அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Friday, March 27, 2015

தண்ணீர்: வழிகாட்டும் துபை




ராமநாதபுரத்தில் பெய்யும் மழையில் 1% மழைகூட ஓராண்டு முழுக்க இங்கு பொழியாது.


நன்னீர் ஏரிகள் எதுவும் இல்லை, ஆறுகள் இல்லை,நிலத்தடிநீர் இல்லை. ஓரளவிற்கு மேல் ஆழமாக தோண்டினால் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும்.



ஆனால் இந்த தேசம் தண்ணீரில் தன்னிறைவடைந்த தேசம்.24 மணி நேரமும் தடையில்லாமல் வீடுகளுக்கு தண்ணீர் வரும்.



முழுக்க முழுக்க கடல்நீரை மட்டுமே நம்பி நா நனைகிறது.



குடிக்கும் நீர் கடலில் இருந்துதான் எடுக்கப்பட்டது என சத்தியம் செய்து சொன்னாலும் சிலர் நம்ப மறுப்பார்கள்.



'காசுக்கு ஏற்ற தோசை' என்பதுபோல இங்கு தண்ணீர் 'காஸ்ட்லி'தான்.



1லி பெட்ரோல் 1.80 திர்ஹம்ஸ் (ரூ.30) 1லி தண்ணீர் குடுவை கடைகளில் 3 திர்ஹம்ஸ் (ரூ.51)விலைக்கு விற்பனையாகும்.



Dubai Electricity and Water Authorityயால் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் நீர் இந்த அளவிற்கு அதிக விலை இருக்காது.நீரின் தரமும் நன்றாகவே இருக்கும்.



DEWA வீடுகளுக்கு தண்ணீரை விநியோகித்து மட்டும் கட்டணம் வசூலிப்பதில்லை.வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீருக்கும் அதன் அளவை பொறுத்து கட்டணம் உண்டு.



வீடுகளிலிருந்து வெளியேறும் அந்த கழிவு நீர்தான் மறுசுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்கள்,பூச்செடிகள்,பூங்காக்களுக்கு சொட்டு நீர்,தெளிப்பு நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது.

ஜீலை,ஆகஸ்ட் மாதங்களில் சர்வசாதாரணமாக 115° F வெப்பம் வீசும் காலத்திலும் இங்கு சாலை ஓரங்களில் பல வண்ண பூக்கள் பூத்துக்கொண்டிருக்கும்.

அந்த செடிகளின் வேர்களில் நீர் சொட்டிக்கொண்டிருக்கும்.



தண்ணீரை வீணாக்காமல் அதைக்கொண்டு நகரை அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை ரசிக்க செய்கிறார்கள்.



இன்று உலக தண்ணீர் தினம் என்றதும் ,ஒரு காலத்தில் தண்ணீரில்லாத இந்த தேசம் இன்று நீர் மேலாண்மையில் பெற்றிருக்கும் ஆற்றலை எழுத வேண்டும் என தோன்றியது.



- நம்பிக்கை ராஜ்


Thanks to: https://www.facebook.com/tamilnewsonly

Thursday, March 26, 2015

2050-ல் உலகமே தண்ணீருக்கு அடித்துக் கொள்ளும் !!?

adiraitiyawest

2050ஆம் ஆண்டில் உலகம் தண்ணீருக்காக சண்டை போட்டுக்கொள்ளும் நிலை உருவாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் ’வைலி இன்டர்டிஸிப்ளினரி ரிவ்யூஸ்’ என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளது. உலகில் தண்ணீரின் பயன்பாடு இப்போது உள்ளது போன்றே தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் மத்தியில் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின் பயன்பாடு மற்றும் மக்கள் தொகை பெருக்கம் ஆகியவற்றை அடைப்படையாக கொண்டு இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய தொழில்நுட்பங்கள், விழிப்புணர்வு காரணமாக, 1980-ஆம் ஆண்டு முதல் நீரின் பயன்பாடு குறைந்துள்ளது என்பது உண்மை.
அதே சமயத்தில், தேவையான நீரை உற்பத்தி செய்வதும் தேக்கம் அடைந்துள்ளது.
தற்போது உலக மக்கள்தொகை சுமார் 700 கோடியாகும். 2050-ஆம் ஆண்டில் இது 960 கோடியாக அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல், கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுப்பதில் புதிய தொழில்நுட்பம் உருவாதல் ஆகியவைதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to: http://adiraitiyawest.blogspot.ae/2015/03/2050.html

Saturday, March 21, 2015

இன்று உலக வன நாள் (மார்ச்--21)

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 20.5% வனங்கள்.
அதாவது 6,75,539 சதுர கிலோமீட்டர்.

இந்தியா போன்ற வெப்பநிலை கொண்டநாட்டில்
33% வனங்கள் இருக்கவேண்டும்.

