அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Friday, October 10, 2014

அதிரை கடலில் வீணாக கலக்கும் ஏரி நீர் ! அதிரை குளங்களுக்கு நிரப்ப சமூக ஆர்வலர்கள் முன்வருவார்களா !?


கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரை ஈசிஆர் சாலையோரத்தில் அமைந்துள்ள சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரிக்கு ஆற்று நீர் வந்ததை அடுத்து தற்போது இரு ஏரிகளும் நிரம்பி வழிகிறது. இதிலிருந்து நிரம்பி வழியும் நீரானது பிலால் நகர், கல்லூரி, பள்ளி ஆகியவற்றை ஒட்டியுள்ள சாலையோரத்தின் வாய்க்கால் வழியாக கடலில் வீணாக சென்றடைகிறது. அதிரை பகுதிகளில் காணப்பட்ட நிலங்கள் அனைத்தும் தற்போது மனைகளாக உருமாறிவிட்டதால் இப்பகுதியில் விவசாயமும் நடைபெறுவது கிடையாது.

ஏரியிலிருந்து நிரம்பி வாய்க்கால் வழியே எதற்கும் பயன்படாமல் வீணாக கடலுக்கு செல்லும் நீரை, வாய்க்காலிலிருந்து குளங்களுக்கு செல்லும் வாய்க்கால்களை சீரமைத்து அருகில் காணப்படுகின்ற குளங்களுக்கு மோட்டார் பம்பிங் மூலம் நிரப்பிக்கொள்ள அதிரையில் வாழும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபட முன்வர வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக அதிரையில் பொய்த்து போன மழையால் மக்களுக்கு பயன்தரும் குளங்களும் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் போதுமான மழை பெய்தும் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள், தேவையான வாய்க்கால் சீரமைப்பு இல்லாததால் மழைநீர் அனைத்தும் வீணாகிறது.

ஏரி வாய்க்கால் வழியாக இன்னும் சில தினங்களுக்கு தண்ணீர் தொடர்ந்து வர இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அருகில் காணப்படும் குளங்களுக்கு ஏரி நீரை கொண்டுவர சமூக ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.

வீணாக கடலுக்கு செல்லும் ஏரி நீர் 

ஏரி நீரை நிரப்பிக்கொள்ள வாய்ப்புள்ள அதிரை குளங்கள்
Thanks to news source: http://www.adirainews.net/2014/10/blog-post_87.html

2 comments:

Unknown said...

அவசியமான, அவசரமான விழிப்புணர்வு பதிவு!

மேலத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர், புதுத்தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு பகுதிகளில் அமைந்துள்ள குளங்களை நிரப்பிக் கொள்ள இறைவன் நமக்கு வழங்கியுள்ள இன்னொரு சந்தர்ப்பம் என எண்ணி துரிதகதியில் செயல்பட அந்தந்த பகுதி இளைஞர்களும், அதிரையின் ஒட்டுமொத்த ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

மீண்டும் நினைவூட்டுகின்றேன், அந்தந்த பகுதிகளின் இளைஞர்களால் சில மண்வெட்டிகளை கொண்டு பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும், வாருங்கள் வீணாகும் நீரை குளங்களில் சேமிப்போம்.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது. said...

பதிவுக்கு நன்றி.‎
தகவலுக்கும் நன்றி.‎

எல்லா சமூக ஆர்வலர்களும் ஒருமனதோடு ஒத்து நின்று, பொதுமக்களும் ‎ஒத்துழைப்பு தந்தால், இது மட்டும் என்ன, இன்னும் எவ்வளவோ ‎காரியங்களை செய்து முடிக்க முடியும்.‎

முதலில்!‎
நம் மனதில் மறைய வேண்டியவைகள் மறையனும்.‎
துளிர் விட வேண்டியவைகள் துளிர் விடனும்.‎

இல்லையேல்!!‎
மேற்கொண்டு சொல்வதற்கு என்ன இருக்குது?‎

இப்படிக்கு.‎
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com