அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Tuesday, February 3, 2015

விழிப்புணர்வு பணியில் ஒரு ஏழைத் தொழிலாளி‬!

நாகப்பட்டினம், நாகூரில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. 4 வயதில் பெரியாரிடம் கைகுலுக்கியவர். 12 வயது முதல் ஷஹீத் பழனிபாபாவுடன் நெருக்கம் பாட்டியவர்.

நாயுடு சமூகத்தில் பிறந்து கிருஷ்ணமூர்த்தியாக இருந்து தனது 18வது வயதில் முகம்மது அம்ஸாவாக சத்திய மார்க்கத்தை தழுவிக் கொண்டார். இதுவரை 43 பேரை நேர்வழிப்படுத்தி இருப்பதாகக் கூறுகிறார். இன்று தமுமுகவின் தீவிர ஊழியராக செயல்படுகிறார்.

நான் கடந்த பிப்ரவரி 1 அன்று நாகப்பட்டினத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் சாகுல் இல்லத் திருமணத்திற்குச் சென்றிருந்த போது இவரை சந்தித்தேன்.

சுற்றுச்சூழல் ஆர்வமும், பசுமைப் பரப்புரைக்கான உணர்வும் அவரது பேச்சில் ததும்பியது. வருடந்தோறும் மூலிகைச் செடிகள், பழக்கன்றுகள் என சுமார் 1500 செடிகளை இலவசமாக எல்லோருக்கும் கொடுக்கிறார். இதை 18 வருடமாக செய்து வருகிறாராம்!

இவரிடம் இதயநோய், குழந்தையின்மை, இரத்தக் கொதிப்பு, இரத்த சோகை, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி உள்ளிட்ட வியாதிகளுக்கு ‘பாட்டி வைத்தியம்’ மூலமாக மருந்துகள் கிடைக்கிறது. அதுகுறித்து தன் கைப்பட எழுதிய ஆலோசனைகளை நகலெடுத்து இலவசமாகக் கொடுக்கிறார்.

முக்கியமாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த நாவல்பழம், நெல்லிக்காய், கொய்யா, பாகற்காய், பட்டை ஆகியவற்றிலும், கிரீன் டீயிலும் தீர்வு இருப்பதாக துண்டுப் பிரசுரம் மூலம் அறிவிக்கிறார்.

மிக முக்கியமாக சிளிஷிஜிகிசிணிகிணி எனப்படும் இன்சுலின் செடியை வளர்த்து எல்லோருக்கும் இலவசமாகக் கொடுக்கிறார். அதிலிருந்து தினம் ஒரு இலையைத் தின்றால் ஒரே மாதத்தில் சர்க்கரை வியாதி கட்டுக்குள் வருகிறதாம். இதை அங்கீகரிக்கும் வகையில் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தையும் நம்மிடம் காட்டினார்.

ஒரு செடிக்கு எவ்வளவு பணம் வேண்டும்? எனக் கேட்டால், அதைக் கண்டிப்புடன் மறுத்து விடுகிறார். இவை அனைத்தையும் விழிப்புணர்வாகவும், சேவையாகவும் செய்வதாகக் கூறியவர், இதனால் எனக்கு மறுமையில் நன்மை கிடைக்கும் என்கிறார். என்னால் நம்ப முடியவில்லை! அவ்வளவு நேர்மை!

அவரது பாராட்டுக்குரிய மற்றொரு பணியை எல்லோரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஆயிரம் மாணவ மாணவிகளின் புத்தகங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவச பைண்டிங் சேவையையும் செய்து வருகிறாராம்!

மரக்கன்றுகள் கேட்டு யார் வந்தாலும், சிரமேற்கொண்டு அதை இலவசமாக கொடுத்தனுப்புகிறார். மரங்களை குழந்தைகள் போல நேசிக்கிறார்.

எங்களிடம் பேசிக் கொண்டிருந்தவர், தனது செல்ல மகளை அறிமுகப்படுத்தி விட்டு தொழிலுக்குப் புறப்பட்டார்!

என்ன தொழில்? ஆம். அவர் ஒரு தட்டு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியாம்! கால் வலிக்க மிதித்தால் மட்டுமே அன்றாடம் வாழ்க்கை நகரும்!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா...? ஏழைகளின் இதயத்தில்தான் மனிதநேயம் மிகுந்திருக்கிறது. இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க பிரார்த்திப்போம்.

அவரைத் தொடர்பு கொள்ள 9940882509

- எம். தமிமுன் அன்சாரி

Thanks to:   
https://www.facebook.com/mmkansari/photos/a.796052577104095.1073741828.796023993773620/910584545650897/?type=1

No comments: