அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Thursday, October 23, 2014

துளித் துளித் துளித் துளி மழைத் துளி ! அதுவே நமது உயிர்த்துளி !


தண்ணீர்! இயற்கையின் பெரும் வரப்பிரசாதமான தண்ணீரைப் பற்றி புகழாத ஆள் இல்லை. தண்ணீரின் புனிதத்தைப் பற்றி சொல்லாத மதங்களும் நன்னெறிகளும் இல்லை. தண்ணீரின்றி மனித இனமோ , விலங்கினங்களோ உயிர் வாழ முடியாது என்பது அனைவராலும் உணரப்பட்ட உண்மை.

ஒவ்வொரு ஜீவராசியும் தண்ணீரின் வடிவத்தின் மூலத்திலிருந்தே   படைக்கபட்டதாகும் என்பது பொது நியதி. “ ஒவ்வொரு உயிரினங்களையும் நாம் தண்ணீரிலிருந்துதான் படைத்தோம் . இதை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? “ என்று திருமறை குர் ஆனின் 21: 30 ஆவது வசனத்தில் அல்லாஹ்   கேட்கிறான்.     உலக வாழ்வில்  நன்மை செய்தோருக்காக மறுமையில் அவர்களுக்கு சொர்க்கத்தை வாக்களிக்கின்ற அல்லாஹ்,  அந்த சொர்க்கத்தின் இன்பங்களை வர்ணிக்கிறபோது அங்கு எப்போதும் ஆறுகளும் நீர்ச் சுனைகளும் ஓடிக் கொண்டு இருக்கும் என்று திருமறையில் பல இடங்களில் கூறுகிறான். தண்ணீரை இறைவனே முன்னிலைப் படுத்துவது இதனால் தெளிவாகிறது.

“நீரின்றி அமையாது உலகு” என்பது திருவள்ளுவரின் வாக்கு. ‘ மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும்! ‘ என்று மழையைப்  போற்றுகிறது சிலப்பதிகாரம்.  ‘ தவித்த வாய்க்குத் தண்ணீர் தராதவன்’ என்று தண்ணீர் தராதவர்களை இழிவாகப் பேசும் பண்பாடு நம்மிடையே நிலவி வருகிறது. அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு தண்டனை தரவேண்டுமானால் அவர்களைத் ‘ தண்ணீர் இல்லாத காட்டுக்கு’ப்   பணி இட மாற்றம் செய்து அனுப்பும் வழக்கம்  என்றும் இருக்கிறது. 

ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தாலும் சரி; சொந்தமாக வீடு கட்டினாலும் சரி அந்தபகுதியில் தண்ணீர் வசதி எப்படி இருக்கிறது என்ற கேள்விதான் நமக்கு எழும் முதல் கேள்வியாகும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது குடும்ப நலன்களை விசாரித்த பின், “ உங்கள் ஊர்ப்பக்கம் மழை பெய்ததா? ”  என்றும் தவறாமல்  கேட்டு விசாரித்துக் கொள்வது நமது பண்பாடு . 

ஒரு நபித் தோழர் பெருமானார் ( ஸல் ) அவர்களிடம் தனது தாய்க்கு நரகத்தின் வேதனை குறைய  நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டதற்கு அந்தத் தாயின் நினைவாக ஊருக்கு நடுவில் ஒரு கிணறு வெட்டச் சொன்னார்களாம். அந்தக் கிணற்றில் தண்ணீர் ஊறி அதை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கும்  காலம் வரை மறைந்துவிட்ட தாயாருக்கு நரக வேதனைகள் இருக்காது  என்று நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு சொற்பொழிவில் கேட்டு இருக்கிறோம். மழை பொழியும்போது இறைவனின் அருட்கொடை ( ரஹ்மத் )  இறங்கிக் கொண்டு இருக்கிறது என்று நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில் புனித நகரமான  மெக்கா பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டதாகும். இந்த அற்புதங்களில் முக்கியமான அற்புதம் புனித மெக்காவில் இருக்கும் ஜம்ஜம் கிணறாகும். ஒரு வறண்ட  பாலைவனத்தில்,  வற்றாத நீரூற்றை தனது அருளால் உருவாக்கிய அல்லாஹ்,  உலகெங்கிலுமிருந்து தன்னை நாடி வணங்க  வருபவர்களுக்கு தாகம் தணிக்கும் தன்மையை மெக்காவுக்கு வழங்கி இருக்கிறான்.

தானங்களில் சிறந்த தானம் தண்ணீர்தானம்தான் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். பெருமானார் ( ஸல் ) அவர்களின் நபி மொழித் தொகுப்பான புகாரியில் 2348 ஆம் ஹதீஸில் , “ மூன்று பேர்களை இறைவன் மறுமையில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். அவர்களில் முதலாமவன் தனது தேவைக்கு எஞ்சிய தண்ணீரை வழிப் போக்கர்கள் பயன்படுத்துவதை தடுத்தவன் “ என்று கூறப்பட்டு இருக்கிறது.  இதனால்தான் கோடை காலங்களில் தர்மஸ்தாபனங்கள் மூலமாக நாடெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் வைக்கப்படுகின்றன.  இப்படி தண்ணீரின் பெருமையை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு பெருமைக்குரிய தண்ணீர்,  நம்மைத் தேடி வரும்போது நாம் அந்தத் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறோம் – எவ்வாறு அந்தத் தண்ணீரை சேமிக்கிறோம்- எவ்வாறு அதற்கு மரியாதை தருகிறோம்; தரலாம்  என்பதை அலசுவதே இவ்வார வெள்ளிக் கிழமையின் தலையங்கக்  கட்டுரையின்  கருவாகும்.

பல வருடங்களாக நமது பகுதிகளில் மழை பொய்த்து, குளங்கள்,  ஏரிகள் முதலிய நீர் நிலைகள் வற்றி வறண்டு போனதைத் தொடர்ந்து நிலத்தடி நீரும் அதள பாதாளத்துக்கு இறங்கிய பிறகே நமக்கு நடை முறையில் தண்ணீரின் அருமை தெரிந்தது. இல்லாவிட்டால் ‘தண்ணீரைப் போல செலவழிப்பான்’ என்ற  ஊதாரித்தனத்துக்கு உதாரணமாக தண்ணீரைக் காட்ட வேண்டிய அவல நிலையில்தான் நாம் தண்ணீரை அலட்சியபப்டுத்திக் கொண்டு இருந்தோம்.

மனிதன் பல அறிவியல் சாதனைகளை இறைவன் தனக்கு வழங்கியுள்ள அறிவால் உருவாக்குகிறான். ஆனாலும் இறைவன் சிலவற்றைத் தனது கட்டுப் பாட்டிலேயேதான் வைத்திருக்கிறான். இப்படி இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலவற்றில் தண்ணீரும் ஒன்று. எவ்வளவுதான் மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் செயற்கை மழையை வரவழைத்தாலும் அவையெல்லாம் உலகத்தின் தண்ணீரின் தேவைக்கு ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’  என்கிற நிலைமையிலேதான் இருக்கின்றன. இறைவன் தனது அருளால் வழங்கும் மழைக்கு எதுவும் ஈடாகாது. 

தண்ணீருக்கு  இவ்வளவுத் தட்டுப்பாடு ஏன்? ஒரு புறம் மக்கள் தொகை கூடிக் கண்டே போகிறது. மறுபுறம் இயற்கைவளம் குறைந்துகொண்டே போகிறது. மழைக்கும் அந்த மழை தருகிற தண்ணீருக்கும் உரிய மரியாதையை தருவதற்கு மனித இனம் தவறுகிறது. மழை பொழிவதற்கு துணைநிற்கும் மரங்கள் வெட்டப்பட்டு அங்கெல்லாம் வீட்டுமனைகள் விற்பனையாகின்றன; கான்கிரீட் கட்டிடங்களும் காட்டுக் கருவைச் செடிகளும் புவியை வெப்பமயமாக்குகின்றன. மனிதனின்  சுயநல நடவடிக்கைகள் இயற்கையை சுரண்டுவதால் இறைவனின் கோபம் மழையைத் தடுத்து நிறுத்துகிறது. 

எடுத்துக் காட்டாக, தண்ணீரில் சிறுநீர் கழிப்பது இறைவனால் தடுக்கப்பட்ட ஹராமான செயல் என்று மார்க்கம் எச்சரிக்கிறது .  ஆனால் நம்மில் பல வீடுகளின் சாக்கடை நீரை மட்டுமல்ல, கழிவறைக் குழாய்களைக் கூட   ஆறு , ஏரி மற்றும் குளங்களில் பாயவிடுகிற பாவச்செயலை செய்வதை இறைவனால் எப்படி மன்னிக்க முடியும்? எனவே இந்த உலகிலேயே மழையைக் குறைத்து மக்களை தவிக்கவிடும் தண்டனையை இறைவன் அளிக்கிறான் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  பாவிகள்  மிகுந்த பகுதிகளில் மழை குறைவாகப் பெய்யும் என்பதும் உலகம் உணர்ந்து கொண்ட உண்மை. இதனால்தான் ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை ‘ என்ற சொற்றொடரும் நம்மிடையே உலவுகிறது.

சில ஊர்களில் வீடுகளுக்கு கொடுக்கும் வாடகையைவிட தண்ணீருக்கு ஆகும் செலவு அதிகமாக அதிகமாக இருக்கிறது. ஒரு எளிய குடும்பத்தில் குடிதண்ணீருக்காக அவர்கள் செய்யும் செலவு அவர்களின் வருமானத்தை உறிஞ்சி அவர்களை கடன்காரர்களாக ஆக்கிட பெரும்பங்கு வகிக்கிறது. கிணற்றுப் பாசனங்கள் மூலம் நீர் பெற்றுக் கொண்டிருந்த ஊர்களிலெல்லாம் கிணறுகளில் நீர் வறண்டு போய் அவை பாழடைந்து கிடக்கின்றன. இதையே ஒரு கவிஞர்

“இன்றைய கிணறுகள்
வறண்டு மரித்துப்போன
நிலத்துக்கு நாங்கள் வைத்துள்ள
மலர் வளையங்கள் ! “


என்று குறிப்பிடுகிறார்.  இன்னொரு உலகப் போர் ஏற்பட்டால் அந்தப்போர் தண்ணீருக்காகவே இருக்குமென்று கூறப்படுகிறது. 

மழை பொய்த்துப் போகாமல்  பெய்விக்கவும் நிலத்தடி நீரை வளப்படுத்தி மேம்படுத்தவும்  மழைக்கும் நீருக்கும் நன்றி செலுத்தவும் மனித இனம் செய்ய வேண்டியவைகள் யாவை?

முக்கியமாக மரங்களை வெட்டக் கூடாது. மேலும் மேலும் மரங்களை வளர்க்க வேண்டும். கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலை அரசிகளின் கழுத்துக்களில் இருக்கும் மரம் என்ற மாங்கல்யம் நகரமயமாக்கல் என்ற சங்கிலி பறிக்கும் வழிப்பறித்திருடனால் திருடப்படும் காரணமாக,  அங்கெல்லாம் கூட குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்கிற செய்தி மனித இனத்தை அதிர்ச்சி அடைய வைக்கும் செய்தியாகும்.

இஸ்லாம் மரம் வளர்ப்பதை ஊக்கபடுத்துகிறது. “ ஒரு முஸ்லிமால் நடப்பட்ட மரத்திலிருந்து உண்ணப்பட்டதும் அதிலிருந்து திருடப்பட்டதும் அதிலிருந்து வனவிலங்குகள் சாப்பிட்டதும் அவருக்கு நன்மையைத் தரும்” என்று    பெருமானார்        ( ஸல்) அவர்கள் நவின்றதாக, ஹஜரத் ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரஹ் ) அவர்கள் அறிவிக்கிறார்கள் . (ஸஹீஹ் முஸ்லிம் 978) .

தமிழகத்தில் சேலம், தருமபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை போன்ற பெருநகரங்கள் குடிநீருக்காக காவேரி ஆற்றையும், கோவை, திருப்பூர் நகரங்கள் பவானி, சிறுவாணி ஆறுகளையும், மதுரை வைகையையும், நெல்லை தாமிரபரணியையும் நம்பியுள்ளனர். காட்டுத் திருடர்களால் திருடப்பட்டதுபோக இன்னும் மிச்சமிருக்கும் மரக்காடுகள்தான் இந்த நதிகள் பாயும் பகுதிகளில் மழையைப் பொழிந்து  இப்பகுதி மக்களை வாழ வைக்கின்றன. வேலூர், திருவண்ணாமலை போன்ற  மாவட்டங்களில் பாலாறு பாழாறாகிப் போய் பல ஆண்டுகளாகிவிட்டன. அங்கெல்லாம் பெரும்பாலும் நிலத்தடி நீரையே நம்பி வாழவேண்டி இருக்கிறது.