இல்லாதது ஒருபக்கம்
இருப்பதிலும் சராசரியாக வருடம் ஒன்றிற்கு
1.3 மில்லியன் ஹெக்டேர் வனங்கள் இங்கு அழிக்கப்படுகிறது.

ஒரு ஹெக்டேர் என்பதை
2.47 ஆல் பெருக்கினால் வருவதே
ஒரு ஏக்கர்.

தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு
1,30,058 சதுர கிலோமீட்டர்

இதில் வனங்களின் பரப்பு
21,482 சதுர கிலோமீட்டர்
இது 16.5%

அப்புறம் மழை எங்குட்டுக்கூடி பெய்யும்?
இன்று உலக வன நாள் (மார்ச்--21)

நன்றி: சூர்யா சேவியர்

FB / Shared By : N. Senthil Kumar

Thursday, March 19, 2015

நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி பி.ராமராஜ் சாதனை


தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோம்பை கிராமம். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் இருப்பதால், மழை மறைவு (மழை பெய்யாத) பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் பல இடங்கள் வானம் பார்த்த பூமியாக கிடந்தது. சில இடங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு என மானாவாரி சாகுபடி மட்டும் நடந்து வந்தது.

இந்நிலையில், கோம்பை பேரூராட்சித் தலைவராக கடந்த 1996-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ராமராஜ் என்ற விவசாயி, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மானாவாரி சாகுபடி தவிர, மற்ற காய்கறிகளை சாகுபடி செய்ய, தமிழக அரசுடன் இணைந்து தற்போது வரை சிறியதும், பெரியதுமான நானூறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளார்.
தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பு

74 வயதானாலும் இளைஞரைப் போல சுறுசுறுப்புடன் வேலை செய்து வரும் பி. ராமராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கோம்பை மேடான பகுதி என்பதால், முல்லை பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் வழியாக தண்ணீரைக் கொண்டு வரமுடியில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. பல விவசாயிகள் பிழைப்பு தேடி, வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் தொடங்கியது எனக்கு வேதனை அளித்தது.

இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய நினைத்த நேரத்தில், அரசு 1997-ம் ஆண்டு நதி நீர் பள்ளத்தாக்கு திட்டத்தை, தேனி மாவட்டத்தில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் கோம்பை பேரூராட்சியையும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டேன். இதனையடுத்து, செயற்கைக் கோள் மூலம் கோம்பை பகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஓடைகளை கண்டறிந்து, அதன் குறுக்கே எனது பதவிக் காலத்திலேயே 240 தடுப்பணைகள் கட்டப்பட்டன. மானாவாரி காடுகளில் நீரை தேக்க 1500 ஏக்கருக்கு மண் கரைகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

பின்னர், தேர்தலில் போட்டியிடாமல் மேற்குமலை தொடர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் என்ற சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்துகொண்டு தோட்டக்கலை பொறியியல்துறை மூலம் ஆண்டுதோறும் 5 தடுப்பணைகள் வீதம் 10 ஆண்டுகளில் 50 தடுப்பணைகளும், வனத்துறை மூலமாக 48 தடுப்பணைகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்களிப்புடன் இரண்டு பெரிய தடுப்பணைகளும் என, இதுவரை 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் 36 தடுப்பணைகள்
தற்போது தோட்டக்கலை பொறியியல் துறை மூலம் 36 தடுப்பணைகள் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழைநீர் சேமிப்பு, மண்வள பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் என்ற மற்றொரு புதிய சங்கத்தைத் தொடங்கி சேதமடைந்த தடுப்பணைகளை அரசு உதவியை எதிர்பார்க்காமல், இதுநாள் வரை விவசாயிகள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இப்பகுதியில் மானாவாரி விவசாயமே நடந்துவந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், கடந்த சில ஆண்டுகளாக தென்னை, வாழை, கொத்தமல்லி என மற்ற பயிர்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
வெளியூர் சென்ற விவசாயிகளும் சொந்த ஊருக்குத் திரும்பிவந்து விவசாயத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர் என்றார்.

நன்றி : தி இந்து ( 18.03.2015)
முகநூல் பகிர்வு:  பழநி பெரியசாமி

Thursday, March 12, 2015

மரங்கள் என்றும் பசுமை





கொற்றக் குடைகள். மரங்களின் பயன்கள் மகத்தானவை.
பசிக்குப் பழங்கள் தருகின்றன. நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றன. சுவாசிக்கக் காற்றைத் தருகின்றன. குழந்தைகளுக்குத் தொட்டிலையும், இளமைப் பருவத்தில் சுட்டிலையும், முதுமைப் பருவத்தில் ஊன்று கோலையும், இறக்கும்போது எரிக்க விறகையும் தருகின்றன. மரங்களின்றி வாழ்வு ஏது?

உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம், மரம் நமக்கு என்ன தருகிறது?
மலர்கள், காய், கனிகள் தருகிறது, நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது, காற்றை சுத்தப்படுத்துகிறது, நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது. மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது. மரத்தைச் சுற்றி நீர் சேகரமாவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது. காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.

ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது. ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை.

மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:

1.
மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

2.
நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

3.
மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

4.
மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

5.
மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது.

6.
மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

7.
கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

8.
புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் (Mangrove swamps) வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

9.
உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

10.
மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்இப்படி தமிழ்நாட்டின் சாலைகளில் ஓடும் லாரிகளின் பின்புற தகட்டில் எழுதி வைத்திருப்பார்கள். மக்களை மரம் வளர்க்க தூண்டுவதற்கு இது உதவுமாம். (வேற என்னத்த சொல்ல கேட்டுக் கொள்ள வேண்டியது தான்). கோடிக்கணக்கில் செலவழித்து எத்தனையோ இலவசங்களை வழங்குகிறார்கள். இது போல் மரங்களை வாரி வழங்கியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு மிகப்பெரிய மழைக்காடு நிறைந்த மாநிலமாக மாறியிருக்கும்.
ஆனால் யாரும் செய்யவில்லை. என்ன செய்வது?

இது இருந்து விட்டு போகட்டும். உங்களால் முடிந்தால், உங்கள் வீட்டில் சிறிய அளவு இடம் இருந்தால் போதும்.

ஒரு தென்னங்கன்றை நடவு செய்யுங்கள். அது உங்களுக்கு ஏராளமானவற்றை இலவசமாக வாரி வழங்கும். இளநீர், தேங்காய், வீட்டு மொட்டை மாடியில் கூரையால் ஆன குளு குளு அறை, வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம், தலைக்கு தடவ எண்ணெய், தேங்காய் துருவல், வீட்டில் செடிகள் வளர்க்க கொடிப்பந்தல் அமைக்க கம்புகள் இப்படி தென்னையை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். பறிக்கப்படும் தேங்காய்கள், இட்லிக்கு சட்னியாவதும், ஆப்பத்துக்கு பாலாகும் போதும், ஏப்ரல் மாத வெயிலில் இளநீர் ஆவதுமாக தென்னையின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இளநீருக்கு மனிதரின் முதுமையை குறைக்கும் ஆற்றல் பலமாக இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தென்னை மரத்தின், இலை, தண்டு, பூ, மடல், தேங்காய் பிசிறுகள் என்று அனைத்துமே மனிதர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுகிறது. தேங்காய் நார்களை கொண்டு தற்போது அழகான மிதியடிகள், தரைவிரிப்புகள் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.

தேங்காய் ஓட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சட்டை பித்தான்கள் செய்யவும், எரிபொருளாகவும், பயன்படுகிறது. மரத்தின் தண்டு எரிபொருளாகவும், வீட்டுக்கான உத்திரம் போடவும், தூணாகவும் இருக்கிறது. கிராமங்களை கடந்து செல்லும் நீரோடைகள், கால்வாய்களை கடக்க தென்னை மரத்தின் தண்டு இருப்பதை பல இடங்களில் பார்க்க முடியும். தென்னை ஓலை தான் இன்றைய டிஜிட்டல் காலத்திலும் நகர வீடுகளின் குளிர்ச்சியான கூரை வேய்ந்த அறைகளை உருவாக்க முதல் தேர்வாக இருக்கின்றன.

மரத்தின் பாளையை, அதாவது பூமடலை நீரில் ஊற வைத்து ஊசியினால் சீராக நீளமாக கிழித்து எடுத்து அதனை வேலி கட்டவும், கூரை வேயவும் பயன்படுத்துகிறார்கள்.

தென்னை ஈர்க்குகள் வீடு சுத்தம் செய்ய துடைப்பமாக மாறிவிடுகிறது. உலர்ந்த கொப்பரையிலிருந்து கிடைப்பது தேங்காய் எண்ணெய். காலையில் எழுந்தவுடன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி குளித்தால் தான் பூரணமாக குளித்த சுகம் கிடைக்கும்.

தென்னை அதிகம் வளரும் பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தான் பிரதான சமையல் எண்ணெயாக பயன்படுகிறது. தேங்காயை அரைத்துப் பிழிந்தெடுக்கப்படும் தேங்காய் பால் இனிப்பும், துவர்ப்பும் சேர்ந்த ஒரு கலவை. இது குடல்புண், வாய்ப்புண்களை குணப்படுத்த சிறந்த மருந்தாக இருக்கிறது.

பகிர்வு: நண்பர் N. செந்தில்குமார்
முகநூல் வழியாக