அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58
Showing posts with label மாற்றுத் திறனாளிகள். Show all posts
Showing posts with label மாற்றுத் திறனாளிகள். Show all posts

Thursday, April 23, 2015

யார் மாற்றுத் திறனாளிகள்? வியக்க வைக்கும் இரு ஒருவர்!


ஈருடல் ஓருயிர், நான் பாதி நீ பாதி, என்னில் உன்னை காண்கிறேன் என்பன போன்ற வசனங்களையும் கவிதைகளையும் கேட்கும் போது வார்த்தை ஜாலங்களின் ஈர்ப்பு கற்பனை உலகில் மிதந்த செய்திருக்கும் ஆனால் கற்பனைக்கு மேல் நிஜமாய் வாழும் இந்த இரு மனிதர்களை பற்றி அறிந்தால் உங்கள் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் இனிய அதிர்வுகளை உங்கள் கண்கள் தாமே முன்வந்து சாட்சி சொல்லும்.

'அவருக்கு நான் கைகள், எனக்கு அவர் கண்கள்' என சிலாகித்து சொன்ன இரு அசாத்திய சாதனை மனிதர்களை பற்றி கல்ஃப் நியூஸ் பத்திரிக்கையில் வாசித்தவுடன் மேலும் அறிந்து கொள்ள இணைய பக்கங்கள் பல உதவின, அதன் நீட்சியே இச்சிறு தொகுப்பு.

தென்கிழக்கு சீனா, ஹெபய் மாகாணம், ஜின்ஜியாங் பிரதேசத்தின் 'ஏலி' என்ற குக்கிராமத்தில் பிறந்து இன்று உலக மாந்தர்களால் நேசிக்கப்படும் நண்பர்கள் ஜியா ஹய்ஸியா (வயது 53) மற்றும் ஜியா வென்கி (வயது 54). இவர்களில் ஹய்ஸியா பிறவியிலேயே கண்புரை நோயால் ஒரு கண்ணில் பார்வையை இழந்தவர் மற்றொரு கண்ணின் பார்வையும் 2000 ஆம் ஆண்டில் தொழிற்சாலையில் பணியாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் பறிபோனது. வென்கி 3 வயது பருவத்திலேயே உயர்அழுத்த மின்சாரம் தாக்கி தனது இரு கைகளையும் தோள் புஜங்கள் வரை முழுமையாக இழந்து வளர்ந்தவர், இவ்விருவரும் பள்ளிப்பருவம் முதல் நண்பர்கள்.

இவ்விருவராலும் என்ன செய்துவிட முடியும்? என்ற கேள்விக்குறியை ஏன் செய்ய முடியாது என்ற ஆச்சரியக்குறியாக மாற்றி செயல் இது தான். ஹய்ஸியாவுக்கு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டபொழுது உடல்நலமில்லா மனைவியும் நான்கு வயது மகனுமிருந்தனர். இவர்களையும் காப்பற்ற வேண்டும் தானும் பிறருக்கு சுமையாகவும் அமைந்துவிடக்கூடாது என்ற உந்துதலால் நண்பர்கள் இருவரும் தங்களின் வாரிசுகளின் எதிர்கால நலன், கிராமத்தின் நலன், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் உழைப்புக்காக பிராந்திய அரசிடமிருந்து கிடைக்கும் சொற்ப ஊக்கத்தொகை ஆகியவற்றை கருதிற்கொண்டு கூட்டாக ஒரு முடிவெடுக்கின்றனர்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் தங்களின் பிராந்திய அரசிடமிருந்து சுமார் 8 ஏக்கர் தரிசு நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்றனர். அதில் இன்று வரை சுமார் 3 ஏக்கர் நிலத்தில் 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து தங்கள் பகுதியை பசும்சோலையாக மாற்றியதுடன், தங்கள் கிராமத்தை வெள்ளப் பெருக்கிலிருந்தும் காத்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி வாழ மறைமுகமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவியுள்ளனர்.

தினமும் காலை 7 மணிக்கு தங்களின் அன்றாட பணியை கைகோடாறி, சிறிய கடப்பரையை சுமந்து கொண்டு துவங்கும் இவர்களின் செயல் ஆரம்பத்தில் வழமைபோல் சக கிராமத்தினரின் ஏளனத்திலிருந்து தப்பவில்லை ஆனால் இன்று அதே கிராமத்தினர் வியந்து தாமாக உதவி செய்கின்றனர், இதுவே அவர்கள் 'சீன ரத்னா'வை பெற்றதற்கு சமன். 

தினமும் சிறு தொகைக்கு வாங்கப்படும் மரக்கன்றுகளையும், பெரிய மரங்களிலிருந்து கழிக்கப்படும் கிளைகளையும் மீண்டும் நடுகின்றனர். அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர் எல்லாம் ஒரு நேர்த்தியான திட்டமிடல்களின் அடிப்படையில் மிகவும் சீராக அவர்களின் சக்திக்கு உட்பட்டு நடைபெறுகின்றன. இருவர் ஒருவராய் மாறி சுற்றுச்சூழலுக்கு தொண்டாற்றும் நண்பர்களின் உழைப்பு இன்று உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

தற்போது இவர்களுடைய சாதனை உலக மீடியாக்களின் வெளிச்சத்தில் பட்டு பாரெங்குமிருந்து பாராட்டுக்களும் உதவிகளும் குவிந்தவண்ணமுள்ளன. மேலும் ஹய்ஸியாவுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்திடவும் மருத்துவமனை ஒன்று முன்வந்துள்ளது, கண்தானம் கிடைப்பதற்கு அவருடைய முறைக்காக காத்திருக்கிறார் ஹய்ஸியா.

வார்த்தைகளில் வடிப்பதைவிட புகைப்படங்களை பார்த்துவிட்டு உரக்கச் சொல்லுங்கள் உண்மையில் மாற்றுத் திறனாளிகள் அவர்களா? அல்லது உடல் குறையின்றி எல்லாமிருந்தும் காடு, கரை, வயல், வனங்களை (வளர்ச்சியின் பெயராலும்) அழித்தொழிப்பவர்களா?

நல்லோர் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும் வாழ்த்துவோம்! வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடன் கரம் கோர்ப்போம்!! கை தூக்கி விடுவோம்!!!

தொகுப்பு:
அதிரைஅமீன்