நிலத்தடி நீர் வளம்  இயற்கையாக,  இயற்கையாலேயே   புதுப்பிக்கப்படும் வளம் ஆகும்.  நிலத்தடி நீர் படிவங்களில் உள்ள  நிலத்தடி நீருடன் மழைநீரை செலுத்தினால் அதை  வங்கியில் செலுத்தப்படும்  வளரும் மாதச் சேமிப்புக்கு ஒப்பிடலாம். 

மழைக்காலங்களில்  பெய்யும் மழையின் ஒரு பகுதி நிலத்தடி நீர் படிவங்களில்  சென்று சேகரமாகிறது. அந்தச் சேகரத்திலிருந்து நாம் ஆண்டுதோறும் நிலத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் நீரின் அளவு ஆண்டுதோறும் மழை கொடுக்கும் நீரின் அளவைவிடக் குறைவாக இருந்தால் சேகரம் வற்றாது. பருவமழை தவறி, வறட்சி ஏற்படும் ஆண்டுகளில் ஓரளவு சேகரிப்பிலிருந்து எடுக்கலாம். அடுத்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை பெய்தால், இந்தக் குறைவு நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆனால், தொடர்ந்து சேகரத்திலிருந்து அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும். இப்படி முதலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் பொழியும் மழை நீரை வீணாக்காமல் நிலத்தடியில் சேமிக்க வேண்டும்.

மழை நீரை நிலத்தடியில் சேமிக்க வேண்டுமானால் அதற்காக இரண்டுவிதங்களில் செயல்படலாம். ஒன்று  மழை நீரை நிலத்தடி நீர்ப் படிகங்களோடு சென்று அடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்துக்காக சேமித்துவைப்பது. இதற்காக வல்லுனர்கள் சில முறைகளை வழிகாட்டி இருக்கிறார்கள். வீடுகளில் டிஷ் ஆண்டெனா வைக்கிறோம்; சோலார்  மின்சாரம் தயாரிக்கும் அமைப்பைப் பொருத்துகிறோம்; பரவலாக குளிர்சாதனம் வந்துவிட்டது; ஏன் சில வீடுகளில் உடற்பயிற்சி சாதனங்கள் கூட வந்துவிட்டன.  இந்த சூழ்நிலையில் , மழைநீரைக் கொண்டு நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் எளிய முறைகளையும் அமைத்து  நாம் கையாள்வதும்  இன்றைய சூழலில் காலத்தின் கட்டாயமாகும். 

மழை நீர்  நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய சுமார்  மூன்றடி விட்டமும் எட்டு முதல் பத்து அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கல் ஜல்லிகளை சுமார்  ஆறு அடி முதல் எட்டு அடிக்கு நிரப்பி அதன்மேல் ஒன்று முதல் இரண்டு அடி வரை ஆற்று மணலை இட்டு நிரப்பி, நமது வீட்டுக் கூரையிலிருந்து வரும் மழை நீர்க் குழாயை இந்த அமைப்பினுள் நீர் புகுமளவுக்கு விட்டுவிட வேண்டும். இந்த அமைப்பினால் நமது கூரையிலிருந்து வீணாக கொட்டும் மழைநீர் நிலத்தடி நீருடன் சென்று சேர்ந்து அதன் வளத்தை உயர்வின் அளவை  உயர்த்த உதவும்.  மழை இல்லாத காலங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போகாமலிருக்க இம்முறை உதவும்.

வருடாவருடம் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலந்து வீணாவதாகவும்  35% வெயிலில் ஆவியாவதாகவும், 14%  மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் வல்லுனர்களால் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில்,  தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் நெருக்கமாக  கட்டப்படுவதாலும்  திறந்தவெளிகளை சிமெண்ட் தளங்கள் அமைத்தும்,  டைல்ஸ் போட்டு ஒட்டியும் தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால்,   பெய்யும் மழை நீரில்  5% அளவிற்கு கூட நிலத்தால்  உறிஞ்சப்படுவதில்லை. இந்த சதவிகிதத்தை அதிகரிக்கவே மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும். மக்களும் இதன் அவசியத்தை  உணரவேண்டும்.

நமது ஊர் போன்ற  கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைவது ஒருபக்கமும், மறுபக்கம்  ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, அருகிலுள்ள  கடல் நீர்,  நிலத்தடி நீரோடு  கலந்து பயன்படுத்தத் தகுதி இல்லாத  அளவுக்கு உப்பு கலந்த நீராக  மாறி விடுகிறது. இந்தக் குறைபாட்டை நாம்  மழை நீர் சேகரிப்பு முறைகளை அமைப்பதன்  மூலம் தவிர்க்கலாம்.

நம்முடைய ஊர்ப்பகுதி மற்றும்  மாநில  மக்கள் தங்களின்  அன்றாடத்   தேவைகளுக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.. சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு தொடர்ந்து  கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து,  கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான  காரணங்கள். யாவை என்றால் அந்தக் குறிப்பிட்ட ஆண்டுகளில்  சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டதும்  அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியாகப் பெய்யும் மழையைவிடக்  குறைவாகவே இருந்ததுமாகும்.  ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை என்ற  கருத்து உணரப்பட்டது. 

பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு  வடிவங்களில் அல்லது நிலைகளில்  நமக்கு கிடைக்கிறது.

இவை கடினமான  பாறைக்கு மேலே உள்ள மணற்பாங்கான இடங்களில் உள்ள  நீராகவும், கடினமான  பாறைக்குள் காணப்படும் நீர் படிவங்களாகவும்  இரு வகைகளாக உள்ளன.  இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம்.

மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும்,  தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னை மற்றும் பல வட மாவட்டங்களில்  ஒவ்வொரு பகுதியிலும் கடினமான  பாறை வித்தியாசமான ஆழங்களில்  அமைந்துள்ளன. இந்த வித்தியாசம் முப்பது அடி முதல் முன்னூறு அடிகள்வரை வித்தியாசப்படுகின்றன. அதேபோல கிடைக்கும் நீரின் சுவையும் தன்மையும் கூட வித்தியாசப்படுகின்றன.

 மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.

மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள்,  மழை நீரை அதிக அளவில் பூமிக்குள்  செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது என்பது ஒரு நிருபிக்கப்பட்ட உண்மை.  ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

 தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், அங்கு  ஒரு கிணறு இருந்தால், அதைப் பேணி  தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ அவற்றை நிரந்தரமாக மூடிவிட நினைப்பது மற்றும் குப்பைகளைக் கொண்டுபோய் கிணறுகளில் கொட்டுவது ஆகியவை  முற்றிலும் தவறான செயல். இன்று நமது பலவீடுகளில் கிணறுகள் காணாமல் போய்விட்டன. கிணறுகளைத் தூர்த்து அதன்மேல் இளைய மகளுக்கு வீடுகட்டிக் கொடுத்துவிடுகிறோம். 

அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து,  இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.  ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சுவை கூட்டி  சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் ,  ஆழ்துளை கிணற்றை கடினப்  பாறையின் நிலை வரை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். முதலில் மேல் நிலத்தடி நீரை மழை முடிந்த மாதங்களில் எடுத்து உபயோகித்து,  தீர்ந்த பின், அதில் பற்றாக்குறையை உணரும்போது குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வல்லுனர்கள் ஒரு ஆலோசனையைத் தருகிறார்கள்.

அதன்படி, . ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடினமான பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடும். அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் துளைகளுள்ள  குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை என்று  வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

மழைத்துளி! உயிர்த்துளி ! மரம் வளர்ப்பது மாண்புடையது ! மழை நீர் சேகரிப்பு வாழ்வின் இதர ஆதாரங்களை சேகரிப்பது போல் இன்றியமையாதது. மழை பெய்கின்ற காலங்களில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழை பெய்கின்ற காலங்களில் வீட்டுக்குள் அடங்கி சுடச்சுடக்  கடலை வறுத்துத் தின்றுகொண்டு , மரவள்ளிக் கிழங்கில் மஞ்சள் போட்டு தாளித்துத் தின்றுவிட்டு தேத்தண்ணீர் குடித்துக் கொண்டு கிடந்துவிட்டு கோடை காலங்களில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் நிலைகளை மாற்ற இனிமேல் புதிதாக கட்டப்படும் வீடுகளிலும் இதற்கு முன்பு இருக்கும் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் கட்டப்படவேண்டும். இந்த நடவடிக்கைகள் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள அவசியம்! கட்டாயம் !

Thanks to: AdiraiNews

No comments: