அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58
Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Tuesday, April 7, 2015

இவரை நாமும் அறியவேண்டும்

ஏற்கனவே நமது தளத்தில் இவரை பற்றி 'மக்களின் பாரத ரத்னா' என்ற பெயரில் வெளியிடப்பட்ட பதிவு.
பொதுவாக தனி ஒரு மனிதனால் எந்தவொரு செயலிலும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாது, ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி தனி ஒரு மனிதன் நினைத்து உத்வேகத்தால் செயல்பட்டால், எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்த ஒரு சாமானியன், குக்கிராமவாசி இன்று மத்திய அரசாங்கத்தின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெறப்போகிறார். இந்த ஆண்டு இந்த பத்ம விருது பெற்றவர்களில் பலர் நிச்சயமாக அவர்களின் சேவைக்காக போற்றப்பட வேண்டியவர்கள். அதேநேரத்தில் சாமானியர்களும் அவர்களின் உன்னத சேவையால் இந்த உயரிய விருதை பெறமுடியும் என்ற வகையில், எங்கோ நாட்டின் மூலையில் உள்ள ஒரு சமூகசேவகரின் செயலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் அன் சங் ஹீரோ என்பார்கள். அதாவது சிலரின் உயர்ந்த சேவைகள் உலகுக்கே தெரியாதவகையில், அந்த மாமனிதர்களின் தியாகங்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கும். அப்படி ஒருவரை தேடிப்பிடித்து, இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.

பத்மஸ்ரீ பட்டியலில் 36–வது எண்ணில் இருந்த காட்சிக்கு எளியவரான ஒரு பாமர மனிதர் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதியிடமிருந்து பத்மஸ்ரீ பட்டத்தை பெறப்போகிறார். யார் இந்த அருமனிதர்? என்பதை நாடு அறிந்தால்தான் அவரை மற்றவர்களும் பின்பற்ற முடியும். அவர் பெயர் ஜாதவ் மோலை பெயங். இந்தியாவின் வனமனிதர் என்று அழைக்கப்படுபவர். அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாத் மாவட்டத்தைச் சேர்ந்த மோலை கதோனி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். 1979–ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெருவெள்ளம் அந்த கிராமத்தையும், அதன்பக்கத்தில் உள்ள ஊர்களையும் அழித்துவிட்டது. அந்தநேரத்தில் அரசாங்கம் அந்த ஊரின் அருகில் உள்ள சந்த்பார் என்ற தரிசு பகுதியில் மரம் நடும் பணிகளில் பெயங்கையும் மற்றும் சில தொழிலாளர்களையும் ஈடுபடுத்தியது. மற்றவர்களெல்லாம் ஏதோ வேலை செய்தோம், கூலி கிடைத்தது என்று போய்விட்ட நிலையில், ஜாதவ் பெயங் மட்டும் அந்த பகுதியில் உள்ள ஏறத்தாழ 1,400 ஏக்கர் தரிசு நிலத்தையும் அடர்ந்த காடாக ஆக்குவேன் என்று உறுதிபூண்டு, முதலில் மூங்கில் மரக்கன்றுகளை நடத்தொடங்கி, தொடர்ந்து அனைத்து மரக்கன்றுகளையும் தனி ஆளாக நடத்தொடங்கினார். தன் பிழைப்புக்காக பசுமாடுகள், எருமைகளை வளர்த்து, அதன் பாலை வைத்து பிழைப்பு நடத்துகிறார். ஏழ்மை அவர் லட்சியத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. 1979–ம் ஆண்டு தொடங்கிய அவரது முயற்சியால், இன்று அந்தப்பகுதி அடர்ந்த காடாகிவிட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களைக்கொண்ட இந்த காடு இப்போது காண்டாமிருகங்கள், சிறுத்தைகள், யானைகள், முயல்கள், குரங்குகள், பறவைகள், பாம்புகள், கழுகுகள், மான்கள், காட்டுப்பன்றிகள், மாடுகள் என ஏராளமான மிருகங்கள், பறவைகளுக்கு வாழ்விடமாக ஆகிவிட்டது.

கிராமங்களில் நல்ல மாடு உள்ளூரில் விலை போகாதுஎன்பார்கள். அதுபோல, இவரது அரும்பெரும் முயற்சியைக்கண்டு முதலில் 2012–ம் ஆண்டு பாரீசில் நடந்த உலக வெப்பமயமாதல் மாநாட்டில்தான் அவரை அழைத்து கவுரவப்படுத்தினார்கள். அதன்பிறகுதான் இவரை இந்தியாவில் அடையாளம் கண்டுகொண்டார்கள். தனி ஒரு மனிதன் என்றாலும், அவன் நினைத்தால் எந்த லட்சியத்தையும் நிறைவேற்றமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் பெயங் முயற்சியையும், வாழ்க்கையையும் இந்தியா முழுவதும் அறியச்செய்து, எல்லா இடங்களிலும் இதுபோல காடுகளை மக்கள் உருவாக்க மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாமே!
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Thanks to: Adirai News