையும்        வெளியேற்றியாக வேண்டும். இப்படி நீரையும் காற்றையும் உறிஞ்சி வெளியே எடுத்த பிறகுதான் ராஜாதி ராஜா மகள் நமது கதாநாயகியான  மீத்தேன் வெளியே வர முடியும்.

இப்போது நாம் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். நிலத்தின் மிக ஆழத்தில் உள்ள நிலக்கரி படிந்து இருக்கும் நிலைவரை நாம்  தேடி நாம் அனுப்பும் ஆழ்துளைக் குழாய்கள் முதலில் நிலத்தடியில் உள்ள நீரையும் பிறகு காற்றையும் வெளியே தள்ளிவிட்டு தான் தேடிவந்த ராஜகுமாரியான மீத்தேனை தொட்டுத் தூக்கி  வெளியே அனுப்புகிறது.  மீத்தேன் வாயு தன்னுடன் பொடி மண் , மிச்சமிருக்கும் நீர் மற்றும் விஷக்காற்று ஆகிய தோழிகள் புடை சூழ வெளியேறி  வாயு சுத்திகரிக்கப்படும் இடத்தில் தஞ்சம் அடைகிறது. அங்கு தஞ்சம் அடையும் மீத்தேன் வாயு சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.  அவ்விதம் சுத்திகரிக்கப்படும்போது நீரும் பொடி மணலும் விஷக் காற்றும் பிரித்தெடுக்கப்பட்டு நமது விவசாய நிலங்களின் மீது ஓடச் செய்யப்படுகிறது.  இதனால் நமது விளைநிலங்களிலும் சுற்றுச் சூழலிலும் ஏற்படும் வேதியல் விளைவுகளை நாம் தொடர்ந்து காணலாம்.

அதற்குமுன் இந்தத் திட்டத்தை ஆதரிப்போரின் கேள்விகள் யாவை என்று பார்க்கலாம்.

மீத்தேன் வாயு என்பது, இப்போது நடைமுறையில் இருக்கும் இயற்கை எரி வாயுவை விட ஆற்றல் மிக்கது என்று சொல்கிறீர்களே!  அவ்வாறு ஆற்றல் உள்ள ஒரு சக்தியை வெளிக் கொணர்வதில் என்ன தவறு? அந்த ஆற்றல் மிக்க எரிவாய்வை பயன்படுத்தி  தொழிற்சாலைகளை இயங்கவைத்து  பலருக்கு வேலை வாய்ப்பளிக்களிக்கலாமே! தடை இல்லா மின்சாரம் சாத்தியப்படும் என்று சொல்கிறார்களே! மீத்தேன் மூலம் உபரி மின்சாரம் தயாரித்து விற்று அன்னியப் பணம் ஈட்ட  முடியுமென்றும் சொல்கிறார்களே! மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்கலாம் என்றும் சொல்கிறார்களே! மற்றும் மிகு அழுத்த  மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்துவதிலும் குற்றம் என்ன காணமுடியும்? இயற்கையில் இருக்கும் ஒரு நிலத்தடி வளத்தை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது ? விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் நமக்கு இன்னொரு வருமானம் வந்தால் ஏன் ஏற்கக் கூடாது? என்பன போன்ற கேள்விகள் நமக்குள் எழுவது இயற்கை.

அனைத்துக்கும் அறிவியல் ரீதியான பதில்கள்  இருக்கின்றன.
அதற்கு முன்,  பொன் முட்டையிடும் வாத்தின் கதையை சிறுவயதில் படித்து இருப்பீர்களே ! அந்தக் கதையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.  இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் சந்திக்கலாம்.
ஆய்வு தொடரும்...  

கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு: 
பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம். 

பகுதி I வாசிக்க:'[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !
Thanks to the News Source:
 http://www.adirainews.net/2014/12/blog-post_5.html#comment-form

No comments: