அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Monday, October 13, 2014

மரங்களின் பயன்கள்

மரம் நமக்கு என்ன தருகிறது?

• மலர்கள், காய், கனிகள் தருகிறது

• நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது

• காற்றை சுத்தப்படுத்துகிறது

• நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

• கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.

• மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.

• மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.

• காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

• ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.

• ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.

• ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.

• ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.

• ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.

மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அந்த செயற்கை பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது
ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.



மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:

மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.
புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

காட்டுயிர்களை ஏன் பாதுகாக்க வேண்டும்? யாரிடமிருந்து பாதுகாக்க வேண்டும்?

வனவிலங்குகள் என்றவுடன் எங்கோ தொலைவில் வாழும் பெரிய விலங்குகள் என்ற சித்திரமே நமது மனதில் தோன்றுகிறது. வனவிலங்கு என்று சாதாரணமாக குறிப்பிடுவது பெரிய பாலு£ட்டிகளை மட்டுமே. ஆனால் வனவிலங்குகள் (காட்டுயிர்கள்) என்பது இன்னும் விரிவான பொருளில் குறிப்பிடப்படுகிறது. ஐந்து பேரினங்களில் உள்ள உயிரினங்களை அடக்கியது. தாவரங்கள், விலங்குகளைத் தவிர, மூன்று பேரினங்கள் உள்ளன என்று நவீன இயற்கையியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். பூஞ்சைகள், நுண்ணுயிர் நீர்த்தாவரங்கள்-புரோடோசோவாகள்,ஒரு செல் பாக்டீரியாகள் என்ற அந்த மூன்றும் காட்டுயிர்கள்தான். அப்படியானால் பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் என அனைத்து வகைகளும் காட்டுயிர்களே. அனைத்து உயிரினங்களும் காட்டுயிர்களில் அடக்கம் என்பதால், நமது வீட்டிலுள்ள சிலந்திகள் தொடங்கி பார்க்கும் இடமெல்லாம் அவை வாழ்கின்றன.

அப்படியானால் காட்டுயிர்களுக்கு என்ன நடக்கிறது? அவற்றை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் என்ன?


இதைப் புரிந்து கொள்ள நாம் பின்னோக்கிச் செல்ல வேண்டும். பூமியில் மனிதர்கள் தோன்றிய காலத்துக்குச் செல்வோம். அங்கிருந்து அவர்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் என்ன செய்தார்கள் என்பதை பின்தொடருவோம். பூமியில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிர்கள் தோன்றியதாகத் தெரிகிறது.

மனிதர்கள் பழங்களை சேகரித்து, விலங்குகளை வேட்டையாடி உணவு தேடுபவர்களாக அறிமுகமானார்கள். அவர்கள் காலடி எடுத்து வைத்த உலகம் இயற்கையியலாளர்களின் சொர்க்கமாக, காட்டுயிர்கள் மண்டிக்கிடந்தது என்று புதைபடிம ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

மனிதர்களின் அறிவுத் திறன் வளர்ந்தது. அவர்கள் வெற்றிகரமான உயிரினமாக மாறினார்கள். அவர்களது எதிரிகளாக இருந்த காட்டுயிர்களை வேட்டையாட ஆரம்பித்தனர். அவர்களது எண்ணிக்கை கூடியது, பரவினார்கள். அதேநேரம் செயல்பாடுகளின் வரம்பு விரிவடைந்து கொண்டே போனது.


நகரங்கள், பட்டணங்கள், அணைகள், கால்வாய்கள், சாலைகள், வயல்கள் உருவாக்கப்பட்டன. மனிதர்கள் காடுகளை அழித்தனர், ஏரிகளையும், குளங்களையும் நிரப்பினர். பூச்சிகளை விரட்டுவதற்காக பயிர்களில் நச்சை கவிழ்த்தனர். அவர்கள் அதிகம் பயணம் செய்தார்கள். அப்படிச் சென்றவோது வைரஸ்கள் மற்றும் ஆபத்தான பாக்டீரியாகளை சுமந்து சென்றனர். அவற்றை எல்லா இடங்களிலும் பரப்பினார்கள். வாகனங்கள், விண்கலங்கள், தொழிற்சாலைகள், அணுவெடிப்பு சோதனைகள் மூலம் நீர், நிலம், காற்றில் ஆபத்தான வேதிப்பொருள்களைக் கலந்தார்கள். இயற்கை உலகம் சுருங்க ஆரம்பித்தது, பின்வாங்கியது.

சுருங்கச் சொன்னால், காட்டுயிர்கள் மீது மனிதர்கள் ஏற்படுத்திய பாதிப்பு பயங்கரமாக இருந்தது. நமது சமீபகால நினைவலைகளை ஆராய்ந்தால்கூட, காட்டுயிர்கள் அதிகம் இருந்ததை அறிய முடிகிறது. கடந்த தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையினரிடம் கேட்டால் காட்டுயிர்கள் பற்றிய அவர்கள் கூறும் விவரணைகள் நம்பமுடியாததாக இருக்கின்றன.

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள அதிக கற்பனை தேவையில்லை. தற்போது ஆங்காங்கு ஒட்டிக்கொண்டுள்ள இயற்கை வடிவமைப்புகள் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். காட்டுயிர்கள் ஒவ்வொன்றாக அழிவை நோக்கி பயணிக்கத் தொடங்கும். அவற்றில் பல மனிதர்களால் பார்க்கப்படாதவையாகவும், வகை பிரிக்கப்படாதவையாகவும் இருக்கும்.

உலகம் முழுவதும் மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள் மட்டுமே இருப்பார்கள். நாம் எங்கு சென்றாலும் வயல்கள், சாலைகள், கால்வாய்கள், தொழிற்சாலைகள், அணைகள்... நிரம்பியிருக்கும். இது மிகவும் மோசமான நிலைமை. நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் காட்டுயிர்கள் மறைந்துவிடும். நாம் இந்த பூமியின் குழந்தைகள், ஆனால் ஒரு முக்கிய புள்ளியில், நாம் பூமியின் மேலாளர்கள் ஆகிவிட்டோம்.

நாம் நீண்டகாலமாக செயற்கையான மனித உலகத்துக்குள் வாழ்ந்துவிட்டதுதான், எல்லாமே வேறு திசையில் செல்வதற்குக் காரணம். இப்பொழுது எல்லாமே நம்முடையது என்று நினைத்துக் கொள்கிறோம். நாம் நாகரிகமடைந்தபோது, ஏதோ ஒரு புள்ளியில், இயற்கையிடமிருந்து விலகி நாம் தனித்து வளர்ந்துவிட்டோம். பழசை மறந்துவிட்டோம். தங்களைச் சுற்றியுள்ள காட்டுயிர்கள் பற்றி குழந்தைகள் அறியாமல் இருக்கிறார்கள்.

அதேநேரம், இயற்கையின் படைப்புகளை நாம் இன்னமும் குறிப்பிட்ட அளவு போற்றித்தான் வருகிறோம். விலங்கு காட்சியகம் அல்லது காட்டுயிர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து குழந்தைகள், பெரியவர்கள் பரவசம் அடைகிறோம். காட்டுயிர்கள் தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆர்வத்தை அதிகரிக்கும், காட்டுயிர்களை பாதுகாப்புக்கு அதிக ஆதரவு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

காட்டுயிர்களை பாதுகாக்க நாம் எதுவும் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை, சூழலியல் காரணங்கள் வலியுறுத்துகின்றன.

வாழும் உயிரின வகைகள் மிக அதிக அளவில் உள்ளன, அவை சிக்கலான வகையில் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. அதிக வகைகள் அழிந்தால் என்ன நடக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் நாமும் இறந்துவிடுவோம். ஏனென்றால் நாம் மட்டும் தனியாக வாழ முடியாது.

காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று முன்மொழியும் மற்றொரு விவாதம், பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏனென்றால், காடுகளில் உள்ள பல உயிர் காக்கும் மருந்துகள் நமக்குக் கிடைக்காமலே போகக் கூடும். அந்தத் தாவரங்கள் அழியும் நிலையில் உள்ளன. அத்தகைய காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன.

காட்டுயிர்களை காக்க வலியுறுத்தும் மேற்குறிப்பிட்ட காரணங்கள் பெரிதும் மனிதர்களை மையமிட்டவை. நாம் நம் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும், நமது நலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியில்லாமல், செயற்கை வேதிப்பொருள்கள், பயிர்கள், பண்ணை விலங்குகள் மூலம் நாம் வாழ முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

அதற்குப் பிறகும் நாம் காட்டுயிர்களை காக்க வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் நாம் வைத்துள்ள மதிப்பீடுகள் அப்படிப்பட்டவை. நாம் வைத்துள்ள மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே எது சரி, எது சரியில்லை என்பதை தீர்மானிக்கிறோம். பூமியில் உயிரினம் தோன்றியதை சுருக்கமாக ஓராண்டு என்று வைத்துக் கொண்டால், நாகரிகமடைந்த மனிதனின் மொத்த வாழ்க்கையும் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அப்படிப் பார்த்தால், புதிதாக வந்த ஒருவர், உலகை ஒட்டுமொத்தமாக அழிப்பதும், ஆக்கிரமிப்பதும் மனித மதிப்பீடுகளின்படி சரியல்லவே.

இவற்றைத் தாண்டி இயற்கை, காட்டுயிர்களை நேரில் கண்டு உணர்ந்தவர்கள், ஆர்வம் கொண்டவர்களின் பிணைப்பு வலுவானது, கட்டாயம் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவது.

நன்றியுடன்
நண்பர் செந்தில் குமார் Nsk அவர்களின் முகநூல் பக்கங்களிலிருந்து...

No comments: