அதிரை பசுமை

அதிரை பசுமை
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வறண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக. (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது; ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது; நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம். ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) : 57,58

Wednesday, January 7, 2015

சொந்த பணத்தில் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் யாசின் !


உலகெங்கும் மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை சுரண்டப்பட்டு வேட்டையாடபடுகிறது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கையை நேசித்து வாழ்வின் லட்சியமாக கொண்டு இயங்கி வருகின்றனர். இவர்களை போன்றவர்களால்தான் இன்னும் இயற்கை அழிவுக்குள்ளாகாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது. வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையை சேர்ந்த வயதான ஒருவர் மரம் வளர்க்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இது வரை இவர் 1000க்கும் மேற்பட்ட மரங்களை  உருவாக்கி உள்ளார். கீழக்கரை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் யாசின்(70). இவர் பல ஆண்டுகளாக விறகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். விறகு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தாலும் பல்வேறு சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வானம் பார்த்த பூமியான பகுகளில் மரம் நடுவதில் அதிக ஈடுபாடு உடையவராக இருந்து வருகிறார்.


கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேம்பு, புங்கை, பன்னீர், வாகை சுமார் 1000க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களை சாலையோரங்களில் வளர்த்துள்ளார். தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுங்களை நட்டு பராமரிப்பு செய்து வருகிறார். இப்பகுதியில் மரங்கள் அழிக்கப்பட்டு பசுமை சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையில் இவரின் மரம் வளர்ப்பு பணி இப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது. 



இதுகுறித்து இயற்கை ஆர்வலர் யாசின் கூறியதாவது: 
விற்பனைக்கு வரும் விறகுகளை கண்டு மிகவும் மன வேதனையடைந்தேன். இதற்கு மாற்றாக நாம் ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் 10 வருடங்களுக்கு முன் மரக்கன்று நட தொடங்கினேன். பின்னர் அதுவே முழுநேர பணியாகி இப்போது நான் நட்ட கன்றுகள் 1000க்கும் மேற்பட்ட மரமாக வளர்ந்து நிற்கிறது. நாம் வாழும் காலத்தில் நாம் செய்யும் நல்ல பணிகள்தான் நம்மை நிம்மதியடைய செய்யும். பணம் தராத மன மகிழ்ச்சியை இந்த மரக்கன்று நடும் பணி தருகிறது. மனம் நிறைவாக இப்பணியை செய்து எனது வருமானத்தில் சுமார் 50 சதவீதத்தை இப்பணிகளுக்கு செலவிடுகிறேன் என்று தெரிவித்தார்.



இவரை போன்று நாமும் மரம் வளர்ப்போம்! இயற்கையை பேணி பாதுகாப்போம்!



நன்றி:தினகரன் & http://www.adirainews.net/2015/01/blog-post_77.html

No comments: