அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Friday, November 28, 2014

[ 1 ] தஞ்சையும் சஹாராப் பாலைவனம் ஆகுமா ? மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து அதிரையின் பிரபலங்கள் எழுதும் ஆய்வுத்தொடர் !

அண்மையில் தஞ்சாவூரில் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் சார்பில் காவிரி டெல்டாப் பகுதிகளில் இருந்து மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கருத்தரங்கமும் குறுந்தகடுக் காணொளி நிகழ்வும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தின் வாழ்வாதாரத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒரு  நிகழ்வு பற்றிய இந்த முக்கியமான கருத்தரங்கில் பார்வையாளர்களாக  பங்கு பெரும் வாய்ப்பு எனக்கும் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுக்கும் கிடைத்தது.

அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட அறிஞர்  பெருமக்களால் பேசப்பட்ட கருத்துக்களின் தொகுப்பை இங்கு பகிர்வது அவசியம் என்று நினைக்கிறேன். ஒரு சம்பிரதாயத்துக்காகக் கூட  பகிர்வதில்  மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்று கூட சொல்ல முடியாத சோகம் இந்தப் பேசுபொருளில் அடங்கி இருக்கிறது.   காரணம் இந்தத் தொடரில்  பகிரப்படும் செய்திகள்  நம்மால் சரியாக புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில் நமது மண்ணையும் அதன் மாண்பையும் காதலிக்கும் நாம் மகிழவே முடியாது.

முதலாவதாக,  இந்தக் கருத்தரங்கை நடத்தியவர்கள்- அங்கே கருத்து மழை பொழிந்தவர்கள் -  அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்ற மரியாதைக்குரிய மூத்த பொறியாளர்கள் ஆவார்கள். சுத்தமான கரங்களுடன் பல ஆண்டுகள் அரசுப்பணியில் – பொதுப்பணித்துறையில் -  பணியாற்றி ஒய்வு பெற்று அவர்களது ஆண்டாண்டுகால அனுபவங்களை அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட விதத்தைப் பாராட்டுவது ஒரு புறமிருந்தாலும்,   ஒய்வு ஊதியம் பெற்று வாழ்ந்து வரும் அவர்கள்,  தங்களின் சொந்தப் பணத்தைத் திரட்டி இப்படி ஒரு கருத்தரங்கை தஞ்சாவூரிலும் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன் திருவாரூரிலும் வெற்றிகரமாக விளக்கமாக நம்மை எதிர் நோக்கி இருக்கும் ஒரு அபாயத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் நடத்திய அவர்களின் சமூக அக்கறை மிகுந்த நல்ல எண்ணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ‘உண்டாலம்ம இவ்வுலகம் ‘ என்கிற புறநானூற்று வரிகளுக்கொப்ப இப்படிப்பட்ட நல்லவர்களால்தான் இந்த உலகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

இந்தக் கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் யாவும் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த திரு. கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது.

இந்த விழிப்புணர்வுப் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுள் பொறியியல் அறிஞர்களான திரு. அ. வீரப்பன், திரு.ந. கைலாசபதி, திரு. மு. மூர்த்தி ஆகியோர் இன்றியமையாதவர்களாவார்கள். இவர்களுடன் திரு. பரந்தாமன் அவர்களின் ( திரு. பரந்தாமன் அவர்கள் அதிரை செக்கடிக் குளத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஆலோசனை நல்கியவர்)   ஒத்துழைப்பையும் நாம் குறிப்பிட்டு பாராட்டியாக வேண்டும்.

குடுகுடுப்பைக்காரன்கூட குத்தாட்டம் போட்டு விளம்பரம் தேடும் இக்காலத்தில்,  வெளியே தெரியாமல் ஒரு நல்ல பணியில் தங்களுடைய முதிய வயதில் தங்கலை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இவர்களையும் இவர்களது அணியைச் சேர்ந்த அனைத்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினரையும் நாம் கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த இடத்தில் இந்த சங்கத்தினர் பற்றி  ஒரு சில தகவல்களையும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

இதே தமிழ்நாடு பொதுப் பணித்துறையின் மூத்த பொறியாளர் சங்கம் ஏற்கனவே முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு நீதி மன்றங்களில் நடை பெற்ற காலங்களில் எதிர்த்து வழக்காடிய கேரள அரசின் முகமூடியைக் கிழித்தவர்கள் என்பதையும் நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பல தொழில் நுணுக்க விபரங்களை வெளியிட்டு நீதி மன்றங்களுக்கே வழிகாட்டிகளாகத் திகழும் வண்ணம் பல கருத்தரங்கங்களையும் குறுந்தகடுகளையும் வெளியிட்டு விழிப்புணர்வூட்டினர். மூத்தபொறியாளர்கள்  அவர்களுடைய பரப்புரைகளில் எடுத்துவைத்த கருத்துக்களைத் தாங்கித்தான் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப் பட்டு இன்று 142 அடிகள் தண்ணீர் தடையின்றி தேக்கப்பட்டு தமிழகத்தின் தேனி மற்றும் மதுரை மாவட்டங்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடின.  கடந்த வெள்ளிக் கிழமை,  அந்த அணையைச் சுற்றி 142 பானைகளில் சர்க்கரைப் பொங்கல் பொங்கக் காரணமானவர்கள் இவர்கள்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்- அதற்கான தீர்வுகள் பற்றிய ஆய்வினையும் ஒரு குறும்படத்தையும் இந்தக் குழுவினர் ஆய்ந்து அளித்தனர். வெறும் கோஷமும் வேஷமுமாகப் போன காவிரிப் பிரச்னையின் உள்ளார்ந்த உண்மைகளை தோல் உரித்துப் போட்டார்கள் இவர்கள்.

சேதுக்கால்வாய்த்திட்டத்தின் வாயில் அரசுகள் மண்ணை அள்ளிப் போட்டபோதும் அந்தத்திட்டம் அனைவருக்கும் பயனளிக்கும் திட்டமென்று ஆய்ந்து அறிக்கை தந்து அந்த அறிக்கையை கையேடாகவும்  வெளியிட்டது இந்த மூத்தோர் அமைப்பு.

தேசிய நீர்க் கொள்கையின் தீங்குகளைப் பட்டியலிட்டு அந்தக் கொள்கை எதிர்க்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி துண்டறிக்கை முதலியவற்றை வெளியிட்டு தமிழ் மக்களிடையே தேவையான விழிப்புனர்வுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது இந்த ‘கைம்மாறு வேண்டாத கடப்பாடு ‘ உடைய  அமைப்பு.

ஆகவே  அறிவார்ந்த ஆன்றோர் அங்கம் வகிக்கும் இந்த  அமைப்பு இத்தகைய அரும்பணிகளைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

அதே வகையில்தான் காவிரி பாயும் கன்னித்தமிழ்நாட்டை – காவிரி பாயும் தஞ்சை வளர் மண்ணை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து இந்த வயதானவர்கள் வரிந்து கட்டி இருக்கிறார்கள். அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொண்ட விழிப்புணர்வுக் கருத்துக்களை நாமும் அனைவருடனும் பகிர்வது நமது வாழ்வாதாரத்தை எதிர் நோக்கியுள்ள ஆபத்தை அறிந்து கொள்ள உதவும்.  இந்த ஆபத்தை இதன் மூலம் உணர்ந்து அதை  எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டியதுடன் கூடிப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளபட்டிருக்கிறோம் என்பதையும் தொடக்கமாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.  

சோழவளநாடு என்ற பெயருடன் தமிழக மக்களுக்கு சோறும் சுகமும் விவசாயமும் வேலையும் அளித்து பேருதவி புரியும் காவிரியாறு ,

“ பூவார் சோலை மயிலாடப் புரிந்து குயில்களிசைபாட காமர் மாலையருகை நடந்தாய் வாழி காவிரி ! “ என்றும்

“ உழவர் ஓதை மதகு ஓதை உடைநீர் ஓதை தன்பதங்கொள் விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி ! “ என்றும் சிலப்பதிகாரத்தில் புகழப்படுகிறது. ( ஓதை = ஓசை என்பதன் மருவு )

‘சோழநாடு சோறுடைத்து’ என்கிற சொலவடைக்கு சொந்தமான நாட்டை சொர்க்கமாக ஆக்குவதற்கு காலம் காலமாக கட்டியம் கூறி நிற்பது காவிரி. தமிழர்களின் ஊணொடும் உயிரோடும் ஒன்றாய்க் கலந்த  ஒரு சுவையான சொல்லே காவிரி. இன்று அரசு அறிமுகபடுத்தப் போகும் மீத்தேன் எரிவாயு திட்டத்தால், ‘ சோழநாடு சேறுடைத்து ‘ என்று மாறிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் மலைகளில் பிறந்து அலைகளில்  மறைந்து கலக்கும் காவேரி, அப்படிக் கலக்கும் முன்பு  தான் நடந்து வரும் பாதையைப் பண்படுத்தி பயிர் வளர்த்து,  உயிர் வளர்த்து , உலகையே  உயர்வுற வளர்க்கும் உயர் தன்மை படைத்தது.

இந்தக் காவிரி பாயும் டெல்டாபிரதேசத்தின் இயற்கையான அமைப்புகளை நாம் அறியும் போது நமது புருவங்கள் உயருகின்றன. இந்த அமைப்புகளை ஏற்படுத்தியவர்கள் எவரும் இன்றைக்கு இந்தப்  பகுதிகளை பாலவனமாக்கிப் பலியிடத் துடிக்கும் இன்றைய  அரசியல்வாதிகள் மற்றும் ஆள்வோரோ அல்லது ஏற்கனவே ஆண்டவர்களோ  அல்ல. வரலாற்று ரீதியாக , இத்தகைய அமைப்பை இயற்கையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னர்களும் குறிப்பாக கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனும் வருங்காலத் தலைமுறைக்குத் தாயாக இருப்பாள் காவேரி என்ற தத்துவத்தில்  ஏற்படுத்தித் தந்தார்கள். ஒரு தலைமுறைக்கல்ல பல தலைமுறைகளுக்காக என்றோ ஆட்சிசெய்த மன்னாதிமன்னர்கள்   திட்டமிட்டு ஏற்படுத்திய அமைப்புகள் இன்றைய மண்ணாங்கட்டி அரசியல்வாதிகளால் சூறையாடப்பட சூத்திரம் வகுக்கப்பட்டு இருக்கிறது. பாட்டன் தேடிய சொத்துக்களை பேரன்மார்கள் காப்பாற்றாமல் காலி பண்ணத் துடிக்கிறார்கள்.

36 கிளை ஆறுகள்  2300 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் மற்றும் வாய்க்கால்கள் கொண்ட கட்டமைப்பு கொண்டது காவிரிப் படுகை. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் என்று பிரிக்கப்பட்டு இருந்தாலும் இம்மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட மலைகளோ,  பாறைகளோ இல்லாத பரந்து விரிந்த சமவெளிப் பிரதேசம் என்பது இயற்கை கொடுத்த நன்கொடை. இந்த நன்கொடையைப் பறித்து தங்களின் கணக்கில் போட பல தீயவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள்.

எங்கோ கர்நாடகத்தில் உற்பத்தியாகி தனது பயணத்தைத் தொடங்கும்  காவிரி பல மைல் தூரங்களையும்  பல மாநிலங்களையும் பல மாவட்டங்களையும் கடந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள வங்காள விரிகுடாக் கடலில் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறது. தனது பயணப்பாதையை சொர்க்க பூமியாக ஆக்குகிறது காவிரி. இந்தக் காவிரியின் பாதையில்தான் கைவைக்கத் துணிந்துவிட்டார்கள் . காவிரி  என்றாலே சோலைவனங்கள் விரியும் என்றுதான்  பொருள்.  அதன் இயல்பை மாற்றி பாலைவனமாக ஆக்கப் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க அரசுகளே வழி திறந்து விட்டு இருக்கும் அவலம் எப்படி இருக்கிறது என்றால் நமது சொந்த வீட்டில் கொள்ளை அடிக்க ஒரு குஜராத்தியின் கம்பெனிக்கு கொல்லைப் புறக் கதவின் தாழ்ப்பாளைத் நடு இரவில் திறந்துவிடுவது போலத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு - தமிழ் இனத்துக்கு உயிரூட்டும் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கும் - அங்குவாழும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் தீங்கானது; தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதை நாம் உணர வேண்டும்; எதிர்க்க வேண்டும்; போராட வேண்டும்; தடுத்து நிறுத்திட வேண்டும்.

பழம்பெரும் வரலாறும் பண்பாடும் கொண்ட நமக்கும் நமது பூமிக்கும்  இந்தத் திட்டத்தால் வரவிருக்கும் நிலவளத்துக்கான   தீங்குகள் யாவை? இந்தத்திட்டம் செயல் படும் முறைகள் யாவை? இந்தத்திட்டம் நிறைவேறினால் வரும் உடல்நலத்துக்கான   பாதிப்புகள் யாவை? போன்ற அனைத்து செய்திகளையும் அறிவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் பொறியாளர்கள் ஊதும் அபாய சங்கு பற்றி  இந்தக் குறுந்தொடரில் நாம் ஆராயலாம். இன்ஷா அல்லாஹ்.  

பாலை வார்த்த நிலம் – இனி
பாலை நிலமாய் ஆகிடுமா ?
 
ஆய்வு தொடரும்...  
 
கலந்தாய்வு: பேராசிரியர் அப்துல் காதர் M.A. M. Phill
எழுத்தாக்கம்: இப்ராஹீம் அன்சாரி M.Com,

குறிப்பு: பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் ஆலோசனைப்படி இந்தத் தொடர் பதிவு அதிரை நியூஸ் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி பிற சகோதர வலைதளங்களும் வெளியிடுவதை வரவேற்கிறோம்.

Thanks to News Source:
http://www.adirainews.net/2014/11/1.html

No comments: