அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Thursday, October 16, 2014

பூமிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.! நிலத்தடி நீரைப் பெருக்க என்ன வழி?


நிலத்தடி நீரைப் பெருக்க என்ன வழி?

பிற்காலத்தில் வரும் தண்ணீர் தேவையை உணர்ந்ததால் தானோ, என்னவோ வள்ளுவர் “நீரின்றி அமையாது உலகு” என எழுதினார். நம் முன்னோர்கள் நீரைக் குளத்தில் ஏரியில் பார்த்தார்கள். நம் அப்பா தலைமுறை நீரைக் கிணற்றில் பார்த்தனர். நம் தலைமுறையினர் நீரைப் பாட்டிலில் பார்க்கின்றனர். நாளைய தலைமுறையினர் நீரை எப்படிப் பார்க்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு நீரின் தேவை நம் நாட்டில் அதிகமாகி வருகிறது. மூன்றாம் உலகப்போர் இனி நடந்தால் அது நீருக்காகத்தான் இருக்கும் என்ற ஒரு கருத்துக்கணிப்பும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் நிலவி வருகிறது.


ஒரு கைப்பிடி அளவு அரிசியை விளைவிக்க 150 லிட்டர் நீர் செலவழிக்கப்படுகிறது எனக்கூறப்படுகிறது. அதனால் நீரின் தேவை நமக்கு எவ்வளவு முக்கியம் என இதன் மூலம் அறியலாம். தற்போது இருக்கும் சூழலில் நீரை விலைகொடுத்து வாங்க வேண்டி இருக்கும் என நமக்கு முந்தைய தலைமுறையினர் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. இன்று நீரை தனியார் நிறுவனங்கள் பல்வேறு பெயரில் குப்பியில் அடைத்து விற்கப்படும் பெரும் வியாபாரப் பொருளாக நீர் மாறிக்கொண்டிருக்கிறது.

நாட்டு மக்களுக்கு எதை எதை எல்லாம் ஒரு அரசு இலவசமாக வழங்க வேண்டுமோ? இன்று அவை எல்லாம் காசு கொடுத்து பயன்படுத்தும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக தற்போது “அம்மா குடிநீர்” என்ற பெயரில் அரசு 10 ரூபாய்க்கு நீரை விற்று கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் அவலம் எந்த மாநிலத்திலும் நிகழ்ந்ததில்லை. இன்று வீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் நீர் பாட்டில்களும், நீர் பார்க்கெட்களும் அனைத்துக் கடைகளிலும் தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்று நீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நம் தலைமுறை கூடவே அடுத்தத் தலைமுறை விலை கொடுத்துக் கேட்டாலும் நீர் கிடைக்குமா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

பணத்தைச் சிக்கனப்படுத்தி வாழத்தெரிந்த மனிதனுக்கு நீரைச் சிக்கனப்படுத்தி வாழும் முறை தெரியாமல் போய்விட்டது. எதுவாயினும் சிக்கனமும் ஒரு வழியில் சேமிப்புதான் என்பதை அறிய வேண்டும்.

நீர் என்பது ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் உள்ளடக்கிய ஒரு வேதிப்பொருள். நம் பூமியின் நிலப்பரப்பில் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் நீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர் நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்கும் (ஜி.டி.பி) இடையே பரஸ்பர சம்பந்தம் உண்டு. 2025-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித்துள்ளனர். இன்று உலக வர்த்தகத்தில் நீர் முக்கியப் பங்காற்றுகிறது. தோராயமாக 70 சதவீத நன்னீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

நம் தமிழ் நாட்டில் எந்த வருடத்திலும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் வற்றி, குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர்கள். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. மிச்சம் மீதி பாசன விவசாயம் பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஆற்றுப்பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம், ஆகியனவையே அந்த 3 வகைகள். இந்த மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாகக் கிணற்றுப் பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகிறது.

தற்போதைய நிலவரப்படி மொத்த கிணறுகளில் எண்ணிக்கை 18 லட்சம் அதாவது ஒரு கிணறு 2/3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் ஏக்கர். இது ஒரு சராசரிக்கணக்கு. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, இவைகளினால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை. விவசாயம் செய்ய நீரும் போதிய அளவு இருப்பும் இல்லை.

இதற்கு மேலாக நம்மை வழிநடத்தும் அரசின் தவறுதலான வழிகாட்டுதலால் இன்று குடிக்கும் நீரைக்கூட காசுக்கு வாங்குகின்ற அவலம் ஏற்பட்டுவிட்டது. பல இலவசங்களை மக்களுக்குக் கொடுத்து மக்களை எல்லாம் பெரும் சோம்பேறியாக்கிவிட்ட பெருமை நம் அரசையே சாரும். இந்த இலவசங்களில் கிணற்றுப்பாசன விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இங்குதான் ஆரம்பித்தது வினை. மின்சாரத்திற்கு காசு இல்லை என்று ஆனவுடன் நிலத்தடி நீர் உபயோகம் பன்மடங்கைப் பெருகியது. எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் விவசாயிகள் நிலத்தடி நீரை உறிஞ்ச ஆரம்பித்தனர்.

நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்குப் போனது. நிலத்தடி நீர் மக்களின் பொதுச்சொத்து என்கிற கருத்து யாருக்கும் இல்லாமல் போனது. யார் எப்படிப் போனால் எனக்கென்ன என்கிற மனப்பான்மையே எங்கும் நிலவுகிறது. இந்த ஆட்சிப் போக்கால் வரலாறு காணாத அளவிற்கு இன்று நிலத்தடி நீர் வற்றி இன்னும் 30 ஆண்டுக்குள் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்பது வேளாண் விஞ்ஞானிகளின் கருத்து.

இயற்கை வளத்தை அழித்து வருவதின் விளைவால் இந்த முறை தமிழ்நாட்டில் போதிய அளவு மழை பெய்யாமல் பொய்த்துப் போனது. இதனால் நிலத்தடி நீர் வற்றி வருகிறது. நிலத்தடி நீர் ஒன்றும் அள்ள அள்ளக்குறையாத அமுத சுரபி அல்ல. இது வங்கியில் பணத்தைச் சேமித்து வைப்பது போலத்தான். சேமிப்பதை விட்டு விட்டு பணத்தை எடுத்துக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் ‘உங்கள் கணக்கில் போதுமான பணம் இருப்பு இல்லை’ என்றுதான் (எஸ்.எம்.எஸ்) குறுஞ்செய்தி வரும். அதைப் போலத்தான் நிலத்தடி நீரும். அவ்வப்போது இயற்கையானது மக்களுக்கு வழங்கும் நீரைச் சேமித்துக்கொண்டே இருந்தால் தான், தேவைக்கு எடுத்துக்கொண்டே இருக்க முடியும். சேமிக்கும் பழக்கம் இல்லாது போனதால் தான், தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். வீடுகளில் மழை நீரைச் சேமிப்பது போல நிலங்களிலும் மழை நீரைச் சேமிக்க வேண்டும்.

நிலங்களில் விளை பொருட்களை மட்டுமல்ல.. மழை நீரையும் அறுவடை செய்ய வேண்டும். அதுதான் நிலைத்த நீடித்த விவசாயத்தின் முதற்படி என வேளாண்மைத்துறை பேராசிரியர் ரெங்கநாதன் என்பவர் கூறுகிறார்.

நிலங்களில் மழைநீரைச் சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாக உயர்த்த முடியும். நம் நிலத்தில் பெய்யும் மழை நீரை அடுத்தவர் நிலத்திற்குப் போக விடாமல், நமது நிலத்திலேயே தேங்குமாறு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்காக நிலத்தில் வேகத்தடைகளை உருவாக்க வேண்டும். அதாவது மழைக்காலத்திற்கு முன்பாகவோ அல்லது ஒரு மழை பெய்த உடனேயோ, நம் நிலத்தை நன்றாக உழவு செய்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் பெய்யும் மழை நீர் நிலத்தில் உழுத மண்ணால் நன்கு உறிஞ்சப்பட்டு நிலத்தின் அடிமட்டம் வரை சென்று சேமிக்கப்படும்.

இன்று தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள், மானாவாரி நிலங்களில் இப்படி உழவு போட்டு வைத்தாலே, நிலத்தடி நீர் மட்டத்தைக் கணிசமாக உயர்த்த முடியும் என்கின்றனர் வேளாண்மைத் துறையினர்.

ஆறுகளில் தடுப்பணை அமைப்பது போல, நிலங்களில் ஆங்காங்கே ‘சமச்சீர் வரப்புகள்’ அமைக்க வேண்டும். இதன் மூலம். ஒரு குறிப்பிட்ட வயலில் பெய்யும் மழை நீர் அந்தப் பகுதியில் தேக்கி, மெதுவாக நிலத்திற்குள் இறங்கும். இப்படி வரப்புகளை ஒட்டி இரண்டடி ஆழம், அரையடி அகலத்தில் நீளமாக வாய்க்கால்களையும் வெட்டி வைக்கலாம்.

வரப்புகளைத் தாண்டி வரும் மழை நீர், அந்த வாய்க்கால்களில் நிரம்பி, முழுவதுமாக பூமிக்குள் ஊடுருவும். மானாவாரி நிலங்களில் மரப்பயிர்களைச் சாகுபடி செய்பவர்கள், மழைக்காலத்திற்கு முன்பாக ஒவ்வொரு மரத்தையும் சுற்றி கொத்தி விட்டு, வட்டப்பாத்தி எடுத்து வைக்க வேண்டும். சரிவான நிலங்களில் மரங்களை வளர்ப்பவர்கள், வழிந்து வரும் நீரைத் தேக்கும் விதமாக, மரங்களின் அருகே பிறை வடிவ வாய்க்கால்களை எடுத்து வைக்கலாம். நீரைச் சேமிப்பதைப் போலவே அதைச் சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டியது அவசியம். நம் கிணற்றில் தான் நீர் இருக்கிறதே என விரயம் செய்யக்கூடாது. வாய்க்கால் வழிப் பாசனத்ததைத் தவிர்த்து, சொட்டு நீர்ப்பாசனம் முறைக்கு மாறவேண்டும். இதனால் வாய்க்கால் குடிக்கும் நீரைச் சேமிக்கலாம்.

அதிக நீர் தேவைப்படும் தென்னந்தோப்புகளில், இரண்டு வரிசைக்கு இடையில் அரையடி அகலம், இரண்டடி ஆழத்தில் வாய்க்கால்கள் எடுத்து, தென்னங்கழிவுகளை அதனுள் போட்டு பாசனம் செய்வதன் மூலம் வறட்சியான காலத்திலும் மரங்களைக் காப்பாற்றலாம்.

தமிழக விவசாயிகளின் பெருமளவு வேளாண்மைக்கு உதவி வரும் காவிரி ஆற்றுப்படுகையில், கதவணைகள் இல்லாததால் லட்சம் கன அடி காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

2005-ஆம் ஆண்டு – 70.96 டி.எம்.சி
2006-ஆம் ஆண்டு – 42.85 டி.எம்.சி
2007-ஆம் ஆண்டு – 64.41 டி.எம்.சி
2008-ஆம் ஆண்டு – 78.15 டி.எம்.சி
2009-ஆம் ஆண்டு – 64.42 டி.எம்.சி

இது என்ன கணக்கு தெரியுமா? 

காவிரியில் கரையுண்டு வந்து, ‘உபரிநீர்’ என்கிற பெயரில் வீணே கடலில் கலந்த நீரின் கணக்குதான் இது. 2010,2011,2012 ஆகிய 3 ஆண்டுகளில் தண்ணீருக்கு கையேந்தியபடி கண்ணீர் வடித்த நாம், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே மீண்டும் கொள்ளிடம் வாயிலாக 6 டி.எம்.சி அளவு நீரை நேரடியாக கடலில் கலக்க விட்டுள்ளோம்.

நிலத்தடி நீர் குறைவதினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள்:

1.விவசாயம் நலிவுறும் கிணற்றுப் பாசனத்தையே நம்பியுள்ள விவசாயம் குறைந்துபோகும். விவசாயம் நலிவுற்றால் என்ன நடக்கும் என்று எல்லோரும் அறிவார்கள். உணவுப் பிரச்சனை ஏற்படும்.

2.நீர்த்தேவை அதிகமாக உள்ள தொழில்கள் நசியும். திருப்பூர் போன்ற நகரங்கள் நிலத்தடி நீரை வெகுவாக நம்பி இருக்கின்றன. பின்னலாடைத் தொழில் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று நாட்டுக்கு அந்நியச்செலவாணியை ஈட்டித்தரும் தொழில் இது. இதுபோல பல தொழில்கள் நிலத்தடி நீரைச் சார்ந்து இருக்கின்றன. இவை எல்லாம் நிலத்தடி நீர் இல்லாவிட்டால் நலிவுபெறும்.

3.கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் குடியிருக்கும் மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறார்கள். குடிநீர் என்றால் குடிப்பதற்கு மட்டும் என்று அர்த்தம் இல்லை. வீட்டிற்கு வேண்டிய அனைத்து உபயோகங்களுக்குமான நீர் என்றுதான் அர்த்தம். நிலத்தடி நீர் அருகும் பட்சத்தில் குடியிருப்புகளையே காலிசெய்ய வேண்டிய நிலை உருவாகக்கூடும்.

4. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற சிறுசிறு தொழில்களும் நசிந்துபோகும். இச்சிறு தொழில்கள் மற்ற பெரும் தொழில்களையும் மக்கள் குடியிருப்புகளையும் சார்ந்திருப்பவையாக இருக்கும்.

5. சுற்றுச்சூழல் மாசடையும். சரியான விவசாயமும், தொழிலும் மக்கள் நடவடிக்கைகளும் இருந்தால்தான் ஒரு பகுதி சுத்தமாக இருக்கும். இல்லாவிடில் அந்தப்பகுதி தரிசாகப் போய் பாழடைந்து சுற்றுச்சூழல் மாசுபட ஏதுவாகும்.

ஆகவே நீரின் அருமை கருதி அனைத்து மக்களும் மழை நாளில் நீரைச் சேகரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இயற்கையை அழிக்காமல் முடிந்த அளவு மரங்களை நட்டும், நட்ட மரங்களையும் காத்து வந்தாலே நமக்குப் போதிய நீர் கிடைக்கும்.

நன்றியுடன்
நண்பர் செந்தில்குமார்  Nsk அவர்களின் முகநூல் பக்கங்களிலிருந்து...

No comments: