அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Friday, October 17, 2014

சுற்றுச்சூழல் சுகாதாரமும் தூய்மை இந்தியாவும் சாதிப்பது அரசால் மட்டும் சாத்தியப்படுமா ?இந்தியா சுதந்திரம் பெற்று அறுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு ஆளும் அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் “தூய்மையான இந்தியா” என்கிற கோஷத்தையும் முன்னெடுத்து வைத்து இருக்கிறது. இது ஒரு வகையில் பாராட்டப்படவேண்டிய அம்சம்தான்  என்றாலும்  இதே போல் அரசின் சார்பில் எடுத்துவைக்கப்பட்ட பல கோஷங்களை இதற்கு முன்பும் கேட்டிருக்கிறோம்.


“ஜெய் ஜவான் ஜெய்  கிசான்”   -“ இந்தியா ஒளிர்கிறது “ – “ஹரிபி கடாவோ” என்பவையை   எல்லாம் மக்கள் மட்டுமல்ல அந்த கோஷங்களை முன்னிறுத்திய அரசுகளும் மறந்துவிட்ட  கோஷங்கள்தான்.பொதுவாக கோஷங்கள் என்பவை ஒரு கொள்கை முழக்கமாக இருப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். அந்த முழக்கங்கள் ஒரு காலகட்டத்துக்குள் காரியமாக பரிணமித்து குறிப்பிட்ட கோஷத்துக்கான பேசுபொருளில் நாடு தன்னிறைவு அடைந்துவிட்டதா என்று பார்ப்பதே முக்கியமானதாகும். அதை விட்டுவிட்டு ஒரு கோஷத்தை சொல்லி எல்லோரும் முழங்கிவிட்டு அன்று மாலையே அதை மறந்துவிடுவது நம்மிடையே நிலவி வரும் பழக்கம். இப்போது புதிய அரசு எடுத்துவைத்துள்ள இந்த “தூய்மை இந்தியா” என்கிற முழக்கத்தின் விதி எப்படி எழுதப்படப் போகிறது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டமான 'தூய்மை இந்தியா' பிரசாரத்தை  அவர் ஆரம்பித்துவைத்ததாக  செய்திகள் தெரிவித்தன.  இந்த நிலையில்,  விளக்குமாற்றை  கையில் எடுத்து அவரே வீதியைச் சுத்தம்  செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பெரும்பாலும் இந்தியிலும் அவ்வப்போது தமிழிலும் அனைத்து தொலைக் காட்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் காட்சிகளும் மாறி மாறி ஒலிபரப்பப் பட்டு வருகின்றன.
மேலும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கான தனது செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமரின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.5 ஆண்டுகளுக்கான 'தூய்மை இந்தியா' திட்டம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி  மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தில் நிறைவடைகிறது.தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கல்லறைகளுக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், வால்மீகி பாஸ்தி சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு விளக்குமாற்றை  எடுத்து தானே வீதியைச் சுத்தம் செய்தார்.'தூய்மை இந்தியா' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் புதிய விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அவர்  தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவின் முக்கியஸ்தர்களை அவர்களின்  பெயர்களைக் கூறி அவர்களையும் தன்னுடன் இணையுமாறும் அவர் கோரியுள்ளார்.
குறிப்பாக 9 புகழ்பெற்ற பேர்களை இந்தப் பணியில் பங்கேற்க  வருமாறு அழைக்க வேண்டும் என்றும் பிரதமர்  கூறியுள்ளார்.கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழில் அதிபர் அனில் அம்பானி, நடிகர்களான சல்மான்கான், கமல்ஹாசன், நடிகை பிரியங்கா சோப்ரா, யோகா குரு ராம்தேவ், உள்ளிட்ட முக்கியஸ்தர்களை  தனது 'தூய்மை இந்தியா' சவாலுக்கு உதவுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதாவது, இவர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் வழியைப் பின்பற்றி  வீதிகளில்  குப்பைகளை  அகற்றி அதை வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், பொதுமக்களும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து பதிவேற்றுமாறு கூறியுள்ளார். யார் செய்தார்களோ இல்லையோ பாரதீய ஜனதாக் கட்சியினர் அன்று ஒருநாள் மட்டும் வீதிகளை சுத்தபப்டுத்துவதாக புகைப் படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.இவர்களில்,   இந்த அழைப்புக்கு  செவிசாய்த்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, 'பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சவாலை ஏற்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்' என்று டுவீட் செய்துள்ளார். 2019 இற்குள் நாட்டை தூய்மை இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.சச்சின் டெண்டுல்கரும் தனது அதிகாரபூர்வ முகநூலில்  இந்தப் பணியை மகிழ்வுடன்  ஏற்பதாக வீடியோ நிலையைப் பதிவேற்றியுள்ளார்.நாடு முழுவதும் சுமார் 31 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் பல்வேறு பொது நிகழ்வுகளில் 'தூய்மை இந்தியா' பிரசாரத்துக்காக, செயற்பாட்டுக்காக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அர்ஜுனா விருது குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், பாலிவுட் நட்சத்திரம் அமீர் கான் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.பிரதமர் ஆற்றிய உரையில் 'மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று நான் அவருக்கு தலை வணங்குகிறேன். காந்தியின் வாழ்க்கையும் சிந்தனையும் எம்மிடையே பெரும் தூண்டுதலையும் எழுச்சியையும் ஏற்படுத்துவது. ஆகவே, காந்தி கண்ட கனவை இந்தியர்களாக நிறைவேற்றும் பொறுப்பும் கடமையும் நம்  அனைவருக்கும் இருக்கிறது.'தூய்மை இந்தியா' என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேசப்பற்றினால் இது தூண்டப்பட்டுள்ளதே தவிர, அரசியலினால் அல்ல. அனைத்து அரசுகளும் தேசம் தூய்மையாக இருக்க நிறையச் செய்துள்ளனர். அவர்களை இத்தருணத்தில் வாழ்த்துகிறேன். இந்த அரசுதான் இவ்வாறெல்லாம் செய்கிறது என்று நான் ஒருபோதும் உரிமை கோரமாட்டேன்.மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா என்ற கனவு மட்டும் இன்னமும் நிறைவேறவில்லை. சுத்தம் செய்வது தூய்மைப் பணியாளர்களின் பணி மட்டும்தானா? பழைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது கடினம், ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை நமக்கு கால அவகாசம் இருக்கிறது. மாறுவோம்,மாற்றுவோம்.நாம் செவ்வாய் கிரகத்துக்கு அடியெடுத்து வைத்தோம், பிரதமரோ, அமைச்சரோ யாரும் செல்லவில்லை. மக்கள்தான் இதனை சாத்தியப்படுத்தினர். எமது விஞ்ஞானிகள் செய்தனர். ஆகவே தூய்மை இந்தியாவை நாம் படைத்திடமுடியும். எங்காவது குப்பையைப் பார்த்தால் அதனை அகற்றுங்கள். அதைப் படம் பிடித்தோ, வீடியோ எடுத்தோ சமூக வலைத்தளங்களில்வெளியிடுங்கள். தூய்மை இன்மையால் நாட்டுக்கு ஆண்டுக்கு 6,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது' என்றெல்லாம் பிரதமர் குறிப்பிட்டுப்  பேசி இருக்கிறார்.   பிரதமரின் இந்ததிட்டத்திலும் உரையிலும் ஒரு சில பகுதிகள் நமது கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. அது பற்றிய ஒரு சிறு விமர்சனமே இந்தக் கட்டுரையின் கருவாகும்.முதலாவதாக, மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா என்கிற திட்டம் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் அலங்கோலங்களையும் ஊழல்களின் பட்டியலையும் கவனிக்கும் பலரை விலா நோக சிரிக்க வைத்து இருக்கிறது. நாட்டைத் தூய்மைப் படுத்த வேண்டுமென்ற அரசின் நோக்கத்தில் நாம் களங்கம் கற்பிக்க  இயலாது. ஆனால் நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும் முதலில் தங்களையும் தங்களின் எண்ணங்களையும் நடவடிக்கைகளையும் தூய்மைப் படுத்திக் கொண்டார்களா என்று நம்மைப் பல கேள்விகளை கேட்க வைக்கிறது.  அதிலும் காந்தியின் பெயரை இதில் இழுத்து தங்களை ஒப்பிட்டுக் கொள்ள இவர்களில் எவருக்கும் தகுதி இருக்கிறதா என்பதே நமது முதல் கேள்வி.  இந்தக் கேள்வியை பொதுவான சிந்தனைக்கு சமர்ப்பித்துவிட்டு அடுத்த செய்திக்கு வருகிறோம்.அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களிடையே புகழ்பெற்றுள்ள சில விளையாட்டு வீரர்களையும் திரைப்பட நடிகர்களையும் இந்த கோஷத்தில் பங்காற்றச் சொல்லும் வகையில் பிரதமர்  கேட்டுக் கொண்டிருப்பதற்காக அவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.காரணம்,  தியாகங்கள் மூலமும் அர்ப்பணிப்பின் மூலமும் நாட்டுக்காக உழைத்த நல்ல தலைவர்களின் பெயர்களைச் சொல்லி ஒரு திட்டத்தை முன்னிலைப் படுத்துவதை விட திரைப்பட நடிகர்களையும் விளையாட்டு வீரகளையும் முன்னிலைப் படுத்தினால், அவர்கள் சொன்னால்தான்  மக்கள் கேட்பார்கள் என்கிற மக்களின் மன ஒட்டத்தை பிரதமரும் நன்றாக புரிந்து வைத்து இருக்கிறார் என்றே இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஊறுகாய்  விளம்பரத்தில் கூட நடிகையின் படம் போட்டால்தான் மக்கள் வாங்குவார்கள் என்கிற மனநிலையும் பிரா விளமபரத்தில் கூட பொருத்தமில்லாமல் நடிகரின் படத்தை போட்டால்தான் விற்பனையாகும் என்கிற நிலைமை  நாட்டில் நிலவி வருவதை  உணர்ந்து   பிரதமர் அவர்களை இந்தப் பணியில் இணைத்து இருப்பது பாராட்டத்தக்கதே.அடுத்து, தங்களது பகுதிகளில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதைப் படம் பிடித்து பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் போடும்படியும் மக்களை பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார். இதுவும் மக்களின் மனோதத்துவத்தைப் படித்த பிரதமரால்தான் முடியும் என்பதும் நமது கருத்து.இப்படிப் படம் பிடித்து தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காகவாவது பொதுமக்கள் குறிப்பாக அடுத்த தேர்தலுக்கு குறிவைத்திருக்கும் அரசியல்வாதிகள் குப்பைகளை அகற்றுகிறோம் என்கிற பெயரில் தங்களையும் விளம்பரபப்டுத்தி வெளிக் கொண்டு வருவார்கள் என்று பிரதமர் நினைத்து இருக்கலாம். இந்த யுக்தியும் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் அதே நேரம் “ தெருத் தெருவாய்க் கூட்டுவது பொதுநலத் தொண்டு – ஊரார்  தெரிந்து கொள்ளப் படம் பிடித்தால் சுயநலம் உண்டு !மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் –தம்
மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் “ என்று வாலி எழுதி சவுந்தரராஜன் பாடி எம்ஜியார் வாயசைத்த பாடலின் வரிகள் நமது நினைவுக்கு வருவதையும் ஏனோ நம்மால் தடுக்க இயலவில்லை.   ‘கோழி குருடாக இருந்தால் என்ன குழம்பு ருசியாக இருந்தால் சரி’  என்ற தத்துவத்தின்படி குப்பைகள் அகன்றால் சரி என்று பிரதமர் நினைத்து இருக்கலாம்.இந்தத்திட்டம் தேச உணர்வால் உந்தப்பட்டது ; இது அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்றும்  பிரதமர் தனது ஆரம்ப உரையில் பேசி இருப்பதும் பாராட்டுக்குரியதுதான். அதே வேளை மராட்டியம் மற்றும் ஹரியானா இடைத்தேர்தல்களில் “ தூய்மை இந்தியாவை அறிமுகப்படுத்திய மோடி சர்க்காருக்கே வாக்களியுங்கள்” என்ற முழக்கங்களால் அந்த மாநிலங்களில் வாழ்வோரின் செவிப்பறைகள் கிழிந்துவிட்டதாக சொல்கிறார்களே அதற்கு என்ன செய்வது? ஆகவே அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்தத் திட்டமும் அரசுகளால் முன்னெடுக்க முடியாது என்பதே உண்மை.ஆனால் ஒன்று நிச்சயம். அரசின் எந்ததிட்டமும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் முழுமையாக நிறைவேற்ற  இயலாது. அதிலும் குறிப்பாக சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, தூய்மைப் பணி ஆகிய காரியங்களில் அரசின் திட்டங்களை மட்டும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க் கூடாது என்பதே நமது கருத்து.   தூய்மை  இன்மையால் வருடத்துக்கு 6500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறி இருப்பதை மக்கள் இந்தப்பணம் தங்களின் சொந்தப்பணம் என்று சிந்திக்கத் தொடங்க  வேண்டும்.தண்ணீர் ஓடுவதற்காக அரசோ  உள்ளாட்சி அமைப்புகளோ கால்வாய்களைத்தான்  வெட்டித் தர  முடியும். ஆனால் அவற்றில் குப்பைகளைக் கொண்டுபோய்க் கொட்டி தண்ணீர் ஓட வழி இல்லாமல் கொசுக்களை குடும்ப விருத்தி செய்ய வழி வகுப்பது யார்? பொது மக்கள்தானே!கட்டணக் கழிப்பிடம் என்று காண்ட்ராக்ட் எடுத்து காசுகளை மட்டும் பறித்துக் கொண்டு கழிப்பிடங்களில் தண்ணீர் இல்லாமலும் கதவுகளை நொண்டி அடிக்கவும் வைத்திருப்பது யார்? பொதுமக்களில் ஒரு   பகுதிதானே !கட்டணக் கழிப்பிடமென்று தனியாக ஒரு இடத்தை ஒதுக்கி வைத்து இருந்தாலும் ஆடு மாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு கண்ட இடங்களிலும் நாகரிகம் இல்லாமல் வெட்கமும் இல்லாமல் வேஷ்டி & லுங்கிகளைத் தூக்கிகொண்டு நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ  சிறு நீர்கழிப்பதும் பொதுமக்கள்தானே! அண்மையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தேங்கிக் கிடந்த சிறுநீர் அன்று பெய்த மழையில் பொங்கி வழிந்து பேருந்து நிலையம் முழுதும் நாற்றமெடுக்கவைத்ததற்கும் காரணம் பொதுமக்கள்தானே! இதுபோல காட்சிகள் நாடு முழுதும் காணலாமே! சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் வெட்டவெளியில் கழிக்கும் நிலையில் நாட்டை வைத்திருப்பது கேவலமாக இல்லையா? மங்கல்யான் விண்கலத்தை விண்ணுக்கு ஏவும் அளவுக்கு வளர்ந்துள்ள நாடு காலைக்கடனைக் கழிப்பதற்கு தனது மக்களுக்கு என்ன வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறது? அப்படியே வசதிகள் செய்து கொடுத்தாலும் அவற்றைப் பயன்படுத்தும் அறிவும் முறையும் பழக்கமும் நமது மக்களிடம் வளர்ந்துவிட்டதா?  சரியாக தண்ணீர் ஊற்றாமல் கிடக்கும் கழிப்பறைகள் நமது கண்களில் படுகின்றனவா இல்லையா?சிங்கப்பூர் மலேசியா மற்றும் அரபு நாடுகளில் வேலை செய்யும் நமது தோழர்கள் அந்த நாடுகள் பின்பற்றும் சட்டபூர்வமான சுகாதாரவிதிகளை மீறுவதில்லை. உதாரணமாக ஒரு காரில் பயணம் போகும்போது அருந்தும்  குளிர்பானத்தின்  பாட்டில்களையும், பழங்களின் தோல்களையும் ஒரு பையில் போட்டு குப்பைப் போடுவதற்காக சாலை ஓரங்களில் பிரத்யோகமாக வைக்கப்பட்டு இருக்கும் கூடைகளில் நமது வண்டிகளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டுப் போட்டுவிட்டுச் செல்கிறோம். காரணம் அந்த நாட்டில் பின்பற்றப்படும் பயமுறுத்தும் சட்டங்கள்.அதே நாடுகளில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும் நாம் விமான நிலையத்தில் இறங்கி வெளியேறியதும் சட்டங்களி மீறுவதற்கு நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடுவதாக உணர்கிறோம்.  பசிக்காக சாப்பிடும் பழத்தோலை நாம் பயணிக்கும் வண்டியில் இருந்து கொண்டே சாலையில் வீசி எறிகிறோமா இல்லையா? அப்படியானால் மற்ற நாடுகளின் தூய்மையைக் காக்கும் நாம்,  நமது பிறந்த நாட்டை நாமே       கேவலப்படுத்துகிறோம்தானே!வெளிநாடுகளில் வேலை செய்யும் போது  பதினாறாவது மாடியில் குடி இருந்தாலும் காலை  நேரங்களில் வேலைக்குச் செல்லும்போது நாம் அணிந்திருப்பது  கோட் சூட்டாக இருந்தாலும் நமது கைகளில் முதல்நாள் நமது வீட்டில் சேர்ந்த மீன்குடல் போன்ற நாற்றக் கழிவுகளைக் கூட சுமந்துவந்து அதற்கான கூடையில் போட்டுவிட்டுத்தானே அலுவலகம் போகிறோம். ஆனால் நமது ஊரில்,  நமது வீட்டுக் கழிவுகளை,  கண்ட இடங்களில் நாமே கொட்டுகிறோமா இல்லையா? நமது ஒழுக்கமும் பண்பாடும் இன்னொரு நாட்டில் பயன்படுத்த மட்டும்தானா?கண்ட இடங்களில் ஒன்று மட்டும் இரண்டாம் இயற்கைக் கடமைகளை நிறைவேற்றுவது, வீட்டு ஜன்னலிலிருந்து எச்சில் துப்புவது, பஸ்களில் பயணிக்கும்போது பட்டாணிக்கடலை மற்றும் நிலக்கடலைகளைக் கொறித்துவிட்டு அவற்றின் தோல்களைக் காற்றில் பறக்கவிட்டு சக பயணிகளின் முகத்தில் விழவைப்பது, மூக்கை சிந்தி சுவர்களில் தேய்ப்பது , உணவுவிடுதிகளில் வாய் கொப்பளிக்கிறேன் என்று பெருங்குடலும் சிறுகுடலும் ஒன்றாக வெளியே வந்து விழும் அளவுக்கு காரிக் காரித்துப்புவது ஆகிய பழக்கங்களை, ‘ பாருக்குள்ளே நல்ல நாடு இந்த பாரத நாடு’  என்று பாடிக் கொண்டே செய்யலாமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பிளாஸ்டிக் உபயோகத்தை உள்ளூராட்சிகள் தடை செய்து நகரெங்கும் அறிவிப்புப் பலகைகள். ஆனால் நடைமுறையில் நல்ல பெரிய பையாக கேட்டும்  வாங்குகிறார்கள்; போட்டும் தருகிறார்கள்.  விருந்துகளில் தண்ணீர் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் பரிமாறப்படும்போது அந்த சஹனில்,  சுற்றுச் சூழலைக் கெடுக்கும் விஷமும் சேர்த்து பரிமாறப்படுவதை நாம் உணர்கிறோமா?குர்பானி செய்யப்பட்ட கறிகளை விநியோகிக்கும்போது நன்மையுடன் பாவத்தையும் பிளாஸ்டிக் பைகளில் சேர்த்து நாம் விநியோகிப்பதை நாம் எப்போது உணர்வோம்?விருந்துக்கு வராத உறவினர்களுக்கு உணவு அனுப்ப பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி உணவுகளை சுடச்சுட அனுப்பும்போது அவர்களுடைய  வயிற்றுக்கு கேன்சரையும் சேர்த்து நாம் அனுப்புகிறோம் என்பதை எப்போது நாம் அறியப் போகிறோம்?பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க நினைப்பவர்கள் அந்தப் பைகளின் உற்பத்தி நிலையங்களின் லைசென்சுகளை இரத்து செய்யாமல் விட்டு வைத்து இருப்பது ஏன் ? விஷம் வரும் வழியை அடைக்காமல் விஷ முறிவு ஊசி போடுவதால் பயன் உண்டா ?சுத்தமும் சுகாதாரமும் அவரவர் வீடுகளில் பிறந்து வளர வேண்டிய செல்லக் குழந்தைகள். அவற்றை  அரசு மட்டும் வளர்த்துவிட இயலாது. பெற்ற பிள்ளைகளை  பேணி வளர்ப்பது போல் நாமும் சுயமாக முயற்சி செய்து வளர்க்க வேண்டும். Health is Wealth என்று சொல்வார்கள். “தூய்மை இறை வணக்கத்தில் பாதி   “ என்பது பெருமானார் ( ஸல்) அவர்கள் நவின்ற நபி மொழி . ‘சுத்தம் சோறு போடும்’ என்று ஆரம்பப் பள்ளிகளிலேயே படித்து இருக்கிறோம்.   ஆகவே ஆரோக்கியமான சுற்றுச் சூழல் மற்றும் தூய இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் முயலவேண்டும். இதை அரசுதான் செய்யவேண்டுமென்று தனிமனிதன் எதிர்பார்ப்பது,  தனிமனிதனின் தன்மையை தானே கேவலப்படுத்திக் கொள்ளும் செயலாகும்.

Thanks to: Adirai News

No comments: